2013-12-23 15:18:39

திருத்தந்தை : கிறிஸ்துவுக்காகநம்மைத் திறந்து விழிப்புடன் காத்திருப்போம்


டிச.,23,2013. கிறிஸ்து தன் திருஅவையை ஒவ்வொரு நாளும் சந்திக்க வருவதால் நாம் நம் ஆன்மாவை எப்போதும் திறந்து வைத்திருப்பவர்களாகச் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்தவராக இருக்கும் ஒவ்வொருவரும் இறைவனின் வருகை குறித்து எப்போதும் விழிப்புடன் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார்.
தன் குழந்தையின் முகத்தைக் காண்பதற்காக அன்னைமரி இந்நாள்களில் காத்திருப்பதுபோல் நாமும் காத்திருக்கிறோம் என்ற திருத்தந்தை, இந்த வருகையைப்போல் இறைவனின் இறுதி வருகைக்காகவும் நாம் காத்திருக்கிறோம் என்றார். இவை தவிர, புனித பெர்னார்டு கூறுவதுபோல், இறைவனின் மூன்றாவது பிறப்பு என்ற ஒன்று உள்ளது, அதுவே அவர் தினமும் நம் ஆன்மாவிற்குள் நுழைவது என்ற திருத்தந்தை, நமது ஆன்மாவை அன்னை மரியோடு ஒப்புமைப்படுத்திக் கூறினார். அன்னைமரியைப்போல் நாமும் விழிப்புடன் காத்திருக்கிறோம், ஏனெனில் அவ்வாறு காத்திருப்பது திருப்பயணியின் நற்பண்பு எனவும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'தொந்தரவு செய்யாதீர்கள்' என கதவுகளில் மாட்டுவதுபோல் நம் இதயங்களில் மாட்டாமல், 'ஆண்டவரே வாரும்' என அழைப்புவிடுத்து அவருக்காக விழிப்புடன் காத்திருப்போம் என தன் மறையுரையில் மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.