2013-12-16 16:05:28

மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வன்முறையற்ற, நல்மனம் கொண்டவர்கள் - பேராயர் லூயிஸ் இரபேல் சாக்கோ


டிச.16,2013. மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வன்முறையற்ற, நல்மனம் கொண்டவர்கள் என்று பாபிலோனிய கல்தேய வழிபாட்டு முறை கத்தோலிக்க முதுபெரும் தந்தை பேராயர் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.
உரோம் நகர் உர்பானியா பல்கலைக் கழகத்தில், 'கிறிஸ்தவமும், விடுதலையும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் சாக்கோ அவர்கள், இஸ்லாமியரில் பெரும்பான்மை மக்கள் நல்மனம் கொண்டவர்கள் என்றாலும், வன்முறையை மேற்கொள்ளும் அடிப்படை வாதக் குழுக்களுக்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாமல் தவிக்கின்றனர் என்பதை அவர் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாமியரின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அங்கு வேரூன்றியிருந்த கிறிஸ்தவம், தொடர்ந்து அங்கு தங்கவேண்டும் என்ற தன் ஆவலையும் பேராயர் சாக்கோ வெளியிட்டார்.
இஸ்லாமிய கோட்பாடுகள் தற்போதைய காலக் கட்டத்திற்குப் பொருந்துமாறு அமைவதற்கு, உலக நாடுகளின் தலையீடு அவசியம் என்பதையும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.