2013-12-13 15:50:21

ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான் பணவீக்கம் அதிகம், மத்திய புள்ளியியல் துறை தகவல்


டிச.13,2013. ஆசிய நாடுகளில் மட்டுமின்றி, உலகிலேயே அதிகப் பணவீக்க விகிதத்தை கொண்டுள்ள நாடு இந்தியா என மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்த புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ள மத்திய புள்ளியியல் துறை அலுவலகம், ஆசியாவிலேயே 3வது பெரிய பொருளாதார நாடாக கருதப்படும் இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி குறைவாக இருப்பதுடன், விலைவாசியும் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியது.
இந்தக் குறைவான வளர்ச்சி மற்றும் அதிகளவிலான பணவீக்கம், மத்திய வங்கியின் கொள்கைகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது எனவும், கடந்த ஆண்டு தொழில்துறை வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வளர்ச்சி விகிதம் வெகுவாகச் சரிவடைந்துள்ளது எனவும், கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 8.4 விழுக்காடாக இருந்த தொழில்துறை வளர்ச்சி, நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1.8 விழுக்காடாகச் சரிவடைந்துள்ளது எனவும், செப்டம்பர் மாதத்தில் 2 விழுக்காட்டுக்குக் குறைவான வளர்ச்சியே இருந்துள்ளது எனவும் அவ்வலுவலகம் தெரிவித்தது.
மேலும், 2002ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டுவரை இந்தியாவில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட கறுப்பு பணம் ஏறக்குறைய 34 ஆயிரத்து 300 கோடி டாலர் என, வாஷிங்டனை மையமாகக் கொண்ட Global Financial Integrity (GFI) நிறுவனத்தின் ஆய்வி்னமூலம் தெரியவந்துள்ளது.
2011ம் ஆண்டில்மட்டும் வெளியே கொண்டு செல்லப்பட்ட கறுப்பு பணம் ஏறக்குறைய 8 ஆயிரத்து 493 கோடி டாலர் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கறுப்பு பணத்தை வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஆதாரம் : PTI







All the contents on this site are copyrighted ©.