2013-12-13 15:36:57

அமைதி இயலக்கூடியதே என்பதை உலகினருக்கு உணர்த்த வேண்டும், திருப்பீடச் செயலர்


டிச.13,2013. அமைதி இயலக்கூடியதே, அது கற்பனை அல்ல என்பதை உலகினருக்கு உணர்த்த வேண்டும் என, புதிய திருப்பீடச் செயலர் பேராயர் பியெத்ரோ பரோலின் திருப்பீடத்துக்கான அரசியல் தூதர்களிடம் இவ்வெள்ளிக்கிழமையன்று கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவதுபோல, போர்களையும் மோதல்களையும் உரையாடல்மூலம் வெற்றிகொள்ளும் ஒரே மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு, திருஅவை தன்னை அர்ப்பணித்துள்ளது என்றும் கூறினார் பேராயர் பரோலின்.
தனது புதிய பணியேற்புக்குத் தூதரக அதிகாரிகள் வழங்கிய வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த பேராயர் பரோலின், உலகின் பல பகுதிகள் போராலும், ஏழ்மையாலும் காயப்பட்டுக் கிடக்கின்றன, ஒவ்வொரு மனிதரின் மாண்பு மதிக்கப்படவும் உலகில் அமைதி நிலவவும் திருஅவை எடுக்கும் முயற்சிகளுக்கு, தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் கோரினார்.
ஒன்றிணைந்து சேர்ந்து செயல்படுவோம் என்பதை தனது உரையில் வலியுறுத்திப் பேசினார் பேராயர் பரோலின்.
இத்தாலியரான பேராயர் பியெத்ரோ பரோலின், 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் திருப்பீடச் செயலராக நியமனம் செய்யப்பட்டார். இவர் இதற்கு முன்னர் வெனெசுவேலா நாட்டுக்குத் திருப்பீடத் தூதராகப் பணியாற்றி வந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.