2013-12-25 15:07:10

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘Urbi et Orbi’ சிறப்புச்செய்தி


உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!(லூக். 2 : 14)

உரோம் நகரிலும் உலகிலும் உள்ள அன்பு சகோதர சகோதரிகளே,
கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்கள்.

கிறிஸ்து பிறந்த இரவில் பெத்லகேமில் ஆட்டிடையர்களுக்குத் தோன்றிய வானதூதர்களின் பாடலை நான் இப்போது எடுத்துக்கொள்கிறேன். இது விண்ணையும் மண்ணையும் இணைக்கும் பாடல், வானுலகிற்கு மகிமையையும் புகழ்ச்சியையும் வழங்குவது, மற்றும், இவ்வுலகிற்கும் அதிலுள்ள அனைத்து மக்களுக்கும் அமைதி வாக்குறுதியை தருவது.
இந்தப்பாடலில் பங்கெடுக்குமாறு உங்கள் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இரவு கண்விழித்துக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும், மேலும் சிறப்பான உலகைக் குறித்த நம்பிக்கையுடைய ஒவ்வொருவருக்கும், தங்களுடைய கடமையை தாழ்மையுடன் செய்துகொண்டே மற்றவர்களுக்கான அக்கறையுடன் செயலாற்றும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற பாடல் இது.

கடவுளுக்கு மாட்சி

அனைத்திற்கும் மேலாக இதை ஆற்றும்படியே கிறிஸ்துமஸ் நமக்கு கட்டளையிடுகிறது. இறைவனுக்கு மாட்சி உரித்தாகுக. ஏனெனில் அவர் நல்லவர், நம்பிக்கையானவர் மற்றும் கருணையுள்ளம் கொண்டவர். இயேசுவை நமக்கு அளித்த தந்தையாம் இறைவனின் உண்மையான முகத்தை அனைவரும் கண்டுகொள்வார்கள் என்ற நம்பிக்கையை இன்று நான் வெளியிடுகிறேன். எனது நம்பிக்கை என்னவெனில், ஒவ்வொருவரும் இறைவனின் அருகாமையை உணர்வார்கள், அவரின் பிரசன்னத்தில் வாழ்ந்து அவரை அன்பு செய்து ஆராதிப்பார்கள் என்பதேயாகும்.
அனைத்திற்கும் மேலாக நம் வாழ்வு மூலம் இறைவனுக்கு நாம் ஒவ்வொருவரும் மகிமையளிப்போமாக, இறைவனுக்கும் நம் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என அர்ப்பணிக்கப்படும் வாழ்வு மூலம்.

மனிதகுலத்திற்கு அமைதி

உண்மையான அமைதி என்பது எதிரெதிர் சக்திகளை சமநிலைப்படுத்துவதல்ல. மோதல்களையும் பிரிவினைகளையும் மறைத்து, போலியான அன்பைக் காட்டும முகமூடியும் அல்ல. அமைதி என்பது தினசரி அர்ப்பணத்திற்கு அழைப்புவிடுக்கிறது. இயேசுகிறிஸ்துவில் இறைவன் வழங்கிய அருள் எனும் கொடையிலிருந்து அது துவக்கப்படவேண்டும்.
மாடடைக்குடிலில் படுத்திருக்கும் குழந்தையை நோக்கும்போது நம் எண்ணங்கள், போர்களில் மிக எளிதாக பலியாகும் குழந்தைகளை நோக்கித் திரும்புகின்றன. ஆனால் அதேவேளை, முதியோர், தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள், நோயாளிகள் ஆகியோர் குறித்தும் நம் எண்ணங்கள் திரும்புகின்றன. போர்கள், எண்ணற்றோரின் வாழ்வை காயப்படுத்தி சிதறடிக்கின்றன.
சிரியாவின் அண்மைக்கால மோதல்கள், பகைமையையும் பழிவாங்கும் உணர்வுகளையும் தூண்டி, எண்ணற்றோரின் வாழ்வு சிதறடிக்கப்படுவதற்கு காரணமாகியுள்ளன. சிரியாவில், மேலும் துன்பங்கள் இடம்பெறாதிருக்கவும், போரிடும் துருப்புக்கள் அனைத்து வன்முறைகளைக் களைந்து, மனிதாபிமான உதவிகளுக்கு உறுதி வழங்கவும் அவர்களைத் தூண்டுமாறு இறைவனை நோக்கி மன்றாடுவோம். செபம் எவ்வளவு சக்தி நிறைந்தது என்பதை நாம் அறிந்துள்ளோம். பல்வேறு மதங்களைச் சேர்ந்த நம்பிக்கையாளர்கள், சிரியாவின் அமைதிக்கான செபத்தில் நம்மோடு இணைந்துள்ளார்கள் என்பதை அறிந்து நான் இன்றும் மகிழ்ச்சியடைகிறேன். செபம் வழங்கும் நெஞ்சுறுதியை நாம் ஒருபோதும் இழக்காதிருப்போம். நெஞ்சுறுதியுடன் சொல்வோம்: இறைவா, சிரியாவுக்கும் உலகமனைத்திற்கும் உம் அமைதியை வழங்கியருளும்.
பலவேளைகளில் மறக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் நிற்கும் மத்திய ஆப்ரிக்க குடியரசுக்கு அமைதியை அளித்தருளும். இருப்பினும் இறைவா, நீர் எவரையும் மறப்பதில்லை. வன்முறைத் தொடர்நிகழ்வுகளாலும், வறுமையாலும், வீடற்ற நிலைகளாலும், குடிநீரின்றியும், உணவு மற்றும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளின்றியும் துன்புறும் இந்நாட்டிற்கு அமைதியைக்கொணர நீர் ஆவல்கொள்கிறீர்.
தென்சூடானில் சமூக இணக்கவாழ்வை ஊட்டிவளர்த்தருளும். இந்நாட்டின் தற்போதைய பதட்டநிலைகள் எண்ணற்றோரைப் பலிவாங்கியுள்ளன, மற்றும், இந்த இளம் நாட்டின் அமைதியான கூட்டுவாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
அமைதியின் இளவரசே, அனைத்து இடங்களிலும் வன்முறைகளிலிருந்து இதயங்கள் விலகவும், ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைகளின் பாதையைப் பின்பற்றவும் மக்களைத் தூண்டுவீராக. அப்பாவிகளையும் பாதுகாப்பற்றோரையும்கூட விட்டுவைக்காத தொடர்ந்த தாக்குதல்களுக்கு உள்ளாகிவரும் நைஜீரியா மீது உம் பார்வையைத் திருப்பியருளும் இறைவா. இவ்வுலகிற்கு வருவதற்கு, நீர் எந்த நிலப்பகுதியைத் தேர்ந்தீரோ, அப்பகுதியை ஆசீர்வதித்தருளும். அங்கு, இஸ்ராயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே இடம்பெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு நல்லத் தீர்வைக்காண உதவியருளும். தொடர்ந்துவரும் வன்முறை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் அன்புநிறை ஈராக் தேசத்தின் காயங்களை ஆற்றியருளும்.
வாழ்வின் ஆண்டவரே, உம்முடைய பெயருக்காக சித்ரவதைப்படுத்தப்படும் பக்களை பாதுகாத்தருளும். பல்வேறு காரணங்களால் குடிபெயர்ந்திருக்கும் மற்றும் அகதிகளாயிருக்கும் மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கியருளும், குறிப்பாக ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளிலும், காங்கோ மக்கள் குடியரசிலும் வாழ்வோருக்கு. மாண்புநிறை ஒரு வாழ்வைத்தேடும் குடியேற்றதாரர்கள் ஏற்றுக்கொள்ளப்படவும், உதவிகளைப்பெறவும் நீர் அருள்வீராக. இத்தாலியின் லாம்பதூசாவில் இவ்வாண்டு இடம்பெற்ற, எண்ணற்றோரின் மரணங்களுக்குக் காரணமான படகுவிபத்தைப் போன்று துயர்நிகழ்வுகள் இடம்பெறாதிருப்பதாக.
பெத்லகேமின் குழந்தையே, மனிதவியாபாரத்தில் ஈடுபட்டிருப்போரின் இதயங்களைத் தொட்டு, மனிதகுலத்திற்கு எதிரான இக்கொடுங்குற்றத்தின் தீவிரத்தன்மையை அவர்கள் உணர உதவும். ஆயுதம் தாங்கிய மோதல்களால் கடத்தப்பட்டும், காயப்படுத்தப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ள சிறார்களையும், தங்கள் குழந்தைப்பருவம் திருடப்பட்டு, ஆயுதம்தாங்கிப் போராடத் தள்ளப்பட்டுள்ள சிறார்களையும் இறைவா கண்ணோக்கியருளும்.
விண்ணுலகின் மண்ணுலகின் ஆண்டவரே, மனித குலத்தின் பேராசையாலும் ஆதாய வேட்கையாலும் அடிக்கடி சுரண்டப்படும் இவ்வுலகை நோக்கியருளும். இயற்கைப்பேரிடர்களுக்குப் பலியாகும் மக்களைப் பாதுகாத்து உதவியருளும், குறிப்பாக அண்மையச் சூறாவளியால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்சின் அன்புநிறை மக்களை.
அன்பு சகோதர சகோதரிகளே, இன்று, இவ்வுலகில், இந்த மனிதகுலத்தில் மீட்பர் பிறந்துள்ளார், அவரே நம் ஆண்டவர் கிறிஸ்து. பெத்லகேம் குழந்தையின் முன் சிறிதுநேரம் நாம் நிற்போம். நம் இதயங்கள் அவரால் தொடப்படவும், அவரின் இன்கனிவால் நாம் வெதுவெதுப்படையவும் நம்மை அனுமதிப்போம். அவரின் செல்ல வருடுதல் நமக்குத் தேவைப்படுகின்றது. கடவுள் அன்பு நிறைந்தவர், அவருக்கே என்றும் மாட்சியும் மகிமையும் உரித்தாகுக! கடவுளே அமைதி; ஒவ்வொருநாளும் நம் வாழ்விலும், நம் குடும்பங்களிலும், நம் நகர்களிலும், நாடுகளிலும், உலகம் முழுமையிலும் அமைதியை உருவாக்குபவர்களாக நாம் செயல்பட நமக்கு உதவுமாறு இறைவனை நோக்கி நாம் வேண்டுவோம். இறைவனின் நன்மைத்தனத்தால் நாம் மாற்றியமைக்கப்பட நம்மையே நாம் அனுமதிப்போம்.








All the contents on this site are copyrighted ©.