2013-12-23 14:48:01

வாரம் ஓர் அலசல் – கிறிஸ்மஸ் தகவல்கள்


டிச.23,2013. RealAudioMP3 அன்பு நெஞ்சங்களே, கிறிஸ்மஸ் என்றாலே கிறிஸ்மஸ் குடில்கள், கிறிஸ்மஸ் மரங்கள், சாந்தா கிளாஸ்-கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகள் போன்றவை நமக்கு உடனடியாக நினைவுக்கு வருகின்றன. நீங்கள் அனுப்பிவரும் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளும் இவற்றையே எமக்கு நினைவுபடுத்துகின்றன. உரோமையில் ஆலயங்கள், இல்லங்கள் தவிர, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், சிறிய, பெரிய பொது வளாகங்கள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என எல்லா இடங்களிலும் கிறிஸ்மஸ் குடில்களும் மரங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ வரலாற்றில் முதன்முறையாக இத்தாலியில்தான் 1223ம் ஆண்டில் கிறிஸ்மஸ் குடில் வைக்கப்பட்டது. இது உருவாகக் காரணமாக இருந்தவர் அசிசி நகர் புனித பிரான்சிஸ். இவர் இறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டு திரும்பியிருந்தார். அவர் வாழ்ந்த துறவு இல்ல ஆலயம் சிறியதாக இருந்ததால், அவ்வாண்டு கிறிஸ்மஸை அசிசி நகருக்கு அருகிலுள்ள Grecio எனும் ஊரில் சிறப்பிக்க விரும்பினார். ஆதலால், புனித பிரான்சிஸ், Grecioவில் வாழ்ந்த பக்தியுள்ள, அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்ட Giovanni Velitta என்பவரை கிறிஸ்மஸ்க்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அணுகினார். அவரிடம்,
இவ்வாண்டு நாம் எல்லாரும் சேர்ந்து Grecioவில் கிறிஸ்மஸைச் சிறப்பிக்க நீர் விரும்பினால் உடனடியாகச் சென்று நான் சொல்வதுபோல் செய்யும்; பெத்லகேமில் மாட்டுத்தீவனத் தொட்டிலில் குழந்தை இயேசு கிடத்தப்பட்டிருப்பதையும், அந்தத் தொட்டிலுக்கு இரு பக்கங்களிலும் கழுதையும் காளையும் நிற்பதைப் போலும் ஒரு குடில் அமையும்; இதனை நான் எனது கண்களால் பார்க்க விரும்புகிறேன்
என்று புனித பிரான்சிஸ் சொன்னார். அந்த நல்ல மனிதர் Giovanniம் புனிதர் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றும் முயற்சியில் இறங்கினார். புனித பிரான்சிஸ் தனது சபையின் மற்ற இல்லங்களுக்கும், அவ்வூருக்குச் சுற்றுப்புறத்தில் வாழ்வோர் அனைவருக்கும் இச்செய்தியை சொல்லி அனுப்பினார். 1223ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவில் அனைவரும் மெழுகுதிரிகளுடன் Grecioவில் மரங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த குடிலைப் பார்க்க வந்தனர். அந்த நள்ளிரவை மெழுகுதிரிகளின் ஒளியால் நிரப்பினர். அங்கே உயிருள்ள கழுதையும் காளையும் இருந்தன. வைக்கோல்கள் நிறைந்திருந்த மாட்டுத் தொழுவத்தையும், காலியான தீவனத்தொட்டிலையும் பார்த்தனர். Grecioவின் அவ்விடம், இயேசுவின் பிறப்புச்சூழலை தத்துவரூபமாக, புதிய பெத்லகேமாக மாறியிருந்தது. மக்கள் மகிழ்ச்சியினால் பாடினர். கிறிஸ்மஸ் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புனித பிரான்சிஸ் குருப்பட்டம் பெறாதவர் என்பதால் அவர் திருப்பலி நிறைவேற்றவில்லை, ஆனால் உருக்கமான மறையுரையாற்றினார். திருப்பலிக்குப் பின்னர் அந்தத் தீவனத்தொட்டிலில் குழந்தை இயேசு படுத்திருப்பதாக நினைத்து அதனருகில் விரித்த கரங்களுடன் சென்றார் புனித பிரான்சிஸ். அப்போது அங்கே அதிசயம் ஒன்று நடந்தது. குழந்தை இயேசு மிகுந்த ஒளியுடன் அத்தொட்டிலில் தோன்றினார் எனச் சொல்லப்படுகிறது. இவ்வாறு முதல் உயிருள்ள கிறிஸ்மஸ் குடில் Grecioவில் அமைக்கப்பட்டது.
இயேசுவின் பிறப்பைச் சித்தரிக்கும் கிறிஸ்மஸ் குடில் அமைக்கும் புனித பிரான்சிஸ் அசிசியாரின் இந்த எண்ணம் கிறிஸ்தவ உலகில் வெகு வேகமாகப் பரவி, ஆலயங்களிலும் வீடுகளிலும் குடில்கள் அமைக்கப்பட்டன. ஜெர்மானியர்கள் இந்தப் பழக்கத்தை அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். ஆயினும், தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் இயேசு பிறப்பு நிகழ்வை ஏறக்குறைய 380ம் ஆண்டிலே ஓவியமாகச் சுவர்களில் வரைந்துள்ளனர். இதனை 1877ம் ஆண்டில் உரோம் புனித செபஸ்தியார் அடிநிலக் கல்லறைகளில் அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது, கழுதை, தன் தலைவன் தனக்குத் தீனிபோடும் இடத்தைத் தெரிந்துகொள்கின்றது” என, எசாயா இறைவாக்கினர்(1:3) சொல்லியிருப்பதுபோல், குடில்களில் கழுதையும் காளையும் கட்டாயமாக வைக்கப்படுகின்றன. தாழ்மையான வீட்டு விலங்குகள் குழந்தை இயேசுவுக்கு முதல் அடைக்கலம் கொடுத்து, தங்களின் மூச்சுக்காற்றால் அவ்விடத்து மார்கழிக் குளிரைப் போக்கின என்ற காரணத்தினால், கிறிஸ்மஸ் நள்ளிரவில் விலங்குகளுக்குப் பேசும்கொடை வழங்கப்பட்டுள்ளது என்று பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது. குழந்தை இயேசுவுக்கு உயிரினங்கள் செய்த இச்செயலுக்கு நன்றியாக, புனித பிரான்சிஸ், கிறிஸ்மஸ் நள்ளிரவில் மரங்களுக்கு அடியில் ரொட்டித் துண்டுகளைச் சிதறவிடுவார் எனவும், விவசாயிகள் தங்கள் காளைகளுக்கும் கழுதைகளுக்கும் அதிகமான உணவு கொடுக்குமாறு அப்புனிதர் கேட்டுக்கொண்டதாகவும் அப்புனிதர் பற்றிய வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் முதல் கிறிஸ்மஸ் குடிலை 1982ம் ஆண்டில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் தொடங்கி வைத்தார். திருவருகைக் காலத்தில் மகிழ்ச்சி ஞாயிறு எனச் சொல்லப்படும் மூன்றாவது ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் சிறார் தங்கள் குடில்களில் வைக்கும் குழந்தை இயேசு திருவுருவத்தைக் கொண்டுவந்து திருத்தந்தையின் ஆசீர் பெறுகின்றனர். இந்தப் பழக்கத்தை 1968ம் ஆண்டில் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் தொடங்கி வைத்தார். 1978ம் ஆண்டில் 50 ஆயிரம் பள்ளிச் சிறார் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நவீன கலாச்சாரத்தில் கிறிஸ்மஸ் குடிலைவிட கிறிஸ்மஸ் மரத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது. பொதுவாக, பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுக்குள்ளேயோ, வெளியேயோ நிறுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. கிறிஸ்மஸ் மரத்தின் வரலாறு குறித்து இருவிதமான குறிப்புக்கள் உள்ளன. கிழக்கு பிரான்சில், மேற்கு ஜெர்மனியின் எல்லையையொட்டி அமைந்துள்ள அல்சாஸில்(Alsace) முதல் "கிறிஸ்மஸ் மரம்" வீட்டில் வைக்கப்பட்டது என்று ஒரு குறிப்பிலும், கிறிஸ்மஸ் மரத்தின் பிறப்பிடம் ஜெர்மனி என்று மற்றொரு குறிப்பிலும் சொல்லப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் புனித போனிபாஸ் என்பவர் ஜெர்மனியில் ஓரிடத்தில் மறையுரையாற்றிக் கொண்டிருந்தபோது மக்கள் அங்குள்ள ஓக் மரம் ஒன்றை வழிபடுவதைக் கண்டார். அதைக் கண்டு கோபமடைந்த அவர் அந்த மரத்தை வெட்டி வீழ்த்த அதனடியிலிருந்து உடனடியாக ஒரு கிறிஸ்மஸ் மரம் முளைத்து வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மரம் முளைத்த செயலை இயேசுவின் உயிர்ப்போடு தொடர்புபடுத்தி தனது போதனையை அவர் தீவிரப்படுத்தினார். பின்னர், 1500ம் ஆண்டில் மார்ட்டின் லூத்தர் அவர்கள், கிறிஸ்மஸ் காலத்தில், பனிபடர்ந்த சாலை வழியாக நடந்து செல்கையில் சிறு சிறு பச்சை மரங்களின்மீது படர்ந்திருந்த பனி வெளிச்சத்தில் பிரமிக்கவைக்கும் அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். உடனே அவர், ஓர் ஊசியிலை மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதை கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார். கிறிஸ்மஸ் மரம் அலங்கரிப்புகளுடன், கிறிஸ்மஸ் விழாக்களில் நுழைந்தது இப்போதுதான் என்று சொல்லப்படுகிறது.
ஏறக்குறைய மூன்று கோடியே முப்பது இலட்சம் கிறிஸ்மஸ் மரங்கள் வட அமெரிக்காவில் வருடந்தோறும் விற்கப்படுகின்றன. மூன்று இலட்சத்து முப்பதாயிரம் மரங்கள் இணையம் வழி விற்கப்படுகின்றன. இப்போது நிறைய செயற்கை கிறிஸ்மஸ் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கை மரங்களுக்கான தயாரிப்பில் கொரியா, தாய்வான், ஹாங்காங் போன்ற இடங்கள் முன்னணியில் நிற்கின்றன. கிறிஸ்மஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பது கிறிஸ்மஸ் மரத்தின் சிறப்பம்சம். அதேபோல கிறிஸ்மஸ் மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் இறைவனின் மூன்று பரிமாணங்களைக் குறிப்பதாகவும், எனவே இயேசு மனிதஉரு எடுத்த நிகழ்வை, மரத்தை அலங்கரிப்பதன்மூலம் கொண்டாடுவது அதிக அர்த்தமுடையது எனவும் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.
அக்காலத்தில் இயேசுவின் பிறப்பு நாள், பலவாறு சொல்லப்பட்டிருந்தாலும், இப்பெருவிழா டிசம்பர் 25ம் தேதி சிறப்பிக்கும் வழக்கம் 4வது நூற்றாண்டில் மேற்கத்திய உலகில் தொடங்கியது. ஆயினும், திருக்காட்சி விழாவான சனவரி 6ம் தேதியன்று கீழை வழிபாட்டு முறையினர் கிறிஸ்மஸைச் சிறப்பிக்கின்றனர். பழங்காலத்தில் பாரசீகர்களும், பபிலோனியர்களும் கிறிஸ்மஸ் பெருவிழாவை வருடத்தின் நல்ல நாளாகக் கொண்டாடி வந்தனர். கிறிஸ்மஸ் பெருவிழா அன்று, பாரசீகத்தில் எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்பட்டது. மேலும் சிலர், தங்கள் அடிமைகளைப் பரிசுப் பொருளாகவும் பரிமாறிக் கொண்டனர். சில முதலாளிகள் கிறிஸ்மஸ் பெருவிழா நாளில்மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் குறிப்புகள் உள்ளன. மேலும், அசுத்த ஆவிகளுக்கு அதிகமாகப் பயந்து வாழ்ந்த அக்கால ஐரோப்பியர்கள், ஆண்டில் நீண்ட இரவு கொண்ட நாட்களில் அவை மக்களுக்குத் தீமை விளைவிக்கும் என்று நம்பினர். இதனால் நீண்ட இரவுகளுக்குப் பிறகு சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடி வந்துள்ளனர்.
மொத்தத்தில் நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் கிறிஸ்மஸ் நன்னாளை உலகினர் பயன்படுத்தியிருப்பதாகத் அறிகிறோம். அமைதி தேடும் மனிதருக்கு அமைதியை அளித்திடும், அன்பைத் தேடும் மனிதருக்கு அன்பை அள்ளித் தந்திடும், சோர்ந்து போன மனிதருக்கு சுகமான இறைப்பற்றை தந்திடும் நாளாக இறைமகன் இயேசு மகான்00000 பிறந்த பெருவிழா அமைவதாக. எது எது நம்மைப் பிரிக்குமோ அவற்றை மறப்போம்; எவை எவை நம்மை இணைக்குமோ அவற்றை மட்டுமே நினைப்போம். இந்த வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சி மூலம் அன்புநெஞ்சங்கள் அனைவருக்கும் எமது கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.







All the contents on this site are copyrighted ©.