2013-12-20 15:53:45

திருத்தந்தை பிரான்சிஸ் : தூதரகப்பணி, கலாச்சாரச் சந்திப்புக்கு ஆதரவளிக்கும் முக்கியமான பணி


டிச.20,2013. ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்தல், மதித்தல், உலகின் வளர்ச்சிக்கும் அமைதிக்குமான வழிகளை ஒன்றிணைந்து தேடுதல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நாடுகளுக்கிடையே இடம்பெறும் நல்உறவுகளில் தூதரக அதிகாரிகள் ஆற்றும் பணி குறிப்பிடும்படியானது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்துக்கான இத்தாலிய தூதரகத்தின் பணியாளர்கள், இத்தாலிய வெளியுறவு அமைச்சகத்தில், பிறநாடுகளின் அதிகாரிகளை வரவேற்கும் பிரிவில் பணியாற்றவோர் என 200 பேரை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், கலாச்சாரங்கள் சந்திப்பதற்கு இப்பணியாளர்கள் ஆற்றிவரும் பணியைப் பாராட்டினார்.
கலை, கலாச்சார உலகில் இத்தாலி எப்பொழுதும் மேன்மையோடு நோக்கப்படும்வேளை, கலாச்சாரங்களின் சந்திப்பால் இதனை மேலும் வளமடையச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நிகழும் சந்திப்பே கிறிஸ்மஸ் பெருவிழா என்றும், கிறிஸ்தவ மறையைப் பின்பற்றாதவர்களும் இயேசுவின் பிறப்பு செய்தி முன்வைக்கும் சவாலை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, கிறிஸ்மஸ் செய்தியை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஆழமாய் வாழுமாறு கேட்டுக்கொண்டார்.
இப்பணியாளர்கள் திருப்பீடச் செயலகத்துக்கும், பாப்பிறை இல்லத்துக்கும் ஆற்றிவரும் பணிகளுக்கும், குறிப்பாக, கடந்த மார்ச் 19ம் தேதி நடைபெற்ற பாப்பிறைப் பணியேற்பு நிகழ்வில் இப்பணியாளர்கள் ஆற்றிய சேவைக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.