2013-12-20 15:53:36

திருத்தந்தை இளையோரிடம் : கிறிஸ்மஸ் காலம் பகைவர்களுக்காகச் செபிக்கும் காலம்


டிச.20,2013. இவ்வெள்ளியன்று இத்தாலிய கத்தோலிக்க கழகத்தின் 65 இளையோரை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், இளையோர் இயேசுவுடன் கொண்டுள்ள நட்புறவின் மகிழ்வை, வீடுகளிலும், ஆலயங்களிலும், பள்ளிகளிலும் என எல்லா இடங்களிலும், நண்பர்களோடும், பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்மஸ் பெருவிழாவின் முக்கியத்துவம் குறித்து இளையோரிடம் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், குழந்தை இயேசுவின் முகத்தில் கடவுளின் முகத்தைத் தியானிக்கிறோம் எனவும், கடவுள் நம் ஒவ்வொருவர்மீதும் கொண்டுள்ள எல்லையற்ற பிரமாணிக்கத்தையும் கனிவையும் குழந்தை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார் எனவும் கூறினார்.
பிறரைத் தீர்ப்பிடாமல், புறணி பேசாமல், தேவையில் இருப்போர்க்கு உதவிக்கரம் நீட்டி உண்மையான கிறிஸ்தவ வாழ்வுக்குச் சாட்சிகளாக வாழுமாறும், பகைவர்களுக்காகச் செபிக்குமாறும் இளையோரை கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், பிறரைப் பற்றித் தவறாகப் பேசுதல் கிறிஸ்தவத்துக்குப் புறம்பானது எனவும் கூறினார்.
எத்தனையோ பெற்றோர் தங்களின் நோயாளிக் குழந்தைகளோடும், ஏழ்மை நிலையிலும் கிறிஸ்மஸைச் சிறப்பிக்கவுள்ளனர், அவர்களையும் இக்கிறிஸ்மஸ் காலத்தில் நினைத்துப் பார்ப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எல்லா வயதினரையும் உள்ளடக்கிய இந்தக் கத்தோலிக்க கழகம், இத்தாலிய கத்தோலிக்கத் திருஅவையில் இயங்கிவரும் மிகப் பழமையான பொதுநிலையினர் அமைப்புக்களில் ஒன்றாகும். 2012ம் ஆண்டில் இவ்வமைப்பில் ஏறக்குறைய 4 இலட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள், உடன்வாழ்வோரைக் கத்தோலிக்க விசுவாசத்தில் ஆழப்படுத்துவது உட்பட பங்குத்தளங்களில் பல நற்பணிகளைச் செய்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.