2013-12-17 15:58:38

சிரியா அகதிகளுக்கு உடனடியான மனிதாபிமான உதவிகளுக்கு எருசலேம் முதுபெரும் தந்தை Twal அழைப்பு


டிச.17,2013. இந்தக் குளிர்காலக் கடும் பனிப்பொழிவில் துன்புறும் சிரியா நாட்டு அகதிகளுக்கு உடனடியான மனிதாபிமான உதவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal.
சிரியாவில் நடைபெற்றுவரும் சண்டை, ஆயிரம் நாள்களையும் கடந்துவிட்ட நிலையில், அச்சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், லெபனன் காரித்தாஸ் நிறுவனமும் சிரியா அகதிகளுக்கென மனிதாபிமான உதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளது.
கிழக்கு லெபனனின் பெக்கா பள்ளத்தாக்கிலுள்ள முகாம்களில் வாழ்கின்ற எட்டு இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகளுள் பலர் கடும் குளிரால் இறந்துகொண்டிருக்கின்றனர் என்றுரைத்த லெபனன் காரித்தாஸ் இயக்குனர் பேரருள்திரு Simon Faddoul, இம்மக்களைக் காப்பாற்றுவதற்கு தாராளமனத்துடன் உதவிகள் செய்யப்படுமாறு கேட்டுள்ளார்.
இதற்கிடையே, ஐ.நா. உலக உணவுத் திட்ட நிறுவனம் இவ்வகதிகளுக்கு உணவுப்பொருள்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

ஆதாரம் : ICN







All the contents on this site are copyrighted ©.