2013-12-26 15:39:24

புனித ஸ்தேவான் அவர்களின் கொடிய மரணத்தில் கிறிஸ்மஸ் விழாவின் ஆழமான பொருள் வெளியாகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்


டிச.26,2013. புனித ஸ்தேவான் அவர்களின் கொடிய மரணத்தில் கிறிஸ்மஸ் விழாவின் ஆழமான பொருள் வெளியாகிறது என்றும், வன்முறையை அன்பு வெல்லும், சாவை வாழ்வு வெல்லும் என்ற மையக் கருத்துக்கள் புனித ஸ்தேவான் அவர்களின் மரணத்தின் மூலம் வெளியாகிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கிறிஸ்துவின் பெயருக்காக முதன்முதல் உயிர் துறந்த புனித ஸ்தேவான் அவர்களுக்கென இவ்வியாழனன்று, கொண்டாடப்பட்ட திருநாளையொட்டி நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் மகிழ்வை எட்டு நாட்கள் கொண்டாட திருஅவை நம்மை அழைக்கிறது; புனித ஸ்தேவான் மறைசாட்சியாகக் கொலையுண்டதை, இந்த ஏட்டு நாட்களில் ஒன்றாக எண்ணிப்பார்ப்பது மகிழ்வு நாட்களுக்குப் புறம்பானது என்று எண்ணத்தோன்றுகிறது என திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
உலகெங்கும் தங்கள் கிறிஸ்துவ நம்பிக்கைக்காக துன்புறும் அனைவரையும் இத்திருநாளன்று குறிப்பாக எண்ணி செபிப்போம் என்று கூறியத் திருத்தந்தை, புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து சில மணித்துளிகள் அமைதியில் செபித்தார்.
மதச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நாடுகளில் வாழ்வோருக்கென செபிக்கும் அதே வேளையில், இந்நாடுகளில் நிலவும் சூழல் நீதியற்றச் சூழல் என்பதை எடுத்துரைக்கவும் நாம் தயங்கக்கூடாது என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
வளாகத்தில் கூடியிருந்த அனைவருக்கும், உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் தன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.