2013-12-11 15:46:22

திருத்தந்தை பிரான்சிஸ்: 2013ம் ”ஆண்டின் மனிதர்”


டிச.11,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, 2013ம் ”ஆண்டின் மனிதர்” என அறிவித்துள்ளது Time இதழ்.
இந்த மதிப்பைப் பெற்றுள்ள மூன்றாவது திருத்தந்தையாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உள்ளார். இதற்கு முன்னர் 1962ம் ஆண்டில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும், 1994ம் ஆண்டில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும் ”ஆண்டின் மனிதர்” என அறிவிக்கப்பட்டனர்.
இவ்வறிவிப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீட பத்திரிகை அலுவலகத் தலைவர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவரைச் சுற்றியெழும் பெரும் அலைஅதிர்வுகளைப் பார்க்கும்போது, இந்த அறிவிப்பு வியப்பாக இல்லை எனத் தெரிவித்தார்.
ஒரு பன்னாட்டு ஊடகத்தால் வழங்கப்படும் மிக மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகிய ”ஆண்டின் மனிதர்” விருது, ஆன்மீக, சமய மற்றும் அறநெறி விழுமியங்களை ஊக்குவிக்கும் ஒருவருக்கு, அமைதிக்கும் நீதிக்கும் நுண்ணறிவுடன் அழைப்புவிடுக்கும் ஒருவருக்கு கொடுக்கப்பட வேண்டும், இந்நிலையில் இவ்விருது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது ஒரு நல்ல அடையாளம் என்றும் அருள்பணி லொம்பார்தி கூறினார்.
திருத்தந்தையைப் பொறுத்தவரை அவர் தன்னிலே புகழையும் மதிப்பையும் விரும்பாதவர், ஏனெனில் அவர், தனது வாழ்வை கடவுளின் அன்பின் நற்செய்தியை மனுக்குலத்துக்கு அறிவிக்கும் பணிக்கு அர்ப்பணித்திருக்கிறார் எனவும், இப்பணியின் வழியாக மனிதருக்கு நம்பிக்கையை வழங்குவதே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மகிழ்வூட்டுவதாக இருக்கின்றது எனவும் அருள்பணி லொம்பார்தி கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.