2013-12-14 15:56:15

திருத்தந்தை பிரான்சிஸ், ஐரோப்பியத் தலைசிறந்த தொடர்பாளர்


டிச.14,2013. தேசிய மற்றும் உலகளாவியத் திருப்பயணங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த செய்திகள் மிகச் சிறப்பான முறையில் உலகினரை அடைந்துள்ளதைப் பாராட்டும் விதமாக, அவருக்கு அனைத்துலக தலைசிறந்த தொடர்பாளர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'Argil: ஐரோப்பிய மனிதர்' என்ற இந்த மதிப்புமிக்க அனைத்துலக விருதுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரை இவ்வெள்ளி மாலை பரிந்துரை செய்த ஐரோப்பிய குழு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஓர் உலகளாவியத் தலைசிறந்தத் தொடர்பாளர் என்று பாராட்டியுள்ளது. இவ்விருது, கிறிஸ்மஸ் விழாக்காலம் முடிந்து திருத்தந்தையிடம் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த பத்து மாதங்களில் எவ்விதப் புறத்தூண்டுதலுமின்றி சுய விருப்பத்தோடும், உண்மையோடும், கருத்து உறுதிப்பாட்டோடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகுக்குத் தனது கருத்துக்களை எடுத்துரைத்து வருகிறார் என அக்குழு கூறியுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனெய்ரோ, இத்தாலியின் லாம்பெதூசா, அசிசி போன்ற இடங்களில் திருத்தந்தையின் உரைகள் சாதாரணத்திலும் அசாதாரணமாக இருந்தன எனவும் பாராட்டியுள்ளது அக்குழு. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டின் மனிதர் என டைம் இதழ் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ANSA







All the contents on this site are copyrighted ©.