2013-12-20 15:53:52

திருத்தந்தை பிரான்சிஸ் : ஒருவர் கடவுளோடு கொள்ளும் நல்லுறவை அமைதி பாதுகாக்கிறது


டிச.20,2013. ஒருவர் கடவுளோடு நடந்துவரும் பயணத்தின் புதிரான வாழ்வைக் காத்து நடத்துவது அமைதியே என்றும், அனைத்து விளம்பரங்களிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பதற்குத் தேவையான அமைதியை அன்பு செய்வதற்கு நம் ஆண்டவரிடம் வரம் கேட்போம் என்றும் இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வானதூதர் நாசரேத்தூர் மரியாவுக்கு இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் நற்செய்தியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, மீட்பு வரலாற்றில் கடவுள் தம்மை மனித சமுதாயத்துக்கு வெளிப்படுத்துவதற்கு ஆரவாரங்கள் மற்றும் கூச்சல்நிறைந்த இடங்களை அல்ல, மாறாக, நிழல்களும் அமைதியும் நிறைந்த இடங்களையே தேர்ந்தெடுத்தார் என்று கூறினார்.
நம் இதயங்களிலும், நம் ஆன்மாக்களிலும் நம் ஆண்டவர் வியக்கத்தக்கமுறையில் எப்படி வேலை செய்கிறார் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துள்ளோம் என்றுரைத்த திருத்தந்தை, அந்த வியப்பை மூடியுள்ள மேகம், சக்தி, தூய ஆவியின் வழி எது என்ற கேள்வியை எழுப்பி, நம்மிலுள்ள இந்த மேகமே அமைதி என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் தாய் அமைதியின் மொத்த உருவம் எனவும், இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்ட நேரம் முதல் கல்வாரிவரை அவர் எத்தனைமுறை அமைதியாக இருந்தார் எனவும் கூறினார் திருத்தந்தை.
நாம் ஆண்டவரைத் தேடவும், அமைதி என்ற மேகத்தால் சூழப்பட்ட இதயத்தைக் கொண்டிருக்கவும், அமைதியை அன்புசெய்யும் வரத்தை நம் அனைவருக்கும் ஆண்டவர் அருள்வாராக என்று சொல்லி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.