2013-12-18 15:58:19

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைபோதகங்களில் 1,500,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்


டிச.18,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு மார்ச் மாதம் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து, டிசம்பர் 18, இப்புதன் முடிய 30 முறை புதன் பொது மறைபோதகம் வழங்கியுள்ளார் என்றும், இந்த மறைபோதகங்களில் கலந்துகொள்வோருக்கு 1,500,000க்கும் அதிகமாக நுழைவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டன என்றும் திருப்பீட அலுவலகம் அறிவித்துள்ளது.
2013ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி தலைமைப் பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் மாதம் 27ம் தேதி தன் முதல் புதன் மறைபோதகத்தை வழங்கினார். அன்று முதல், டிசம்பர் 18 இப்புதன் முடிய அவர் தன் மறைபோத்கம் அனைத்தையும் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு புதன் பொது மறைபோதகத்திற்கும் முன்பாக, திருப்பீட அலுவலகம் நுழைவுச் சீட்டுக்களை வழங்கிவந்துள்ளது. இந்த நுழைவுச் சீட்டுக்களின் அடிப்படையில் புள்ளிவிவரங்களை இப்புதன் வெளியிட்டுள்ள திருப்பீட அலுவலகம், நுழைவுச்சீட்டு இன்றியும் மறைபோதகத்தில் இன்னும் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டனர் என்றும் அறிவித்துள்ளது.
இப்புள்ளி விவரங்களின்படி, மே மாதத்திலும், அக்டோபர் மாதத்திலும் திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகத்தில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததெனத் தெரிகிறது.
மிக அதிக அளவாக, மே மாதம் 29ம் தேதி 90,000 நுழைவுச் சீட்டுக்களும், அக்டோபர் மாதம் 23ம் தேதி, 85,000 நுழைவுச் சீட்டுக்களும் வழங்கப்பட்டன என்று திருப்பீட அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.