2013-12-14 16:01:59

பிலிப்பீன்ஸ் அரசின் வீட்டுமனை விற்பனைத் திட்டங்கள் கைவிடப்படுமாறு ஆயர்கள் அரசுக்கு வேண்டுகோள்


டிச.14,2013. பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் கடற்கரையில் அரசு அமைக்கவுள்ள ஏறக்குறைய நாற்பது வீட்டுமனை விற்பனைத் திட்டங்கள், சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்கத் தலைவர்கள்.
மணிலா வளைகுடா கடற்கரையை மாற்றி அமைக்கவுள்ள அரசின் இத்திட்டங்கள் குறித்து அரசுத்தலைவர் Benigno Aquinoவுக்குக் கடிதம் அனுப்பியுள்ள ஆயர்கள், தாங்கள் இத்திட்டத்தை எதிர்ப்பதற்கான அறிவியல், சட்ட மற்றும் அறநெறிக் கோட்பாடுகள், கடவுளின் செய்தியைப் பிரதிபலிப்பதாய் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கத்தோலிக்கர் சுற்றுச்சூழலின் பாதுகாவலர்களாகச் செயல்பட வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்து வருவதற்குப் பதிலளிக்குமாறும் ஆயர்களின் இக்கடிதம் அரசுத்தலைவரை வலியுறுத்தியுள்ளது.
மணிலா வளைகுடாப் பகுதியில் ஏறக்குறைய 26,230 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள 38 வீட்டுமனை விற்பனைத் திட்டங்கள் தவிர, 300 ஹெக்டேர் பரப்பளவில் Las Pinas, Paranaque ஆகிய நகரங்களிலும், 148 ஹெக்டேர் பரப்பளவில் மனிலாவிலும் ரியல் எஸ்டேட் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்கள் மனித வாழ்வையும், சுற்றுச்சூழலையும், வருங்கால வளங்களையும் பாதிக்கும் எனவும் பிலிப்பீன்ஸ் ஆயர்களின் கடிதம் எச்சரித்துள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.