2013-12-19 17:25:44

கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கிவரும் வேளையில், தாழ்ச்சி நிறைந்த மனதிற்காக வேண்டுவோம் - திருத்தந்தை பிரான்சிஸ்


டிச.19,2013. தாழ்ச்சியே வளம்நிறைந்த வாழ்வுக்கு அவசியம் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லத்தில் ஆற்றிய திருப்பலியில் வழங்கிய மறையுரையின் மையக் கருத்தாகப் பகிர்ந்தார்.
பிள்ளைப்பேறு அற்ற இரு பெண்களைக் குறித்து இவ்வியாழன் வழங்கப்பட்ட திருப்பலி வாசங்களை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, வாழ்வற்றச் சூழல்களிலும் இறைவன் வாழ்வு வழங்கும் வலிமை பெற்றவர் என்பதை வலியுறுத்தினார்.
இறைவன், பாலை நிலத்தையும் சோலையாக்குவார் என்று இறைவாக்கினர்கள் உறுதியாகக் கூறியதற்கு இறைவனின் வல்லமையே காரணம் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இறைவனின் வல்லமையை உணர்வதற்கு நாம் தாழ்ச்சி உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, தான் என்ற அகந்தை கொண்டோர் வாழ்வில் இறைவன் வளமையை உருவாக்க இயலாது என்று கூறினார்.
கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கிவரும் இவ்வேளையில், தன்னால் ஆவது ஒன்றுமில்லை, ஆனால், இறைவனால் எல்லாம் ஆகும் என்று நம்பும் தாழ்ச்சி நிறைந்த மனதிற்காக வேண்டுவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார்.
மேலும், "பசியால் இறப்போர் ஒருவருமில்லை என்ற அளவு உயர்ந்திருக்கும் ஓர் உலகைக் காண்பதற்கு இறைவன் நமக்கு வரமருளவேண்டும் என்று மன்றாடுவோம்" என்ற செய்தியை தன் Twitter பக்கத்தில் இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.