2013-12-12 12:05:47

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உலக அமைதி தினச் செய்தி


“சகோதரத்துவம், அமைதிக்கு அடித்தளமும் வழியும்”

உலக அமைதி தினத்துக்கான இந்த எனது முதல் செய்தியில், உங்கள் எல்லாருக்கும், தனிப்பட்ட மற்றும் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதர் இதயத்திலும், ஒருவர் ஒருவருடன் தோழமையுணர்வுடன் வாழத் தூண்டும் சகோதரத்துவத்துக்கான கட்டுக்கடங்காத ஏக்கம் உட்பட, ஒரு முழுமையான வாழ்வுக்கான ஆவல் இருக்கின்றது. இதில் பகைவர்களையோ அல்லது போட்டியாளர்களையோ நாம் காண்பதில்லை, மாறாக, ஒருவர் ஒருவரை ஏற்று அணைக்கும் சகோதர சகோதரிகளைக் காண்கிறோம்.
நாம் ஒருவர் ஒருவருடன் உறவுகொண்டு வாழவேண்டியவர்கள் என்பதால், சகோதரத்துவம் இன்றியமையாத மனிதப் பண்பாக உள்ளது. இந்த வாழ்வு குறித்த உயிர்த்துடிப்புள்ள விழிப்புணர்வு, ஒவ்வொரு மனிதரையும் உண்மையான சகோதரியாக அல்லது சகோதரராகப் பார்த்து அவ்விதம் அவர்களை நடத்த வைக்கின்றது. சகோதரத்துவம் இன்றி, ஒரு நீதியான சமூகத்தையும், உறுதியான மற்றும் நிலைத்த அமைதியையும் கட்டியெழுப்ப இயலாது. சகோதரத்துவம், பொதுவாக, குடும்பத்தில் முதலில் கற்றுக்கொள்ளப்படுகின்றது என்பதை நாம் நினைவில் இருத்தவேண்டும். இதில், குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பொறுப்புடன் தங்கள் பங்கை இணைந்து ஆற்றுவதற்கு, குறிப்பாக, தந்தைக்கும் தாய்க்கும் நன்றி உரித்தாகுக. குடும்பம், அனைத்துச் சகோதரத்துவத்தின் ஊற்று என்ற முறையில் இது, அமைதிக்கு அடித்தளமும் முதல் பாதையுமாக உள்ளது. ஏனெனில், குடும்பம், தனது அன்பை, தன்னைச் சுற்றியுள்ள உலகத்துக்குப் பரப்புவதற்குத் தன்னிலே அழைப்பு பெற்றுள்ளது.
இன்றைய உலகில் எப்பொழுதும் அதிகரித்துவரும் ஒருவர் ஒருவரிடையேயான தொடர்புகளும், பிணைப்புகளும், ஒன்றிப்பு மற்றும் நாடுகளின் பொதுவான நியதிகளை அழுத்தமாக நாம் அறிய வைக்கின்றது. ஒருவர் ஒருவரை ஏற்று அக்கறைகாட்டும் சகோதர சகோதரிகளால் அமைந்த ஒரு குழுவை உருவாக்குவதற்கான அழைப்பின் வித்துக்களை, வரலாற்றின் இயக்கங்களிலும், சமூகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இனங்களின் பன்மைத்தன்மையிலும் நாம் பார்க்கிறோம். ஆயினும், இந்த அழைப்பு, “அக்கறையற்ற தாராளமயமாக்கலால்” குறிக்கப்பட்ட இன்றைய உலகில் மறுக்கப்படுகிறது, மறக்கப்படுகின்றது. இது நமக்குள்ளே முடங்கிப்போக வைக்கின்றது, அடுத்தவரின் துன்பங்களை உணர்வற்றுப் பார்ப்பதற்கும் காலப்போக்கில் நம்மைப் பழக்கப்படுத்திவிடுகின்றது.
உலகின் பல பகுதிகளில், அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக, குறிப்பாக, வாழ்வுரிமை மற்றும் மத சுதந்திர உரிமைக்கு எதிராக இடம்பெறும் கடும் குற்றங்களுக்கு முடிவு இருப்பதுபோல் தெரியவில்லை. மனித வியாபாரம் எனும் துன்பகரமான நிகழ்வில், மனித வாழ்வும், பிறரின் நம்பிக்கையிழந்த நிலையும் பழிபாவங்களுக்கு அஞ்சாத வகையில் சூறையாடப்படுவது, இன்னும் தீர்க்கப்படாத ஓர் எடுத்துக்காட்டாய் இருக்கின்றது. வெளிப்படையாய் இடம்பெறும் ஆயுதம் ஏந்திய சண்டைகளுடன், பொருளாதார மற்றும் நிதித் துறைகளில் இடம்பெறும் சண்டைகள் ஏற்படுத்தும் கடும் விளைவுகள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. இச்சண்டைகளும், ஆயுதம் ஏந்திய சண்டைகளுக்கு இணையாக, மனித உயிர்களையும், குடும்பங்களையும், தொழில்களையும் அழிக்கின்றன.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சுட்டிக்காட்டியதுபோன்று, உலகத் தாராளமயமாக்கல் நம்மை அண்டை வீட்டராக்குகின்றது, ஆனால் சகோதரர்களாக ஆக்குவதில்லை. சமத்துவமின்மை, வறுமை, மற்றும் அநீதியின் பல சூழல்கள், சகோதரத்துவம் அதிகமாகக் குறைபடுவதை மட்டுமல்ல, ஒரு தோழமைக் கலாச்சாரம் இல்லாமல் இருப்பதன் அடையாளங்களாக உள்ளன. மட்டுமீறிய தனியுரிமைக் கோட்பாடு, தன்னையே மையப்படுத்தும் நான் எனும் முனைப்பு, பொருளாதார நுகர்வு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட புதிய கருத்துருவாக்கங்கள், சமூகப் பிணைப்புகளைப் பலவீனப்படுத்துகின்றன. “தூக்கி எறியும்” மனநிலைக்கு எண்ணெய் ஊற்றி, புறக்கணிக்கும் நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இந்த மனநிலை, “பயனற்றவர்கள்” எனக் கருதப்படுபவர்கள் மற்றும் மிகவும் நலிந்தவர்களைக் கைவிடவும் செய்கின்றது. இவ்வாறு, நீ எனக்குச் செய்வாய் என்பதால் நான் உனக்குச் செய்கிறேன் என்ற மாதிரிச் செயல்படுவது(do ut des) மனிதக் கூட்டுவாழ்வில் அதிகரித்து வருகிறது. இது தன்னலமானதாகவும், பிறரது போக்கில் தலையிடுவதாகவும் உள்ளது.
அதேநேரம், இக்காலத்திய நன்னெறி அமைப்புகள், சகோதரத்துவத்தின் உண்மையான பிணைப்புகளை ஏற்படுத்தத் திறனற்று இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஏனெனில், அவை, நம் அனைவருக்கும் பொதுவான கடவுளாம் வானகத் தந்தையை வாழ்வில் ஏற்காததே காரணமாகும். மனிதருக்குள் உண்மையான சகோதரத்துவம் இருக்கின்றது என்றால், அது, எல்லாவற்றுக்கும் மேலான தந்தை ஒருவர் இருக்கிறார் என்பதைக் காட்டி, அவர் இருக்க வேண்டும் என்பதையும் கோருகிறது. இந்தத் தந்தைமையை ஏற்பதிலிருந்து மனிதச் சகோதரத்துவம் வலுப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு மனிதரும், பிறர்மீது அக்கறை காட்டும் “அடுத்திருப்பவராக”வும் மாறுகிறார்.
“உன் சகோதரன் எங்கே?”(தொ.நூ.4,9)
2. சகோதரத்துவத்துக்கான மனிதரின் அழைப்பை நன்றாகப் புரிந்து கொள்வதற்கும், அதை உணருவதற்குமான பாதையில் நிற்கும் தடைகளை மேலும் தெளிவாக கண்டுணர்வதற்கும், அவற்றை மேற்கொள்வதற்கான வழிகளை இனங்காணவும் கடவுளின் திட்டத்தின் அறிவில் வழிநடத்தப்படத் தன்னை அனுமதிப்பது முதலும் முக்கியமுமாகும். இது, திருமறை நூலில் சிறந்த முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
படைப்பு பற்றிய விவிலிய விளக்கத்தின்படி, அனைத்து மனிதரும் ஆதாம், ஏவாள் என்ற பொதுவான பெற்றோரின் வழிவந்தவர்கள். கடவுளின் உருவிலும், சாயலிலும்(தொ.நூ.1,26) படைக்கப்பட்ட இத்தம்பதியரிடமிருந்து ஆபேலும் காயினும் பிறந்தனர். இந்த முதல் குடும்பத்தின் கதையில் சமுதாயத்தின் தொடக்கங்களையும், தனிமனிதர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவுகளின் பரிணாமத்தையும் நாம் பார்க்கிறோம்.
ஆபேல் ஓர் ஆயன். காயின் ஒரு விவசாயி. அவர்களின் தொழில் மற்றும் கலாச்சாரத்திலும், இவர்கள் கடவுளோடும் படைப்போடும் உறவு கொள்ளும் விதத்திலும் வேறுபாடு இருந்தபோதிலும் இவர்களின் ஆழமான தனித்துவமும், அவர்களின் அழைப்பும் சகோதரர்களாக இருப்பதாகும். காயின் ஆபேலைக் கொன்றது, இவ்விருவரும் சகோதரர்களாக இருக்கவேண்டுமென்ற இவர்களின் அழைப்பின் புறக்கணிப்புக்குச் சான்றாக இருக்கின்றது. இவர்களின் கதை, (தொ.நூ.4,1-16) மனிதர் அனைவரும் ஒருவர் ஒருவர்மீது அக்கறைகொண்டு ஒன்றிணைந்து வாழ்வதற்கு விடுக்கப்பட்டுள்ள அந்தக் கடினமான பணியைக் கோடிட்டுக் காட்டுகின்றது. தனது மந்தையில் கொழுத்த தலையீறுகளைக் கடவுளுக்குக் காணிக்கையாக்கின ஆபேல்மீது அவர் கொண்டிருந்த சிறப்பு அன்பை ஏற்கத் திறனில்லாத காயின் பொறாமையால் ஆபேலைக் கொன்றான். “ஆண்டவர் ஆபேலையும், அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். ஆனால் காயினையும், அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை”(தொ.நூ.4,3-5). இவ்வாறு காயின் ஆபேலை தனது சகோதரனாக ஏற்கவும், அவனோடு சரியான உறவு கொள்ளவும், பிறர்மீது அக்கறைகொண்டு பிறரைப் பாதுகாக்கவேண்டுமென்ற அவனது பொறுப்பை ஏற்று கடவுளின் பிரசன்னத்தில் வாழவும் மறுத்தான். உன் சகோதரன் எங்கே? என கடவுள் காயினிடம் கேள்வி கேட்டதன்மூலம், அவன் தனது நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்குமாறுச் செய்கிறார். கடவுள் கேட்டதற்குப் பதில் மொழியாக, “எனக்குத் தெரியாது. நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?”(தொ.நூ.4,9) என்று சொன்னான் காயின். பின்னர் தொடக்கநூல் சொல்கிறது : காயின் ஆண்டவரின் பிரசன்னத்தைவிட்டுத் தொலைவில் சென்றான்(தொ.நூ.4,16) என்று.
காயின் தனது சகோதரத்துவப் பிணைப்பையும், அதேநேரம், தனது சகோதரன் ஆபேலுடன் அவனைச் சேர்த்துவைத்த அன்னியோன்னிய பிணைப்பையும், தோழமையையும் புறக்கணிப்பதற்கு அவனை நடத்திச்சென்ற உண்மையான காரணங்கள் என்ன என்று நாம் நம்மையே கேட்கவேண்டியுள்ளது. “பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும்”(தொ.நூ.4,7) என்று கடவுளே, காயினைக் கண்டித்து, அவன் தீமையோடு கொண்டிருந்த பிணைப்பைக் கடிந்து கொள்கிறார். எனினும், காயின் தீமையை எதிர்த்துச் செயல்பட மறுக்கிறான். மாறாக, “தனது சகோதரனுக்கு எதிராக தனது கரத்தை ஓங்கத்”(தொ.நூ.4,8) தீர்மானித்தான். கடவுள் திட்டத்தையும் அவமதித்தான். இவ்வாறு காயின், கடவுளின் மகனாகவும், சகோதரத்துவத்தில் வாழவுமான அவனது தொடக்ககால அழைப்பைக் குலைத்தான்.
சகோதரத்துவத்துக்கு நாம் இயல்பாகவே அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும், ஆயினும், அந்த அழைப்பை மறுதலிக்கும் துயர்நிறைந்த சக்தியையும் நாம் கொண்டிருக்கிறோம் என்பதையும் காயின் ஆபேல் கதை நமக்கு உணர்த்துகிறது. இதற்கு, தன்னலமிகுந்த நம் அன்றாட நடவடிக்கைகள் சாட்சி சொல்கின்றன. இவை, பல சண்டைகளுக்கும், பல அநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளன. பலர் அவர்களின் சகோதர, சகோதரிகளின் கரங்களிலே இறக்கின்றனர். நாம் ஒருவர் ஒருவருக்காக வாழவும், தன்னையே வழங்கவும், தோழமையுடனும் வாழப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இவர்கள தங்களில் பார்ப்பதற்குத் திறனற்றவர்கள்.
“நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்”(மத்.23,8)
3. தந்தையாம் கடவுளால் இவ்வுலக மக்களுக்குள் வைக்கப்பட்டுள்ள சகோதரத்துவத்துக்கான ஏக்கத்துக்கு அவர்களால் எப்போதாவது முழுமையாகப் பதிலளிக்க முடியுமா? அக்கறையின்மை, தன்னலம் மற்றும் வெறுப்புணர்வை அவர்கள், தங்களது சக்தியால் மட்டுமே எப்போதும் வெல்ல முடியுமா? இவர்கள், சகோதரர் மற்றும் சகோதரிகளின் நியாயமான வேறுபாடுகளை ஏற்க இயலுமா? இந்தக் கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
“ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் கடவுள். நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்”(மத்.23,8-9) என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை விரித்துரைப்பதன்மூலம் அவரால் சொல்லப்பட்ட பதிலை நம்மால் தொகுக்க முடியும். சகோதரத்துவத்தின் அடித்தளம், கடவுள் தந்தையாக இருக்கிறார் என்ற அவரது தந்தைமையில் காணப்படுகின்றது. பொருள் விளங்காத, வரலாற்றில் தந்தை எனச் செயல்படாத பொதுவான தந்தைமை பற்றி நாம் இங்கு பேசவில்லை, மாறாக, ஒவ்வொரு மனிதர் மீதும் கடவுள் கொண்டிருக்கும் மிக நெருக்கமான, தனிப்பட்ட அன்பு பற்றிய அவரின் தந்தைமை பற்றி பேசுகிறோம்(மத்.06,25-30). இந்தத் தந்தைமை, சகோதரத்துவத்தை ஆற்றலுடன் உருவாக்குகிறது. ஏனெனில், ஒருமுறை வரவேற்கப்பட்ட கடவுளின் அன்பு, ஒருமைப்பாட்டுணர்வுக்கும், உண்மையான பகிர்தலுக்கும் நம்மைத் திறக்க வைத்து, நம் வாழ்வையும், பிறருடனான உறவுகளையும் மாற்றும் மிக வல்லமைமிக்க கருவியாக மாறுகிறது.
மனிதச் சகோதரத்துவம் சிறப்பான முறையில், இயேசு கிறிஸ்துவில், இயேசு கிறிஸ்துவால் அவரது மரணம் மற்றும் உயிர்ப்பு வழியாகப் புத்துயிரளிக்கப்படுகிறது. மனிதர்கள் தங்களால் பிறப்பிக்க முடியாத அந்தச் சகோதரத்துவத்தின் உறுதியான அடித்தளம் திருச்சிலுவையாகும். மனிதரை மீட்பதற்காக மனித உருவில் தோன்றி சிலுவையில் இறக்கும்வரை தந்தையை அன்புகூர்ந்த(பிலி.2,8) இயேசு கிறிஸ்து தமது உயிர்ப்பின்மூலம், நம் அனைவரையும் ஒரு புதிய மனித சமுதாயமாக்கினார். சகோதரத்துவத்துக்கான நம் அழைப்பின் முழு உணர்வை உள்ளடக்கிய கடவுளின் திட்டத்தோடு முழு ஒன்றிப்பில் நம்மை ஒரு புதிய மனிதகுலமாக்கினார்.
இவையனைத்திலும் இயேசு தமது தந்தையின் திட்டத்தின் முதன்மையை ஏற்று, தொடக்கமுதல் அவரின் திட்டத்தை நிறைவேற்றினார். ஆயினும், தந்தையின் மீதிருந்த அன்பால் தம்மை மரணத்துக்குக் கையளித்த கிறிஸ்து, நம் அனைவருக்கும் உறுதியான மற்றும் புதிய கோட்பாடாக மாறினார். நாம் அவரில் சகோதர, சகோதரிகளாக நம்மை நோக்குவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். அதே தந்தையின் பிள்ளைகளாகக் கருதப்படவும் அழைக்கப்பட்டுள்ளோம். அவரே உடன்படிக்கை. அவரில் நாம் சகோதர, சகோதரிகளாக கடவுளோடும், ஒருவர் ஒருவரோடும் ஒப்புரவாகிறோம். இயேசுவின் சிலுவை மரணம், மக்களுக்கிடையே, உடன்படிக்கையின் மக்களுக்கும், அந்நேரம்வரை நம்பிக்கை இழந்திருந்த புறவின மக்களுக்கும் இடையே இருந்த பிரிவினைகளுக்கு முடிவைக்கொண்டு வந்தது. ஏனெனில், புறவின மக்கள் வாக்குறுதியின் உடன்படிக்கைகளில் அங்கமாகாமல் இருந்தனர். எபேசியருக்கு எழுதிய திருமடலில் நாம் வாசிப்பது போன்று, இயேசு கிறிஸ்துவே அனைத்து மக்களையும் தம்மில் ஒப்புரவாக்கியவர். அவரே அமைதி அருள்பவர். இரண்டு இனத்தவரையும் பிரித்துநின்ற பகைமை என்னும் சுவரைத் தகர்த்தெறிந்து அவர்களை ஒன்றுபடுத்தினார். அவர் தம்மில் ஒரே மக்களாக, ஒரே புதிய மனிதராக, ஒரே புதிய மனித சமுதாயமாக படைத்தார்(எபே.2:14-16).
கிறிஸ்துவின் வாழ்வை ஏற்று அவரில் வாழும் அனைவரும் கடவுளைத் தந்தையாக ஏற்கின்றனர், தங்களையே முழுமையாக அவரிடம் கையளிக்கின்றனர், எல்லாவற்றுக்கும் மேலாக அவரை அன்புசெய்கின்றனர். ஒப்புரவாக்கப்பட்ட மனிதர், அனைவருக்கும் தந்தையாக, கடவுள் இருப்பதைப் பார்க்கிறார். அதன் பயனாக, எல்லாருக்கும் திறந்தமனம் கொண்ட சகோதரத்துவ வாழ்வு வாழவும் தூண்டப்படுகிறார். கிறிஸ்துவில் அடுத்தவர் வரவேற்கப்பட்டு, அந்நியராக இல்லாமல், போட்டியாளராக அல்லது பகைவராக இல்லாமல், கடவுளின் மகனாக அல்லது மகளாக, சகோதர, சகோதரியாக அன்பு செய்யப்படுகிறார். கடவுளின் குடும்பத்தில் அதே தந்தையின் பிள்ளைகளாகவும் இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவோடு ஒன்றாகி விடுகின்றனர். திருமகனில் பிள்ளைகளாகவும் உள்ளனர். இந்நிலையில் “தூக்கி எறியப்படக்கூடியவர்கள்” என்று யாரும் இல்லை. எல்லா மனிதரும் சமமான மற்றும் மீறமுடியாத மாண்பை அனுபவிக்கின்றனர். அனைவரும் கடவுளால் அன்புசெய்யப்படுகின்றனர். சிலுவையில் மரித்து நம் எல்லாருக்காகவும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் குருதியால் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இதனாலேயே எந்த ஒரு மனிதரும், தம் சகோதர, சகோதரிகளின் நிலைகுறித்து அக்கறையின்றி இருக்க முடியாது.
சகோதரத்துவம், அமைதிக்கு அடித்தளமும் வழியும்
4. சகோதரத்துவம், அமைதிக்கு அடித்தளமும் வழியும் என்பதை உணருவது எளிது எனச் சொல்லப்படுகிறது. இதற்கு எனக்கு முந்தைய திருத்தந்தையர்கள் எழுதிய சமூகத் சுற்றுமடல்கள் மிகவும் உதவியாக இருக்கும். திருத்தந்தை ஆறாம் பவுல் எழுதிய, மக்களின் முன்னேற்றம்(Populorum Progressio), திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் எழுதிய சமூக நியதிக்கான அக்கறை(Sollicitudo Rei Socialis) ஆகிய சுற்றுமடல்களில் கொடுக்கப்பட்டுள்ள அமைதி பற்றிய பொருள் விளக்கங்களைப் பார்த்தாலே போதுமானது. மக்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றமே அமைதியின் புதிய பெயர் என இந்த முதல் சுற்றுமடலிலிருந்து நாம் அறிகிறோம். அமைதி என்பது, தோழமைக்கான தேவை(opus solidarietatis) என்பதை இந்த இரண்டாவது சுற்றுமடலிலிருந்து நாம் முடிவு செய்கிறோம்.
தனிநபர்கள் மட்டுமல்ல, நாடுகளும் சகோதரத்துவ உணர்வில் ஒன்றையொன்று சந்திக்க வேண்டுமென திருத்தந்தை ஆறாம் பவுல் சொல்லியிருக்கிறார். “ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்ளும் இந்தப் பரஸ்பர உணர்வில், இந்த நட்புறவில், இந்தப் புனிதமான ஒன்றிப்பில், மனிதகுலத்தின் பொதுவான எதிர்காலத்தைக் கட்டுவதற்கு நாமும் ஒன்றுசேர்ந்து வேலை செய்ய வேண்டும்” என திருத்தந்தை சொல்கிறார். முதலில் இந்தக் கடமை தனிச்சலுகை பெற்றவர்களுடையது. அவர்களின் கடமைகள் மனித மற்றும் இயல்புகடந்த சகோதரத்துவத்தில் வேரூன்றப்பட்டு மூன்று வழிகளில் வெளிப்படுத்தப்படுகின்றன. அவையானவன : பணக்கார நாடுகள், வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு உதவுவதை எதிர்பார்க்கும் தோழமை, வலுவானவர்களுக்கும் நலிந்தவர்களுக்கும் இடையேயான உறவுகளை மிகவும் நியாயமான முறைகளில் சீர்செய்வதை எதிர்நோக்கும் சமூக நீதி, எல்லாருக்கும் மனிதம் நிறைந்த உலகை உரிமைச் சொத்தாக வழங்கும் உலகளாவிய பிறரன்பு. மனிதாபிமானம் நிறைந்த ஓர் உலகில் ஒருவரது வளர்ச்சிக்கு அடுத்தவர் தடையாக இல்லாத நிலை இருக்கும். இத்தகைய உலகில் ஒவ்வொருவரிடமும் கொடுக்கவும் பெறவும் ஏதாவது இருக்கும்.
அமைதி, தோழமையை ஏற்படுத்தும் ஒரு பணி என்று நாம் கருதினால், அதன் முக்கிய அடித்தளம் சகோதரத்துவம் என்பதை ஏற்கத் தவறமாட்டோம். இரண்டாம் ஜான் பால் கூறியிருப்பதுபோன்று, அமைதி, பகுக்கமுடியாத அளவுக்கு நன்மையளிப்பதாகும். இது ஒன்றில், எல்லாருக்கும் நன்மையாக இருக்கும் அல்லது யாருக்கும் நன்மையாக இருக்காது. ஒவ்வொருவரும் பொதுநலனுக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டுமென்ற நிலையான மற்றும் விடாமுயற்சி நிறைந்த மனஉறுதியுடன் தோழமையுணர்வால் வழிநடத்தப்பட்டால் மட்டுமே, அமைதி, வாழ்வின் உயரிய பண்பாகவும், மனிதம் நிறைந்த மற்றும் உறுதியான வளர்ச்சியாகவும் இருக்கும். அதை உண்மையிலே அடையமுடியும் மற்றும் அனுபவிக்க முடியும். இதற்கு என்ன அர்த்தம் என்றால், “இலாப நோக்கத்துடனோ” அல்லது “அதிகாரத் தாகத்துடனோ” யாரும் வழிநடத்தப்படக் கூடாது. பிறரைச் சுரண்டுவதைவிட பிறர் நலனுக்காக, “தன்னையே இழப்பதற்கும்”, நமது சொந்த ஆதாயத்துக்காக அவர்களை அடக்குவதற்குப் பதிலாக அவர்களுக்குச் சேவை செய்வதற்கும் ஆவல்கொள்வது இதற்குத் தேவைப்படுகிறது. “இந்த அடுத்தவர்”, ஓர் ஆளாக, மக்களாக அல்லது நாடாக, யாராக இருந்தாலும், அவர் ஏதோ ஒருவிதக் கருவியாகப் பார்க்கப்பட்டு, அவரின் வேலைத் திறனும், உடல் வலிமையும் குறைந்த செலவில் சுரண்டப்பட்டு, அவர் இனிமேல் பயன்படமாட்டார் என்ற நிலை வரும்போது அவரைப் புறக்கணிக்கும் நடவடிக்கையைத் தவிர்த்து, அவர் நமது “அடுத்திருப்பவர்”, “உதவுபவர்” என்று நோக்கப்பட வேண்டியது முக்கியம்.
நமது “அடுத்திருப்பவர்”, தனது சொந்த உரிமைகளோடு வாழும் மனிதர் மற்றும் எல்லாருடனும் அடிப்படையான சமத்துவத்தைக் கொண்டிருப்பவர் என்றுமட்டும் கருதி அவர் அன்பு செய்யப்படக் கூடாது. ஆனால் அவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு, தூய ஆவியின் நிலையான செயலில் வைக்கப்பட்டு, வானகத் தந்தையாம் கடவுளின் உயிருள்ள சாயலாக, மற்றொரு சகோதர, சகோதரியாக இருக்கிறார் என்ற உணர்வில் அன்பு செய்யப்பட வேண்டும். திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் சொல்லியிருப்பதுபோல, கடவுள் எல்லாருக்கும் பொதுவான தந்தை என்பதையும், கிறிஸ்துவில் அனைவரும் சகோதரர் –“திருமகனில் பிள்ளைகள்”- என்பதையும் உணர்ந்து, தூய ஆவியின் தன்னையே வழங்கும் செயல் மற்றும் அவரின் பிரசன்னம் பற்றிய விழிப்புணர்வு, உலகு பற்றிய நமது கண்ணோட்டத்துக்கு ஒரு புதிய விளக்கத்தை வழங்குகிறது.
சகோதரத்துவம், ஏழ்மையை ஒழிப்பதற்கு ஒரு முன்நிபந்தனை
5. மக்களினங்களுக்கு இடையேயும், மனிதர்களுக்கிடையேயும் சகோதரத்துவம் குறைவுபடுவது ஏழ்மைக்கு குறிப்பிடத்தக்க காரணம் என, எனக்கு முந்தைய திருத்தந்தை “உண்மையில் பிறரன்பு”(Caritas in Veritate) என்ற அவரது சுற்றுமடலில் உலகுக்கு நினைவுபடுத்தியுள்ளார். பல சமூகங்களில், உறுதியான குடும்பங்களும், குழு உறவுகளும் குறைவுபடுவதால் உறவுகளின் கடுமையான ஏழ்மையை நாம் அனுபவித்து வருகிறோம். துன்பநிலை, ஓரங்கட்டப்படுதல், தனிமை, பலவகை நோய்களின் காரணமாக மற்றவரைச் சார்ந்திருக்கும் நிலைகள் ஆகியவை அதிகரித்து வருவது பற்றிக் கவலைப்படுகிறோம். குடும்பங்கள் மற்றும் குழுக்களின் இதயத்திலுள்ள சகோதரத்துவ உறவுகளை மீண்டும் கண்டுணர்ந்து அவற்றை மதிப்பதன் வழியாகவும், மனித வாழ்வின் ஓர் அங்கமாகிய இன்ப துன்பங்களையும் வெற்றி தோல்விகளையும் பகிர்வதன் வழியாகவும் மட்டுமே இந்த வகையான ஏழ்மையை நாம் ஒழிக்க முடியும், மேற்கொள்ள முடியும்.
மேலும், பணம் தொடர்பான ஏழ்மை குறைந்து விட்டதை ஒரு பக்கம் நாம் பார்த்தாலும், மறு பக்கம், ஏதேதோ துறைகளில் மிகக் கொடிய ஏழ்மை இருப்பதை நாம் கண்டுணராமல் இல்லை. அதாவது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்வோர் மத்தியில் அல்லது ஒரு குறிப்பிட்ட பாரம்பரிய பழக்கவழக்கங்களை வாழ வேண்டி இருப்போரிடையே ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. மாண்பிலும், அடிப்படை உரிமையிலும் சமத்துவத்தைக் கொண்டுள்ள மக்கள், பொருள்வளம், அரசுச் சேவைகள், கல்வி வசதிகள், நலவாழ்வு உதவிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும். அவ்வாறு பெறவும், ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வுத் திட்டங்களை வெளிப்படுத்தவும், நிறைவேற்றவும், முழுமனிதராக வளர்ச்சி பெறவும் தேவையான சகோதரத்துவக் கோட்பாட்டை ஊக்குவிக்கும் வீரியமிக்க கொள்கைகள் தேவைப்படுகின்றன.
வருவாய்க்களுக்கிடையே காணப்படும் அதிகப்படியான சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும் கொள்கைகள் தேவை என உணரப்படுகின்றது. சமுதாயப் பாதுகாவல் எனப் பொதுவாக புரிந்துகொள்ளப்படுகின்ற திருஅவையின் போதனையை நாம் மறக்கக் கூடாது. புனித தாமஸ் அக்குய்னாஸ் சொல்வதுபோல, “மக்கள் பொருள்கள்மீது உரிமை கொண்டாடுவது” சட்டரீதியானதும் தேவையானதுமாக இருக்கின்றபோதிலும், பொருள்கள் தங்கள் பயன்பாட்டுக்கு மட்டும் சொந்தமானவை என்று கருதாமல், பிறரும் அவற்றால் பயனடையலாம், அவை பிறருக்கும் பயன்படும்வகையில் அவர்களுக்கும் சொந்தமானவை, அவை அவர்களின் பொருள்களும்கூட என்ற உணர்வு மக்களில் மேலோங்கும்போதே இது உண்மையாகும்.
இறுதியாக, சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதற்கு மற்றொரு முறையும் உள்ளது. அது ஏழ்மையைப் போக்குவதற்கு உதவும். இது மற்ற அனைத்துக்கும் அடித்தளமாக அமையும். தன்னடக்கமான அதேவேளை, போதுமென்ற மனநிலையில் வாழ்பவர்கள், தங்களின் சொத்துக்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்பவர்கள், இப்படி வாழ்வோர் பிறரோடு சகோதரத்துவ உறவை அனுபவிக்கின்றனர். இயேசு கிறிஸ்துவைப் பின்செல்வதற்கும், உண்மையான கிறிஸ்தவராக வாழ்வதற்கும் இது அடிப்படையானது. ஏழ்மை வார்த்தைப்பாடு கொடுக்கும் துறவியருக்கு மட்டுமல்ல, தங்களின் அயலாரோடு கொள்ளும் சகோதரத்துவ உறவு இதுதான் என உறுதியாக நம்பும் குடும்பங்கள் மற்றும் பொறுப்புள்ள குடிமக்களுக்கும் இது பொருந்தும்.
பொருளாதாரத்தில் சகோதரத்துவத்தை மீண்டும் கண்டுணர்தல்
6. இக்காலத்திய கடும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகள், கடவுளிடமிருந்தும் தனது அடுத்தவரிடமிருந்தும் மனிதரை அதிகமாக விலக வைப்பதிலும், பொருள்களை அடையவேண்டுமென்ற பேராசையிலும் ஒருபுறம் மூலத்தைக் கொண்டிருக்கின்றன. மறுபுறம், ஒருவருக்கிடையேயானதும், சமுதாயத்தோடு உள்ளதுமான உறவுகள் சுருங்கிவிடுவதிலும் தொடங்குகின்றன. இந்நெருக்கடிகள், வளமான பொருளாதாரத்துக்கான கொள்கைகளை முற்றிலும் புறந்தள்ளி, பொருளின் பயன்பாடு, அதனை ஈட்டல் என்பதிலே மனநிறைவு, மனமகிழ்ச்சி மற்றும் முழுபாதுகாப்பு இருப்பதாக நினைக்க வைக்கின்றன. 1979ம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உலகினரின் கவனத்தை ஈர்த்தபடி, பொருள்கள் குவிந்துள்ள உலகின் மீதான ஆதிக்கம் மாபெரும் அளவுக்கு அதிகமாகியிருக்கும்வேளையில், இவ்வாதிக்கத்துக்கான அடிப்படைக் கூறுகளை மனிதர் கைநெகிழ்ந்து விடுகிறார். இதோடு, இன்னும் பல வகைகளில், தனது மனிதத் தன்மையையே இவ்வுலகத்துக்குப் பணியவைத்து - தனக்கு வெளிப்படையாகப் புலப்படாவிட்டாலும் –, சமூக வாழ்வை அமைப்பது வழியாகவும், உற்பத்தி அமைப்புகள் மூலமும், சமூகத்தொடர்பு சாதனங்கள் கொடுக்கும் அழுத்தங்கள் மூலமும் மனிதர் கைப்பாவையாகும் ஒரு பொருளாகி விடுகிறார்.
தொடர் பொருளாதார நெருக்கடிகள், பொருளாதார வளர்ச்சியின் மாதிரிப் படிவங்களை காலத்துக்கேற்றவாறு சிந்திக்கவும், வாழ்க்கைநிலைகளில் மாற்றம்கொணரவும் இட்டுச்செல்ல வேண்டும். இன்றைய நெருக்கடிகள், மனிதரின் வாழ்வில் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதோடு, விவேகம், நிதானம், நீதி, உறுதி ஆகிய நற்பண்புகளை நாம் மீணடும் கண்டுணர பலனுள்ள வாய்ப்பையும் வழங்குகின்றன. இந்த நற்பண்புகள், இக்கட்டான நேரங்களை மேற்கொள்ளவும், மனிதருக்குத் தேவைப்படும் ஆழமான நம்பிக்கையுடன் ஒருவர் ஒருவரை இணைக்கும் சகோதரத்துவப் பிணைப்பைத் திரும்பப் பெறவும் நமக்கு உதவுகின்றன. மேலும், இவை தனிநபரின் சொந்த ஆதாயத்தைப் பெருக்குவதைவிட அதிகமாகச் செய்யும் சக்திகொண்டவை. எல்லாவற்றுக்கும் மேலாக, இப்பண்புகள், மனித மாண்புடன் ஒத்திணங்கிச்செல்லும் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும், அதைப் பாதுகாக்கவும் அவசியமானவை.
சகோதரத்துவம், போரைத் துடைத்தழிக்கின்றது
7. கடந்த ஆண்டில் நமது பல சகோதர சகோதரிகள் போரின் அழிவுகளை அனுபவித்தனர். இப்போர், சகோதரத்துவத்தில் கடுமையான மற்றும் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. பல மோதல்கள், பொதுவான அக்கறையின்மைக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றன. ஆயுதங்களால் அச்சமும் அழிவும் ஏற்பட்டுள்ள இடங்களில் வாழும் எல்லாருக்கும் எனது தனிப்பட்ட அன்பைத் தெரிவிப்பதோடு, அகிலத் திருஅவையின் தோழமைக்கும் உறுதிகூறுகிறேன். அமைதிக்காகச் செபித்தல், காயமடைந்தோர், பசித்திருப்போர், அகதிகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் அச்சத்தில் வாழும் அனைவருக்கும் சேவை, மற்றும் மறக்கப்பட்ட போர்களில் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்குக் கிறிஸ்துவின் அன்பை எடுத்துச் செல்வதே திருஅவையின் மறைப்பணியாகும். துன்புறுவோரின் வேதனைக் குரல்களைத் தலைவர்கள் கேட்பதற்கும், பகைமையின் அனைத்து வடிவங்களும், அடிப்படை மனித உரிமை மீறல்களும் நிறுத்தப்படுவதற்கும் திருஅவை குரல்கொடுத்து வருகிறது.
இக்காரணத்தினால், ஆயுத பலத்தால் வன்முறை மற்றும் மரணத்தை விதைக்கும் அனைவருக்கும் மிக அழுத்தமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: அடிக்கப்படவேண்டிய எதிரியாக இன்று நீ பார்க்கும் மனிதரில் உனது சகோதரனை அல்லது சகோதரியைப் பார்த்தால் உனது கையை மடக்கிக் கொள்வாய். உன்னைச் சுற்றிலும் நீதி, பற்றுறுதி மற்றும் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும்பொருட்டு ஆயுத வழிகளைக் கைவிட்டு, உரையாடல், மன்னிப்பு மற்றும் ஒப்புரவில் பிறரைச் சந்திக்கச் செல். “ஆயுதம் தாங்கிய மோதல்கள் அனைத்துலக நல்லிணக்கத்தை எப்பொழுதும் திட்டமிட்டுப் புறக்கணிப்பதாக உள்ளது என்பதும், குணமாகுவதற்குப் பல ஆண்டுகள் எடுக்கும் ஆழமான பிளவுகளையும் காயங்களையும் உருவாக்குகின்றன என்பதும் உலக மக்களுக்குத் தெளிவாக உள்ளது. அனைத்துலக சமுதாயமே உருவாக்கிய பெரும் பொருளாதார மற்றும் சமூக இலக்குகளை அடைவதற்குப் போர்கள் தெளிவான புறக்கணிப்புகளாக உள்ளன”.
இருந்தபோதிலும், தற்போது பெருமளவான ஆயுதங்கள் விநியோகத்தில் இருக்கும்வரை, சண்டைகளைத் தொடங்குவதற்கு புதிய சாக்குப்போக்குகள் எப்போதும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதனாலே, அனைத்துத் தரப்பினரும், அணு மற்றும் வேதியல் ஆயுதங்கள் தொடங்கி எல்லா ஆயுதங்களைக் கைவிடவும், ஆயுதப்பரவல் தடைசெய்யப்படவும் எனக்கு முந்தைய திருத்தந்தையர்கள் விடுத்த வேண்டுகோளை நான் எனது சொந்த விண்ணப்பமாக்குகிறேன்.
எனினும், தேவையானதாகவும், மிகவும் விரும்பப்படுவதுமான அனைத்துலக ஒப்பந்தங்களும், தேசியச் சட்டங்களும் ஆயுத மோதல்களிலிருந்து மனித சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு போதுமானதாக இல்லை என்பதை நாம் கவனிக்காமல் இல்லை. அனைவருக்கும் ஒரு மனநிறைவைத்தரும் வாழ்வை அமைப்பதற்கு இதயங்களின் மனமாற்றம் தேவைப்படுகின்றது. இந்த மனமாற்றம், ஒருவர் மற்றவரை தனது சகோதரனாக, சகோதரியாக ஏற்று, அக்கறை காட்டி, சேர்ந்து செயல்பட வைக்கின்றது. அமைதியை ஊக்குவிப்பதற்கான இந்த உணர்வு, சமய நிறுவனங்கள் உட்பட பொதுமக்கள் சமூகத்தின் பல முன்னெடுப்புகளைத் தூண்டுகின்றது. இதற்கான அனைவரின் அன்றாட அர்ப்பணம் தொடர்ந்து நிறையப் பலனைத் தரட்டும். மேலும், அடிப்படை மனித உரிமைக்கும் மற்ற பிற உரிமைகளுக்கும் முன்நிபந்தனையாக இருக்கும் அமைதிக்கான உரிமை குறித்த அனைத்துலகச் சட்டத்தில் உறுதியான செயல்கள் இடம்பெறும் என்ற எனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறேன்.
ஊழலும் திட்டமிட்ட குற்றமும் சகோதரத்துவத்துக்கு அச்சுறுத்தல்
8. சகோதரத்துவத்தின் எல்லைக்கோடு ஒவ்வொரு மனிதரின் நிறைவின் தேவையோடும் தொடர்புள்ளது. மக்களின், குறிப்பாக இளையோரின் நியாயமான பேராவல்கள் ஏமாற்றப்படவோ அல்லது புண்படுத்தப்படவோ கூடாது. மேலும் அவற்றை அடைவோம் என்ற அவர்களின் நம்பிக்கையும் திருடப்பட்டுவிடக் கூடாது. எனினும், பேராவலை, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோடு சேர்த்து குழப்பக் கூடாது. அதற்கு மாறாக, ஒருவர் ஒருவரை உயர்வாக எண்ணுவதில் மக்கள் உயர வேண்டும் (உரோ.12,10). வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கமாக அமைந்துள்ள கருத்துவேறுபாடுகளில், நாம் அனைவரும் சகோதரர்கள், சகோதரிகள் என்பதை எப்பொழுதும் நினைவில் இருத்த வேண்டும். இதன்மூலம், நமது அடுத்தவர் ஒழிக்கப்பட வேண்டிய எதிராளியாகவோ பகைவராகவோ கருதப்படாமல் இருக்க, நாம் பிறருக்கும் நமக்கும் கற்றுக்கொடுக்கிறோம்.
சகோதரத்துவம், சமூக அமைதியை உற்பத்தி செய்கிறது. ஏனெனில், இது, சுதந்திரத்துக்கும் நீதிக்குமிடையே, சுய பொறுப்புணர்வுக்கும் ஒருமைப்பாட்டுணர்வுக்குமிடையே, தனிநபரின் நன்மைக்கும் பொதுவான நன்மைக்குமிடையே ஒரு சமநிலையை உருவாக்குகிறது. எனவே ஓர் அரசியல் சமுதாயம், இவையனைத்துக்கும் ஆதரவாக ஒளிவுமறைவின்றி, பொறுப்பான முறையில் செயல்பட வேண்டும். குடிமக்களின் சுதந்திரம் மதிக்கப்படுவதில் அவர்களின் பிரதிநிதிகளாக அரசு அதிகாரிகள் நிற்கிறார்கள் என்பதை குடிமக்கள் தங்களுக்குள் நன்றாக உணரும்வகையில் அதிகாரிகள் செயல்படவேண்டும். எனினும், குறுகிய வட்டத்தின் ஆதாயங்களால் குடிமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே அடிக்கடி ஓர் இறுக்கம் ஏற்படுகின்றது. இது அந்த உறவை உருக்குலைக்கிறது. போருக்கான சூழலையும் உருவாக்கி வளர்க்கிறது.
மக்கள் மத்தியில் நல்லிணக்கத்திலும், சுதந்திரத்திலும் வாழ்வதற்கான மனிதரின் திறமையோடு மோதுகின்ற தனிநபரின் தன்னலத்தை சகோதரத்துவத்தின் உண்மையான உணர்வு மேற்கொள்கிறது. இத்தகைய தன்னலம் சமூகத்தில் எதிர்மறை விளைவை வளர்க்கிறது. இக்காலத்தில் மிகப்பரவலாக காணப்படும் ஊழலின் பல வடிவங்களை அல்லது சிறிய குழுக்கள் முதல் உலகளவில் நிர்வாக அமைப்போடு செயல்படும் குற்ற நிறுவனங்கள் உருவாகுவதை அது வளர்க்கிறது. இக்குழுக்கள் மனிதமாண்பின் உயிர்மூச்சில் கைவைத்து, சட்டத்தையும், நீதியையும் கிழித்தெறிகின்றன. இந்நிறுவனங்கள் கடவுளை மிகவும் அவமதிக்கின்றன, பிறரைப் புண்படுத்துகின்றன, படைப்பைப் பாழ்படுத்துகின்றன, இவை சமயத்தொனியைக் கொண்டிருக்கும்போது இன்னும் அதிகமாகச் செய்கின்றன.
நம் மனதைக் கசக்கிப்பிழியும் போதைப்பொருள் பயன்பாடு பற்றியும் நினைத்துப் பார்க்கிறேன். இவை, நன்னெறி மற்றும் குடியுரிமைச் சட்டங்களைப் புறக்கணித்து இலாபங்களைக் குவிக்கின்றன. இயற்கை வளங்கள் அழிவு, தொடர்ந்து இடம்பெறும் சூற்றுச்சூழல் மாசுக்கேடு, மனித உழைப்பை உறிஞ்சி எடுக்கும் துயரம் ஆகியவற்றையும் நினைக்கிறேன். சட்டத்துக்குப் புறம்பான பணப்போக்குவரத்து, நிதி ஆதாயம் ஆகியவற்றையும் நினைக்கிறேன். இவை, இலட்சக்கணக்கான மனிதரை ஏழ்மைக்குத் தள்ளி, ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூக அமைப்புகளைச் சூறையாடுகின்றன மற்றும் அவற்றுக்குக் கேடுவிளைவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் அப்பாவிகளைப் பலியாக்கும், குறிப்பாக இளையோரிடமிருந்து அவர்களின் எதிர்காலத்தைத் திருடும் பாலியல் தொழிலையும் நினைக்கிறேன். மிகவும் அருவருப்பான மனித வணிகம், சிறார்க்கெதிரான குற்றங்கள், உரிமை மீறல்கள், உலகின் பல பாகங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கும் அடிமைத்தனத்தின் பேரச்சம், வெட்கக்கேடான மற்றும் சட்டத்துக்குப் புறம்பான சூழ்ச்சிகளுக்கு அடிக்கடி பலியாகும் குடியேற்றதாரர் ஆகிய அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். திருத்தந்தை 23ம் ஜான் எழுதியுள்ளார் : “அதிகாரத்தின் உறவுகளில் அடிப்படையைக் கொண்டுள்ள ஒரு சமூகத்தில் மனிதம் என்று எதுவும் இருக்காது. மக்களின் வளர்ச்சியையும் நிறைவையும் ஊக்குவிப்பதற்குப் பதிலாக இது அவர்களின் சுதந்திரத்தை அடக்குகிறது மற்றும் கட்டுப்படுத்துகின்றது” என்று. இருந்தபோதிலும் மனிதர் மனமாற்றத்தை அனுபவிக்க முடியும். தங்கள் வாழ்வை மாற்றுவதற்கு இயலும் என்ற நிலையில் அவர்கள் ஒருபோதும் சோர்வுறக் கூடாது. அனைவருக்கும், கடும் குற்றங்களைச் செய்தவர்களுக்கும் இது நம்பிக்கையின் மற்றும் பற்றுறுதியின் செய்தியாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். ஏனெனில் கடவுள் பாவியின் இறப்பை விரும்புவதில்லை. ஆனால் அவர் பாவியை மனமாற்றி வாழச்செய்கிறார் (எசே.18,23).
மனித சமூக உறவுகளின் பரந்த சூழலில் குற்றத்தையும் தண்டனையையும் நாம் பார்க்கும்போது, பல சிறைகளில் மனிதமற்ற நிலைகளில் உள்ளவர்களை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. சிறையில் இருப்பவர்கள் தங்களின் மனித மாண்பு மீறப்பட்ட மனிதாபிமானமற்ற மற்றும் மறுவாழ்வுக்கான நம்பிக்கையும் ஆவலும் தடைப்பட்ட நிலையில் பல நேரங்களில் வைக்கப்பட்டுள்ளனர். திருஅவை இந்தச் சூழல்களில் அதிகமாகச் சேவையாற்றுகின்றது. பெரும்பாலும் அதை ஆடம்பரமில்லாமல் செய்கின்றது. இதில் இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டுமென ஒவ்வொருவரையும் தூண்டுகிறேன் மற்றும் ஊக்கப்படுத்துகிறேன். இந்தப் பணியில் பல துணிச்சலான மனிதர் எடுத்துவரும் முயற்சிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலரால் நியாயமாகவும் உண்மையாகவும் பெருமளவில் ஆதரவளிக்கப்படும் என்ற நம்பிக்கையில், இவ்விண்ணப்பத்தை முன்வைக்கிறேன்.
சகோதரத்துவம் இயற்கையைப் பாதுகாத்துப் பயிரிட உதவுகின்றது
9. மனிதக் குடும்பம் படைத்தவரிடமிருந்து பெற்றுள்ள பொதுவான கொடை : இயற்கை. படைப்பு குறித்த திருஅவையின் கண்ணோட்டம் நேர்மறை மதிப்பீடுகளையும் உள்ளடக்குகிறது. இயற்கையில் நடத்தப்படும் நியாயமான செயல்பாடுகள், பயன்பாட்டு நோக்கத்தைக் கொண்டு, பொறுப்புள்ள முறையில் நடத்தப்படும்போது, அதாவது, இயற்கையின் விதிமுறைகளை ஏற்று, அதன் வளங்களை அனைவரின் நன்மைக்கென மெய்யறிவோடு பயன்படுத்தி, அதன் அழகை மதித்து, சுற்றுச்சூழல் அமைப்பில் ஒவ்வோர் உயிரினத்தின் இடம் மற்றும் அதன் பலன் ஆகியவற்றை ஏற்பதாய் இருக்க வேண்டும். இயற்கை நமது பொறுப்பில் உள்ளது. அதனை பொறுப்புள்ள கண்காணிப்பாளர்களாக நிர்வகிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனினும், பேராசை, ஆதிக்க அகந்தை, உடைமையாகப் பெற்றிருத்தல், சூழ்ச்சித்திறத்துடன் கையாளுதல், சுரண்டல் ஆகியவற்றால் அடிக்கடி ஆட்கொள்ளப்படுகிறோம். நாம் இயற்கையைப் பாதுகாப்பதில்லை. அதனை மதிப்பதுமில்லை. இதனை ஓர் அருள்கொடையாகக் கருதி, அதனைப் பராமரிப்பதில்லை. வருங்காலத் தலைமுறைகள் உட்பட நம் சகோதர, சகோதரிகளின் சேவையில் அதனை வைப்பதுமில்லை.
வேளாண்துறை, சிறப்பான விதத்தில், முதல் உற்பத்தித் துறையாக இருக்கிறது. இது, மனித சமுதாயத்துக்கு உணவு அளிக்கும்பொருட்டு, இயற்கை வளங்களைப் பயிரிட்டு, பாதுகாப்பதற்கு மிக முக்கியமான அழைப்பைப் பெற்றுள்ளது. இந்த வகையில், உலகில் தொடர்ந்து இடம்பெறும் பசி அவலம், உங்களோடு ஒரு கேள்வியைப் பகிர்ந்துகொள்ளச் செய்கின்றது. இப்பூமியின் வளங்களை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? தங்களது உற்பத்தியில் எந்த வரிசையில் முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது என்பது குறித்து இக்காலத்திய நிறுவனங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகில் அனைவரும் பசியின்றி இருக்கும் விதத்தில் பூமியின் வளங்கள் பயன்படுத்தப்படுவது உண்மையிலேயே இன்றியமையாத கடமையாக உள்ளது. இதற்கான முன்னெடுப்புகளும் இயலக்கூடிய தீர்வுகளும் பல உள்ளன. இவை உற்பத்தி அதிகரிப்புக்கு என மட்டும் இல்லை. தற்போதைய உற்பத்தி போதுமானது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆயினும், இலட்சக்கணக்கான மக்கள் பசியால் தொடர்ந்து துன்புறுகின்றனர் மற்றும் இறக்கின்றனர். இது உண்மையான அவமானமாக உள்ளது. எனவே, பூமியின் கனிகளிலிருந்து எல்லாரும் பயன்பெறும் வழிகளை நாம் காண வேண்டும். அதிகமாக வைத்திருப்பவர்களுக்கும், ரொட்டியின் சிறு துணுக்குகளோடு திருப்திப்பட வேண்டியவர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க முயற்சிப்பது மட்டும் போதாது, ஏனெனில் இது, எல்லாவற்றுக்கும் மேலாக, நீதி, சமத்துவம், ஒவ்வொரு மனிதரையும் மதிப்பதில் அடங்கியுள்ளதால் பூமியின் கனிகளிலிருந்து எல்லாரும் பயன்பெறும் வழிகளை நாம் காண வேண்டும். இவ்விடயத்தில், அனைத்துப் பொருள்களும் அனைவருக்கும் பயன்பட வேண்டுமென்ற உலகளாவிய நியதியை நான் எல்லாருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். திருஅவையின் சமூகப் போதனைகளின் அடிப்படைக் கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. இந்தக் கோட்பாட்டை மதிப்பது, ஒவ்வொரு மனிதருக்கும் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்கள் பயனுள்ள வகையிலும் நியாயமாகவும் கிடைப்பதற்கான முக்கிய நிபந்தனையாகும். இவ்வாறு பெறுவதற்கு ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை உள்ளது.
முடிவுரை
10. சகோதரத்துவம், கண்டுணரப்பட்டு, அன்புகூரப்பட்டு, அனுபவிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டு சான்று சொல்லப்பட வேண்டும். கடவுளிடமிருந்து வழங்கப்படும் கொடையாகிய அன்பால் மட்டுமே நாம் சகோதரத்துவத்தை ஏற்று முழுமையாக அனுபவிக்க முடியும். அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் தகுந்த தேவையான கருத்தியல்பு, நல்ல குறிக்கோளை இழந்த மற்றும் எல்லாவற்றையும் கடந்த கூறுகள் குறித்த அக்கறையற்ற தொழில்நுட்ப அறிவாக மாற்றப்பட்டுவிடக் கூடாது. கடவுளுக்கு மனந்திறந்து வாழ்வது குறைவுபட்டால் ஒவ்வொரு மனிதச் செயலும் சீரழியும் மற்றும் சுரண்டப்படும் பொருள்களாக மனிதர் கணிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மனிதரையும் அன்புகூரும் கடவுளால் உறுதிசெய்யப்பட்ட பரந்த இடத்துக்குள் இயங்குவதற்கு அரசியலும் பொருளாதாரமும் தன்னைத் திறந்திருந்தால் மட்டுமே சகோதரத்துவப் பிறரன்பின் உண்மையான உணர்வில் அமைக்கப்பட்ட ஒழுங்கு நியதியை அடைய முடியும்; ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் மற்றும் அமைதியின் செயல்திறமிக்க கருவிகளாக மாற முடியும்.
திருஅவையில் நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்பினர்கள், ஒவ்வொருவருமே அதில் அவசியமானவர்கள், ஏனெனில், கிறிஸ்துவின் கொடையின் அளவுக்கேற்றவாறு, ஒவ்வொருவருக்கும் பொது நலனுக்காக அருள் கொடுக்கப்படுகின்றது(எபே.4:7,25; 1 கொரி.12:7) என கிறிஸ்தவர்களாகிய நாம் நம்புகிறோம். இறையருளை வழங்குவதற்காக, அதாவது, தமது வாழ்வில் நமக்குப் பங்களிப்பதற்காக கிறிஸ்து இவ்வுலகுக்கு வந்தார். சிலுவையில் அறையுண்டு உயிர்த்தவரில், மானுடத்துக்கு கடவுள் வழங்கிய அன்பின் அகலம், ஆழத்துக்கு ஏற்ப, அன்னியோன்ய பரிமாற்றம், மன்னிப்பு, தன்னையே முழுமையாய் வழங்குதல் ஆகியவற்றால் குறிக்கப்பட்ட சகோதரத்துவ உறவுகளை இயேசுவின் இந்தப் பகிர்வு வழங்குகின்றது. சிலுவையில் அறையுண்டு இறந்து அனைவரையும் தம்மிடம் ஈர்த்துக்கொண்டவர் சொல்கிறார் : “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்”(யோவா.13:34-35) என்று. இந்த நற்செய்தியே நாம் எல்லாரும் ஒருபடி முன்னேறிச் செல்ல நம்மைக் கேட்பது. பிறரின், ஏன் நம்மைவிடத் தொலைவில் இருப்பவர்களின் துன்பங்களையும் நம்பிக்கைகளையும் கேட்டு, அன்பு வலியுறுத்தும் பாதையில் நாம் செல்ல நம்மைக் கேட்கிறது இந்த நற்செய்தி. இந்த அன்பு நமது அனைத்து சகோதர சகோதரிகளின் நன்மைகளுக்காக தன்னையே சுதந்திரமாக வழங்கி அவர்களோடு இருப்பதை அறிகிறது.
கிறிஸ்து மனித சமுதாயம் அனைத்தையும் அணைத்துக்கொள்கிறார். யாரையும் இழக்க அவர் விரும்பவில்லை. “ஏனெனில் கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது, தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே(யோவா.3 :17)”. தனது இதயத்தையும் மனதையும் அவருக்குத் திறக்கும் எவரையும் ஒடுக்காமல் அல்லது அடக்காமல் கடவுள் இதைச் செய்கிறார். “உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்”. -இயேசு கிறிஸ்து சொல்கிறார்- “நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்” (லூக்.22: 26-27). எனவே ஒவ்வொரு நடவடிக்கையும், மனிதருக்குத் தொண்டுபுரிகிறோம் என்ற எண்ணத்தில், குறிப்பாக, தொலைவில் இருப்பவர்கள் மற்றும் அதிகம் அறியப்படாதவர்களுக்குச் சேவை செய்கிறோம் என்ற நோக்கத்தில் ஆற்றப்பட வேண்டும். அமைதியைக் கட்டியெழுப்பும் சகோதரத்துவத்தின் இதயமாக இருப்பது சேவையாகும்.
இயேசுவின் அன்னையாம் மரியா தமது மகனின் இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் சகோதரத்துவத்தை ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கும் அதனைப் புரிந்துகொள்வதற்கும் நமக்கு உதவுவாராக. இதன்மூலம் இந்த நம் அன்புப் பூமியில் ஒவ்வொரு மனிதருக்கும் அமைதியைக் கொண்டுவர இயலும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.