2013-12-14 16:06:20

37 ஆண்டுகளுக்குப் பின் நிலவில் மீண்டும் விண்கலம்


டிச.14,2013. ஏறக்குறைய கடந்த நாற்பது ஆண்டுகளில் பூமியிலிருந்து முதன்முறையாக நிலவில் ஒரு விண்கலனை இறக்கியுள்ளது சீனா.
'யுட்டு(Yutu)' அல்லது 'ஜேட் ராபிட்’(Jade Rabbit) என்ற ஆறு சக்கரங்களைக் கொண்ட விண்கலம், நிலவில், வானவில் குடா என்றழைக்கப்படும் எரிமலை கொண்ட, தட்டையான சமவெளிப் பரப்பில் இந்திய, இலங்கை நேரப்படி இச்சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
140 கிலோ கிராம் எடையுள்ள இந்த ஆளில்லா விண்கலம், 1970களில் முன்னாள் சோவியத் யூனியனும், அமெரிக்காவும் நிலவுக்கு அனுப்பிய விண்கலன்களில் இருந்ததைவிட மிகவும் நுட்பமான கருவிகளை எடுத்துச் சென்றுள்ளது. இதில் நிலவின் மண் மற்றும் தரையின் மேற்பரப்பைத் தாண்டி, ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்த ராடார் கருவியும் இருக்கிறது.
இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கிய பின்னர் மூன்று மாதங்களுக்கு ஆய்வுகளை நடத்தும் என சீன அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
சீனப் புராணத்தில்வரும் நிலவு தேவதையின் பெயரில் இவ்விண்கலம் பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாடு, முன்னாள் சோவியத் யூனியன் ஆகிய இரு நாடுகளுக்குப் பின்னர் மூன்றாவது நாடாக சீனா இம்முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆதாரம் : CNN







All the contents on this site are copyrighted ©.