2013-12-26 15:43:11

கிறிஸ்மஸ் விழாவின் மையக்கருத்து நம் நினைவுகளில் மட்டும் இருப்பதில் பயனில்லை, நம் வாழ்வின் ஓர் அங்கமாக வேண்டும் - Seoul பேராயர்


டிச.26,2013. சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ள வறியோர், நோயுற்றோர் ஆகியோருக்காகவும், குறிப்பாக, வட கொரியாவில் வாழும் மக்களுக்காகவும் செபிக்கும்படி Seoul பேராயர் Andrew Yeom Soo-jung அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இப்புதனன்று கொண்டாடப்பட்ட கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பேராயர் Yeom Soo-jung அவர்கள், இவ்விழாவின் மையக்கருத்து நம் நினைவுகளில் மட்டும் இருப்பதில் பயனில்லை என்றும், நம் வாழ்வின் ஓர் அங்கமாக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
நுகர்வுக் கலாச்சாரம், கடவுள் மறுப்பு ஆகிய இருள் சக்திகளால் நம்மிடையே வளர்ந்துள்ள மணமுறிவுகள், தற்கொலைகள் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்க ஒளியின் இறைவன் பிறந்துள்ளார் என்று பேராயர் Yeom Soo-jung தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
"வறியோருடன், வறியோருக்கென வாழும் வறியத் திருஅவையை விரும்புகிறேன்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வெளியிட்ட Evangelii Gaudium திருத்தூது அறிவுரையில் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பேராயர் Yeom Soo-jung அவர்கள், வறுமையை உலகில் நிலைநிறுத்தும் சமுதாயக் கூறுகளைக் களைய நாம் முன்வர வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.