2013-12-18 15:57:39

சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோருக்கு நற்செய்தியின் ஒளியை எடுத்துச் செல்வோம் - திருத்தந்தை பிரான்சிஸ்


டிச.18,2013. சுகமாக நமக்குள்ளேயே தங்கியிருக்கும் நிலையிலிருந்து வெளியேறி, சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோருக்கு நற்செய்தியின் ஒளியை எடுத்துச் செல்வோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்ட ஒரு மடலில் எழுதியுள்ளார்.
கட்டுண்டோரின் விடுதலைக்கென நிறுவப்பட்டுள்ள மூவொரு கடவுளின் துறவு சபையை நிறுவிய புனித Juan de Mata அவர்களின் எட்டாம் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் அத்துறவு சபையின் தலைவரான அருள் பணியாளர் Jose Narlaly அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பிய மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.
சபையின் நிறுவனரான புனித Juan de Mata அவர்களும், நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர், சபையின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட புனிதர் Juan Bautista de la Concepcion அவர்களும் வாழ்ந்த விழுமியங்கள் நமக்கு நல்லதொரு வழிகாட்டி என்று திருத்தந்தை தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோர், குறிப்பாக பல்வேறு தளைகளால் கட்டுண்டிருப்போர் ஆகியோரை வரவேற்கும் வண்ணம், இத்துறவு சபையின் கதவுகள் எப்போதும் திறந்திருப்பதையே தான் விரும்புவதாக திருத்தந்தை இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.
1169ம் ஆண்டு பிறந்த Juan de Mata அவர்கள், அன்றையச் சூழலில், இஸ்லாமியரின் அடக்குமுறைகளால் சிறையுண்ட கிறிஸ்தவர்களைக் காப்பதற்கென துறவு சபையொன்றை 1198ம் ஆண்டு நிறுவினார். 1213ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி மறைந்த Juan de Mata அவர்கள் இறந்ததன் 8ம் நூற்றாண்டு இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : VIS








All the contents on this site are copyrighted ©.