2013-12-21 15:26:26

திருத்தந்தை பிரான்சிஸ் : திருவருகைக் காலம், பெத்லகேமை நோக்கிய ஒரு பயணம்


டிச.21,2013. மேலும், இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு உரோம் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனைக்குச் சென்று, அங்குச் சிகிச்சை பெற்றுவரும் ஏறக்குறைய எல்லாச் சிறாரையும் பார்ப்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்நாளைய நிகழ்ச்சிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீடத்துக்குச் சொந்தமான, பம்பினோ ஜேசு என்ற இந்தச் சிறார் மருத்துவமனை ஐரோப்பாவிலுள்ள சிறார் மருத்துவமனைகளில் பெரியதாகும். இது, பல பன்னாட்டு மருத்துவ மையங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. மருத்துவர்கள், தாதியர், ஆய்வாளர்கள், தொழில்நுட்பத்துறையினர் என ஏறக்குறைய 2,600 பேர் இங்குப் பணிபுரிகின்றனர்.
பம்பினோ ஜேசு மருத்துவமனையில், ஓராண்டில் 27 ஆயிரம் சிறார் சிகிச்சைக்கென அனுமதிக்கப்படுகின்றனர்; 25 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன; 71 ஆயிரம் சிறார் அவசரக் கிசிக்கைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
Arabella, Scipione Salviati ஆகிய இருவரின் மனத்தாராளத்தால் 1869ம் ஆண்டில் இத்தாலிய சிறார் மருத்துவமனையாக இது தொடங்கப்பட்டது. பின்னர், 1924ம் ஆண்டில், இது திருப்பீடத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இம்மருத்துவமனையை, திருத்தந்தையின் மருத்துவமனை என குடும்பத்தினர் அழைக்கின்றனர்.
இன்னும், இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், திருவருகைக் காலம், பெத்லகேமை நோக்கிய ஒரு பயணம்; மனிதரான கடவுளின் ஒளியால் ஈர்க்கப்பட நம்மை அனுமதிப்போம் என்று எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.