2013-12-23 15:19:12

திருத்தந்தை : அன்னை மரி மற்றும் புனித வளனுடன் இணைந்து கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நோக்கி நடப்போம்


டிச.23,2013. அன்னை மரியா மற்றும் புனித வளன் குறித்த தியானத்தில் பெத்லகேம் நோக்கி இடம்பெறும் பயணமாக நம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்கள் இருக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுடன் இணைந்து நண்பகல் மூவேளை செபத்தைச் செபித்தபின் உரை ஒன்றும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், அருள் நிறைந்தவராகிய அன்னைமரியுடனும், நீதிமானாகிய புனித வளனுடனும் இணைந்து நடப்போம் என்ற அழைப்பை முன்வைத்தார்.
தனக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்ட மரியா கருவைத் தாங்கியவராக உள்ளார் என்பதை அறிய வந்ததும் புனித வளன் அவரை இரகசியமாக ஒதுக்கிவிட எண்ணியது அவரின் மனப்போராட்ட்டத்தின் வெளிப்பாடாக உள்ளது என உரைத்த திருத்தந்தை, தன் மகன் ஈசாக்கைப் பலி கொடுக்க இறைவன் கேட்டபோது ஆபிரகாமிற்கு ஏற்பட்ட மனநிலையோடு புனித வளனின் மனநிலையை ஒப்பிட்டுப் பேசினார்.
குழப்ப மனநிலையில் இருந்தபோது இருவர் வாழ்விலும் இறைவன் தலையிட்டு தீர்வைத் தந்தார் எனவும் கூறினார் திருத்தந்தை.
தூய வளன் தன் விருப்பங்களையும் திட்டங்களையும் விலக்கிவைத்துவிட்டு இறைவனின் திட்டங்களுக்கே எப்போதும் பணிந்து நடந்தார் எனவும் கூறிய திருத்தந்தை, அவரின் இதயம் எப்போதும் இறைவனின் விருப்பங்களை நிறைவேற்ற தன்னைத் திறந்ததாகச் செயல்பட்டதாகக் கூறினார்.
நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், இன்றைய உலகில் ஏழைகளின் நிலைகுறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்தோரில் ஒரு குழுவினர் வைத்திருந்த' ஏழைகள் இன்னும் காத்திருக்க முடியாது' என்ற வாசகத்தைக் குறிப்பிட்டு தன் கருத்துக்களை வழங்கிய திருத்தந்தை, உறைவிடங்களின்றி குடும்பங்கள் வளரமுடியாது என்பதை நினைவில் கொண்டு அனைத்து மக்களும் நிறுவனங்களும் அமைப்புகளும் வீடற்ற மக்களுக்கான உறைவிடங்களை உறுதிசெய்வதற்கு உழைக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.