2013-12-27 16:22:28

2013 ஆண்டுகளாக சமகாலத்து ஏரோதுகளால் இயேசு துன்புறுத்தப்பட்டு வருகிறார், முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ


டிச.27,2013. நம் ஆண்டவர் மனிதஉரு எடுத்ததன்மூலம் இவ்வுலக மற்றும் ஆன்மீகத் தாய்மையை மதித்துள்ளதோடு, மனிதரின் வாழ்வைப் புனிதப்படுத்தி, துன்பங்களிலிருந்து நாம் வெளிவரும் வழிகளையும் காட்டியுள்ளார் என்று, இஸ்தான்புல் Ecumenical முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ கூறியுள்ளார்.
தனது கிறிஸ்மஸ் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ, இயேசு தமது பிறப்பின்மூலம், இயற்கையான குடும்ப அமைப்பின் சிறப்பையும், கிறிஸ்தவக் குடும்பங்கள் சரியான வழியில் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறார் என்றும் கூறினார்.
தங்கள் பெற்றோர்களாலேயே கருவிலே கொல்லப்படும் ஆயிரக்கணக்கான சிசுக்கள் வடிவில், 2013 ஆண்டுகளாக நம் ஆண்டவர் தினமும் கொலை செய்யப்பட்டு வருகிறார் எனவும், குடும்ப நெருக்கடி, கைவிடப்படல், வறுமை ஆகியவற்றை அனுபவிக்கும் சிறார் வடிவில் கிறிஸ்து கேலிக்கு உள்ளாகி வருகிறார் எனவும் கூறினார் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ.
2013 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், சமகாலத்து ஏரோதுகளால், மனிதஉரு எடுத்த நம் ஆண்டவர் இன்றும் சிரியாவிலும், மற்றும்பிற பகுதிகளிலும் துன்புறுத்தப்பட்டு வருகிறார் என்றும், எகிப்தில் மட்டுமல்ல, லெபனன், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும்பிற பகுதிகளிலிருந்து கிறிஸ்து அகதியாக வெளியேறுகிறார் என்றும் கூறியுள்ளார் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ.
மேலும், கிறிஸ்மஸ் பெருவிழா நாளில் இளையோரிடம் பேசிய முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிகளைப் பாராட்டியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.