2013-12-27 16:23:08

Muzaffarnagar நிவாரண முகாம்களில் 34 சிறார் மரணம்


டிச.27,2013. வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கடந்த செப்டம்பரில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரங்களின்போது தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களுக்கென அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் குறைந்தது 34 சிறார் இறந்துள்ளனர் என்று அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இச்சிறாரில் பலர் குளிரினால் இறந்தனர் என்று ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை மறுத்துள்ள அதிகாரிகள், இச்சிறார், நிமோனியாக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் இறந்தனர் என்று கூறுகின்றனர்.
இவ்வகதிகளுக்கென அமைக்கப்பட்ட Muzaffarnagar நிவாரண முகாம்களில் 12 வயதுக்கு உட்பட்ட 34 சிறார் இறந்துள்ளதாக அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில் இடம்பெற்ற கலவரத்தில் 65 பேர் கொல்லப்பட்டனர். கடந்த பத்து ஆண்டு காலத்தில் இந்தியாவில் நடந்த மிகவும் மோசமான கலவரம் இதுதான் என்று கருதப்படுகின்றது. இந்தக் கலவரங்களில் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் முஸ்லீம்கள். மேலும், இக்கலவரத்தில் குறைந்தது 85 பேர் காயமடைந்தனர்.
ஓர் இளம்பெண் துன்புறுத்தப்பட்டதை எதிர்த்த 3 ஆண்கள் கொல்லப்பட்ட நிகழ்வே இந்தக் கலவரத்துக்குக் காரணமாகும்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.