2013-12-14 15:45:29

புனித மார்த்தா சிறார் மருந்தகத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை


டிச.14,2013. வத்திக்கானிலுள்ள புனித மார்த்தா சிறார் மருந்தகத்திலுள்ள நோயாளிச் சிறாரை இச்சனிக்கிழமை காலையில் பார்வையிட்டபின்னர், இச்சிறாரின் குடும்பத்தினர், அவர்களுக்கு உதவும் தன்னார்வப் பணியாளர்கள், மருத்துவர்கள், இம்மருந்தகத்தை நடத்திவரும் வின்சென்ட் தெ பவுல் சபை அருள்சகோதரிகள் ஆகியோரை, திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 17, வருகிற செவ்வாயன்று தனது 77வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குச் சிறார் வாழ்த்துப் பாடலும் பாடி பெரிய கேக் ஒன்றையும் திருத்தந்தைக்கு வழங்கினர்.
முதல் உலகப்போர் முடிவடைந்த சமயத்தில் ஏழைச் சிறாருக்கு உதவுவதற்கென 1922ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பத்திநாதரால் இம்மருந்தகம் உருவாக்கப்பட்டது. இதனைப் பராமரிக்கும் பொறுப்பு வின்சென்ட் தெ பவுல் சபை அருள்சகோதரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது 3,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இம்மருந்தகத்தால் பயன் பெறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.