2013-12-26 15:29:11

கற்றனைத்தூறும்... டிசம்பர் 27, உலக வங்கியின் உதயம்


டிச.27,2013. உலக வங்கி என்பது, பொதுவாக இயங்கும் வங்கி போன்றது அல்ல, மாறாக, வளரும் நாடுகளின் முதலீட்டுத் திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஒரு பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இது, IBRD என்ற பன்னாட்டு மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி, IDA என்ற பன்னாட்டு வளர்ச்சிக் கழகம் ஆகிய இரு வளர்ச்சி நிறுவனங்களை மட்டுமே உறுப்புகளாகக் கொண்டுள்ளது. ஆயினும், உலக வங்கி, பன்னாட்டு நிதிக் கழகம் (IFC), பலதரப்பு முதலீட்டு உறுதிக்காப்பு நிறுவனம்(MIGA), பன்னாட்டு முதலீட்டு பிரச்சனைகள் தீர்வு மையம் (ICSID) ஆகிய மூன்று பன்னாட்டு நிறுவனங்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. 186 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள உலக வங்கியின் முக்கிய நோக்கம் உலகில் வறுமையைக் குறைப்பதாகும். இது, வளரும் நாடுகளின் கல்வி, நலவாழ்வு, உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு மிகக் குறைந்த அளவு வட்டியில் கடன்களை வழங்குகிறது. மேலும், ஒரு நாட்டின் நிதித்துறையையும் வேளாண்மையையும் நவீனமயமாக்குவதற்கும், இயற்கை வளங்களை நிர்வகிப்பதற்கும் கடன்களை வழங்குகின்றது. ஏழை நாடுகளுக்கும், பணக்கார நாடுகளுக்கும் இடையே பொருளாதார இடைவெளியைச் சரிசெய்வதற்கும் இது உதவுகின்றது. உலக வங்கியின் தலைவராக எப்பொழுதும் ஓர் அமெரிக்கரும், அதேசமயம், IMF என்ற அனைத்துலக நிதியகத்தின் தலைவராக ஒரு ஐரோப்பியரும் உள்ளனர். இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களையும் Lord Keynes, Harry Dexter White ஆகிய இருவரும் தோற்றுவித்தனர். 1945ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி Bretton Woods கருத்தரங்கில் 29 நாடுகளின் ஒப்புதலில் உலக வங்கி உருவாக்கப்பட்டது. பன்னாட்டு நிதியகம் உட்பட இன்னும் இரண்டு பன்னாட்டு நிறுவனங்களும் இதே நாளில் உருவாக்கப்பட்டன. உலக வங்கியும் பன்னாட்டு நிதியகமும் வாஷிங்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ளன. உலக வங்கியில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்கள் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் தலைமையகத்தில் பணிபுரிகின்றனர்.

ஆதாரம் : விக்கிப்பீடியா







All the contents on this site are copyrighted ©.