2013-12-14 16:04:53

திருவருகைக்காலம் - 3ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 புதிய மில்லென்னியம் என்று அழைக்கப்படும் 2001ம் ஆண்டு துவங்கியதிலிருந்து சிறப்பான எண்கள் கொண்ட நாட்கள் நம் கவனத்தை ஈர்த்துவந்தன. 01.01.01, 02,02,02 என்று துவங்கி, சென்ற ஆண்டு, டிசம்பர் மாதம் 12.12.12 என்ற எண் கொண்ட நாள் முடிய, கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான எண்கள் கொண்ட இந்நாட்களை நாம் பல வழிகளில் சிறப்பித்து வந்தோம். இந்த எண்ணிக்கை கொண்ட நாட்கள் இன்னும் 100 ஆண்டுகள் சென்றபின்னரே மீண்டும் வரும் என்ற காரணத்தால் இந்நாட்களைச் சிறப்பித்தோம். சிறப்பு எண்கள் கொண்ட இந்நாட்களில், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, நாம் பயன்படுத்தும் எரிசக்தியைப் பாதுகாப்பது, மின்சக்தியைப் பாதுகாப்பது என்ற பல முயற்சிகளை சமுதாய அக்கறை கொண்ட பல உலக அமைப்புக்கள் மேற்கொண்டன. உலகைக் காப்பது என்ற முயற்சி ஒரு சில சிறப்பு நாட்களில் மட்டும் பேசப்படக்கூடிய கருத்து அல்ல... ஆண்டின் ஒவ்வொரு நாளும் பேசப்பட வேண்டிய உண்மை.
உலகைக் காப்பது, உலகை மீட்பது என்ற எண்ணங்களை ஒவ்வோர் ஆண்டும் நம் மனதில் விதைக்க தாய் திருஅவை உருவாக்கியுள்ள சிறப்பான காலம் திருவருகைக் காலம். திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று, 'மகிழும் ஞாயிறு' (Gaudete Sunday) என்று அழைக்கப்படுகிறது. நம்பிக்கையும், மகிழ்வும் கலந்த உணர்வுகளை இறைவாக்கினர் எசாயா இவ்விதம் கூறுகிறார்:
அந்நாள்களில், பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும் (இறைவாக்கினர் எசாயா 35: 1-2)
இறைவாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகள், கட்டுக்கடங்காமல் செல்லும் கற்பனையாகத் தோன்றுகின்றன. அற்புதம் இருக்க வேண்டியதுதான். அதற்காக, அபத்தமான கற்பனைகளை அற்புதம் என்று எப்படி சொல்வது? இறைவாக்கினர் சொல்லும் வார்த்தைகள், கனவுகள் நிறைந்த கவிதை வரிகள். நடைமுறை வாழ்வின் கணக்குகளுக்கு அப்பாற்பட்ட வரிகள்.

நடைமுறைக்கு ஒத்து வருவதையே நாம் நாள்தோறும் எண்ணி வந்தால்...
செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால்...
உலகில் கணக்குகள் எழுதப்பட்டப் புத்தகங்கள் மட்டுமே நிறைந்திருக்கும். கவிதைகளை, கனவுகளைச் சொல்லும் புத்தகங்கள் இருக்காது. மனித குலத்தில் ஆயிரம் பேர் கணக்கெழுதியபோது, ஓரிருவர் கவிதை எழுதியதால்தான் இவ்வுலகம் இன்னும் ஓரளவு அழகுடன் இன்று சுழன்று வருகிறது.
நாம் தற்போது கடந்துவந்த வாரத்தில் 11.12.13 என்ற எண்ணிக்கை கொண்ட ஒரு சிறப்பான நாள் இடம்பெற்றது. கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான எண்கள் கொண்ட நாட்களில் உலகின் பாதுகாப்பு என்ற எண்ணம் பேசப்பட்டதுபோல், 11.12.13 என்ற எண் கொண்ட கடந்த புதனன்று உலகப் பாதுகாப்பு என்ற சிந்தனை அதிகம் எழுந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்த நாளில் இவ்வுலகைக் காக்கும் சிந்தனைகளை அழியாதக் கருவூலமாய் விட்டுச்சென்ற ஒருவர் பிறந்தார் என்பது உண்மை. ஆம். 11.12, அதாவது, டிசம்பர் 11ம் தேதி மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த நாள். பாரதியார் பிறந்து 131 ஆண்டுகள் முடிந்து விட்டன. இன்னும் பல நூறு ஆண்டுகள் சென்றாலும் இத்தகைய ஒரு மனிதரை நாம் காண முடியுமா என்பது சந்தேகம்தான்.
ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தில், வாழ்நாளெல்லாம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த இந்தக் கவிஞர், விடுதலைக் கனவுகளை விதைத்துச் சென்றார். ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நாம் பெறவேண்டிய அரசியல் விடுதலையை மட்டும் அவர் பேசவில்லை. பல்வேறு வழிகளில் தளையுண்டு, சிறைபட்டிருந்த இந்திய சமுதாயத்தின் உண்மை விடுதலையைப் பற்றி அவர் அழகான கனவுகளை விதைத்துச் சென்றார். சாதியத் தளைகள், ஆண்-பெண் என்ற வேற்றுமைத் தளைகள் என அனைத்து வகையான விலங்குகளை உடைத்து விடுதலை பெறவேண்டும் என்று கனவையும், இயற்கை வளங்களைச் சரிவர பராமரித்து, நாட்டின் வளத்தைப் பெருக்கும் கனவையும் கண்டவர் பாரதியார். அவரைப்பற்றி இன்று பேசுவதற்கு, அவரது பிறந்தநாள் மட்டும் ஒரு காரணம் அல்ல; இன்றைய ஞாயிறு வழிபாட்டின் நாயகனாக விளங்கும் திருமுழுக்கு யோவானை நினைவுபடுத்துபவர் பாரதியார் என்பதும் மற்றொரு காரணம்.
தான் வாழ்ந்தது கடினமான ஒரு வாழ்வு என்றாலும், தனக்கு அடுத்தத் தலைமுறை விடுதலை பெற்று தலைநிமிர்ந்து வாழும் என்ற நம்பிக்கையுடன் கவிதைகளை உருவாக்கியவர் பாரதியார். பாரதி போலவே, தன் வாழ்வில் துன்பங்களைத் தாங்கினாலும், மக்களின் நம்பிக்கைக்கு வழிவகுத்தவர் திருமுழுக்கு யோவான்.
இவரைக் குறித்து இன்றைய நற்செய்தியில் இயேசு பேசும்போது, யோவான் வாழ்ந்த கடினமான வாழ்வை நினைவுபடுத்துகிறார். உண்மையான இறைவாக்கினர்கள் மெல்லிய ஆடை அணிந்து, மாளிகையில் வாழ்பவர்கள் அல்ல... பாலை நிலத்தில் பாறைகளோடு ஒரு பாறையாய் மாறி, இயற்கையின் கருணைக்கு விடப்பட்டவர்கள் என்பதை இயேசு நினைவுபடுத்துகிறார்.

மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை என்று இயேசுவால் புகழப்பட்டவர் திருமுழுக்கு யோவான். பாலை நிலத்தில் ஒலித்த யோவானின் குரலைக் கேட்க மக்கள் ஓடிச் சென்றனர். மக்களை வரவழைத்து, அவர்களுக்கு நம்பிக்கையையும், நற்செய்தியையும் கூறிய யோவான், மதத் தலைவர்களையும் உரோமைய அரசையும் வன்மையாகக் கண்டித்தார். இதனால் கதி கலங்கிய மதத் தலைவர்களும், ஏரோதும் அவரைச் சிறையில் அடைத்தனர். யோவானின் உடல் சிறையில் அடைபட்டிருந்தாலும், அவர் மனம் தனது மக்களின் விடுதலையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. அந்த விடுதலை, இயேசுவின் வழியே வருமா என்ற கேள்வியை ஏக்கத்துடன் கேட்கிறார் இன்றைய நற்செய்தியில்: வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?”

இந்தக் கேள்வியும், இதற்கு இயேசு தந்த பதிலும் ஒரு சில தெளிவுகளை, ஒரு சில வாழ்க்கைப் பாடங்களை நமக்குத் தருகின்றன. உலகின் செம்மறி என்று மக்களுக்கு தான் சுட்டிக்காட்டிய இயேசு, தனக்குப் பின்னர் முழு வீச்சில் பணியில் இறங்கியிருப்பார்... மதத் தலைவர்களையும், உரோமைய அரசையும் இந்நேரம் கதிகலங்கச் செய்திருப்பார் என்பது யோவானின் எதிர்பார்ப்பாக இருந்தது.
யோவானின் எதிர்பார்ப்புகளும், தனது கண்ணோட்டம், பணி வாழ்வு இவைகளும் வேறுபட்டவை என்பதைச் சொல்ல இயேசு தயங்கவில்லை. யோவான் எதிர்பார்த்த புரட்சி, ஆள்பவர்களை விரட்டி அடித்து, ஆட்சியைப் பிடித்து, மக்கள் வாழ்வை மாற்றுவது என்ற வரிசையில் அமைந்திருந்தது. இயேசுவின் புரட்சி இதற்கு நேர்மாறான, தலைகீழான புரட்சி. இந்தப் புரட்சி மக்கள் வாழ்வை மாற்றுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த புரட்சியைக் குறித்து இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவும் கூறியுள்ளார்:
திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். (எசாயா 35: 4) என்று எசாயா முழங்குகிறார். எசாயாவின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும், இறைவன் எப்படி பழிதீர்ப்பார் என்ற விவரம் அடுத்த வரிகளில் அடங்கியிருக்கும் என்று வாசிக்கத் தொடர்ந்தால், பெருத்த ஏமாற்றம் அங்கு நமக்குக் காத்திருக்கும். பழி தீர்ப்பது என்ற வார்த்தைகளைக் கேட்டதும் நம் மனங்களில் ஓடும் வழக்கமான, குறுகிய எண்ணங்களைக் கொண்டு வாசிப்பதால் வரும் ஏமாற்றம் இது.
அடுத்த வரிகளில் எசாயா கூறுவது இதுதான்:
அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; ... அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்;... துன்பமும் துயரமும் பறந்தோடும். (எசாயா 35: 5-6அ, 10)
பழிதீர்ப்பதற்கு இறைவன் தரும் இலக்கணம் இதுதான். இத்தகையப் 'பழிதீர்க்கும் படலத்தை' இயேசு தொடர்கிறார். பழிதீர்ப்பது என்றால், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற போக்கில், கணக்கு தீர்ப்பது என்பது ஒரு பொருள். ஆனால், பழி தீர்ப்பது என்றால் பழியை, குறையைத் தீர்ப்பது என்றும் பொருள் கொள்ளலாம்... இல்லையா? அவ்விதம் பழியைத் தீர்க்க, பழியைத் துடைக்க வந்தவர் இயேசு. மதத் தலைவர்களையும், அதிகார வர்க்கத்தையும் பழிதீர்க்காமல் இருந்த இயேசுவிடம் வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேள்விகள் எழுப்பிய யோவானுக்கு இயேசு கூறிய பதில் இதுதான்:
நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. (மத்தேயு நற்செய்தி 11: 4-5)
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இன்றைய உலகில் பலரது பழிதீர்க்கும் மந்திரம். இதற்கு நேர்மாறாக, பழியைத் தீர்க்கும் மந்திரங்களும் வழிகளும் உலகில் உண்டு. கண்களையும், மனதையும் திறந்து இவற்றைப் பார்க்க நாம் பழக வேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

கடந்த பல ஆண்டுகளில் நான் கேட்டவைகளில் என் மனதில் ஆழமாய் பதிந்துவிட்ட ஒரு செய்தி இது. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரமதான் பண்டிகை காலத்தில், Ahmad Khatib என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன் இஸ்ரயேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மை துப்பாக்கியை உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த வீரர்கள் Ahmadஐச் சுட்டனர்.
வீரர்கள் தங்கள் தவறை உணர்ந்ததும், உடனே அச்சிறுவனை இஸ்ரயேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். அவனது பெற்றோரையும் அழைத்துச் சென்றனர். Ahmadஐக் காப்பாற்ற முடியவில்லை. அந்த நேரத்தில் அந்தத் தாயும், தந்தையும் அற்புதம் ஒன்றைச் செய்தனர். கொல்லப்பட்ட தங்கள் மகன் Ahmadன் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தனர். அவர்கள் அந்த உறுப்பு தானத்தை இஸ்ரயேல் பகுதியில் இருந்த மருத்துவமனையிலேயே செய்ததைக் கேள்விப்பட்ட பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் கோபமடைந்தனர். ஆனால், கட்டாயம் வேறு பல பாலஸ்தீனியர்கள் மகிழ்ந்திருப்பர். தங்கள் மகனைக் கொன்றது இஸ்ரயேல் படைவீரர்கள் என்று தெரிந்தும், அந்தப் பகுதியிலேயே தங்கள் மகனின் உறுப்புக்களை அவர்கள் தானம் செய்தது பழி தீர்ப்பதில் ஓர் உயர்ந்த வகை.
Ishmael, Ablah என்ற அந்த பெற்றோர் எளிய மக்கள். அந்தப் பெற்றோர் எடுத்த முடிவைப்பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, அவர்கள் சொன்னது இதுதான்: "எங்கள் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ரயேல் மக்கள் இனிமேலாகிலும் சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த உறுப்புகளை நாங்கள் தானம் செய்தோம்." கண்ணுக்குக் கண், என்று பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் இஸ்ரயேல், பாலஸ்தீன மக்களிடையே, கண்ணற்றோருக்குக் கண் என்று சொல்லித்தரும் Ishmael, Ablah அவர்களின் பாடம், பழியைத் தீர்க்கும் ஓர் அழகிய பாடம்.
ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒரு சிலர் இப்படி இருப்பதாலேயே இந்த உலகம் இன்னும் மனிதர்கள் வாழும் உலகமாக இருக்கிறது. அளந்து, கணக்குப் பார்த்து அன்பு காட்டும் பலரது நடுவில், பயனேதும் கருதாமல், கணக்குப் பார்க்காமல் கவிதையாக, நல்ல கனவாக வாழும் எசாயா, யோவான், Ishmael, Ablah போன்ற இறைவாக்கினர்கள் தொடர்ந்து நம்மிடையே வாழவேண்டும் என்று வேண்டுவோம். கணக்குப் பார்த்து பழிதீர்க்கும் உலகை விட, நல்ல கனவுகள், கவிதைகள் வழியாக, பழிகளைத் தீர்ப்பதில் நம் உலகம் வளரவேண்டும் என செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.