2013-12-21 15:26:46

தெற்கு சூடானில் வன்முறை கைவிடப்படுமாறு CAFOD அமைப்பு வேண்டுகோள்


டிச.21,2013. தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவில் கடந்த சில நாள்களாக வன்முறை இடம்பெற்றுவரும்வேளை, சண்டையிடும் அனைத்துத் தரப்பினரும் வன்முறையைக் கைவிடுமாறு பிரிட்டனின் CAFOD பிறரன்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜூபாவின் புனித தெரேசா பேராலயத்திலும், அந்நகரின் ஐ.நா. கட்டிடத்திலும் நூற்றுக்காணக்கான மக்கள் அடைக்கலம் தேடியுள்ளனர் எனக் கூறும் CAFOD அமைப்பு, உலகின் மிக இளவயது நாடாகிய தெற்கு சூடானில் அரசுத்தலைவர் Kiir தனது அமைச்சரவையைக் கலைத்துள்ள சூழலில் பதட்டநிலை மேலும் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தது.
சூடானில் 22 வருட உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த புரட்சிப்படைக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் மோதல்களைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இம்மாதம் 15ம் தேதி சண்டை தொடங்கிய பின்னர் ஜூபா விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு சூடானின், Jonglei மாநிலத்தில் ஐ.நா. நிறுவன வளாகத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில், அங்கிருந்த மூன்று இந்திய அமைதிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : ICN







All the contents on this site are copyrighted ©.