2013-12-10 15:33:05

விவிலியத்
தேடல் காணாமற்போனவை பற்றிய உவமைகள் பகுதி-6


RealAudioMP3 காணமற்போனவை பற்றிய உவமைகளில் கடந்த 5 வாரங்களாக அருள்பணி இயேசு கருணா அவர்கள் நம்மை வழிநடத்தி வந்தார். உரோம் நகரில் விவிலிய ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அவர் நம்மை வழிநடத்தியதற்காக வத்திக்கான் வானொலி குடும்பத்தினரின் நன்றிகளைக் கூறி, இன்றையத் தேடலை நாம் தொடர்கிறோம்.
ஞானோதயம், அறிவொளி, ஆன்மீக ஒளி எங்கே கிடைக்கும்? போதி மரத்தடியில், மலை முகடுகளில், அல்லது அடர்ந்த காடுகளில் கிடைக்கும். பன்றிகள் மத்தியில் பசி மயக்கத்தில் இருக்கும்போது, இந்த ஆன்மீக ஒளி கிடைக்குமா? கிடைக்கும். கிடைத்தது என்று காணாமற் போன மகன் உவமை கூறுகிறது. இயேசு கூறிய உவமைகளிலேயே மிகவும் புகழ்பெற்ற உவமை என்று சொல்லப்படும் ஊதாரி மகன் அல்லது காணமற்போன மகன் உவமை இந்த நல்ல செய்தியை நமக்குத் தருகிறது. நம் கதையின் நாயகன், அந்த காணாமற்போன மகன், ஆன்மீக ஒளிபெற்ற நிகழ்வை லூக்கா நற்செய்தி 15ம் பிரிவில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

லூக்கா 15: 13-19
இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், “என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் என்று சொல்லிக்கொண்டார்.

காணமற்போன மகன் உவமையை பலமுறை சிந்தித்திருக்கிறேன். என் சிந்தனைகள் எல்லாமே திருந்திவந்த மகன், அவரை ஏற்று விருந்தளித்த தந்தை, அதை ஏற்றுக் கொள்ளாத மூத்த மகன், அவரைச் சமாதானப்படுத்த முயன்ற தந்தை என்று இவ்வுவமையின் இரண்டாம் பகுதியில் என் கவனம் அதிகமாய் இருந்து வந்தது. இன்று, முதல் பகுதியில் தேடலை மேற்கொள்வோம். இளைய மகனைப்பற்றி சிந்திப்போம்... அதுவும், மனம்மாறி திரும்பி வந்ததால், கண்டுபிடிக்கப்பட்ட மகனைவிட, காணாமல் போன மகனைப்பற்றி அதிகம் சிந்திப்போம். காணாமல் போவது என்ன என்பதை அறிய முயல்வோம். போர்ச் சூழல்களாலும், வேறுபல வேதனைகளாலும் தங்கள் வாழ்வின் ஆதாரங்கள் அனைத்தையும், தங்கள் உறவுகளையும் தொலைத்துவிட்டு வேதனையுறும் மக்களை முன்னிறுத்தி, காணாமல் போவது அல்லது, தொலைந்து போவதைக் குறித்துச் சிந்திக்க முயல்வோம்.

ஆன்மீக எண்ணங்களை எழுதுவதில் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர், அருள்பணியாளர் Ron Rolheiser. காணமற்போன மகன் உவமைக்கு அவர் தரும் விளக்கத்தில், காணாமல் போவதுபற்றி கொஞ்சம் விரிவாகச் சிந்தித்துள்ளார். 14வது வயதில் தன் வாழ்வில் நடந்தவைகளை Rolheiser இவ்வாறு கூறியுள்ளார்:

“எனக்கு 14 வயது ஆனபோது, கோடை விடுமுறையில் நடந்த சில நிகழ்வுகளால் என் உலகம் நொறுங்கிப் போனது. நல்ல உடல் நலமும், அழகும் நிறைந்த ஒரு 20 வயது இளைஞன் என் வீட்டுக்கருகே வாழ்ந்தான். அவனைப் பார்க்கும் போதெல்லாம், பிற்காலத்தில் நானும் அவனைப் போல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்த விடுமுறையில் ஒருநாள், அவன் தூக்கில் தொங்கி இறந்தான். அதே விடுமுறையில், என் நண்பர்களில் ஒருவன் வேலை செய்யும் இடத்தில் ஒரு விபத்தில் இறந்தான். வேறொரு நண்பன் குதிரை சவாரி பழகும் போது, தூக்கி எறியப்பட்டு, கழுத்து முறிந்து இறந்தான். இந்த மரணங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு மாதத்திற்குள் நடந்தன. இவர்களது அடக்கச் சடங்கில் நான் பீடச் சிறுவனாய் உதவி செய்தேன்.
வெளிப்படையாக, என் உலகம் மாறாதது போல் நான் காட்டிக் கொண்டாலும், என் உள் உலகம் சுக்கு நூறாய் சிதறியது. இருள் என்னைக் கடித்துக் குதறியது. உலகிலேயே என்னை விட சோகமான, பரிதாபமான ஒரு 14 வயது இளைஞன் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். இந்த சோகம் என் உள்ளத்தை ஆக்கிரமித்த அதே வேளையில், மற்றொன்றும் என் உள்ளத்தில் மெதுவாக, சப்தமில்லாமல் நுழைந்தது. அதுதான் விசுவாசம். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்கவும், எனக்குள் மண்டிக்கிடந்த குறைகளோடு என்னையே நான் ஏற்றுக்கொள்ளவும் அந்த விசுவாசம் எனக்கு உதவியது. நான் இன்று ஒரு குருவாக இருப்பதற்கு அந்தக் கோடை விடுமுறை பெரிதும் உதவியது. சூழ்ந்த இருளில் என்னைக் காணாமல் போகச்செய்த அந்தக் கோடை விடுமுறைதான் என்னை அதிகம் வளரச் செய்தது.”

தனது 14வது வயதில் நடந்தவைகளை இவ்வாறு கூறும் Ron Rolheiser, தொடர்ந்து, Christina Crawford என்பவர் எழுதியுள்ள 'Mummy Dearest', 'Survivor' என்ற இரு புத்தகங்களைப் பற்றிக் கூறுகிறார். Christina ஒரு வீட்டில் வளர்ப்புப் பிள்ளையாக வாழ்ந்தவர். அந்த வீட்டில் அவர் அடைந்த துன்பங்களையெல்லாம் இந்தப் புத்தகங்களில் விளக்குகிறார். அவர் வாழ்வில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்த காலங்களைப் பற்றி அவர் எழுதும் போது, "அந்த நாட்களில் நான் முற்றிலும் காணாமல் போயிருந்தேன்" என்று எழுதிவிட்டு, உடனே, "காணாமல் போவதும் ஒரு வகை கண்டுபிடிப்புதான்" என்றும் குறிப்பிடுகிறார்.
ஆம் அன்பர்களே, காணாமல் போவதில் பல உண்மைகளைக் கண்டு பிடிக்கலாம். முற்றிலும் காணாமல்போகும், முற்றிலும் நொறுங்கிவிடும் நிலைகள் முடிவுகள் அல்ல. அந்த இருள், அந்த நொறுங்குதல் புதிய வழிகளை, புதிய ஒளியை உருவாக்கும். ஆன்மீக ஒளி பெற, காணாமல் போவதும் உதவி செய்யும்.

உலக வரலாற்றில் நல்ல பல மாற்றங்களை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா அவர்களின் அண்மைய மறைவு (டிசம்பர் 5, 2013) இவ்வுலகில் ஆழ்ந்ததொரு வெற்றிடத்தை உருவாக்கிச் சென்றுள்ளது. இதேபோல், 16 ஆண்டுகளுக்கு முன் மறைந்த அன்னை தெரேசாவும் (செப்டம்பர் 5, 1997) இவ்வுலகில் ஈடுசெய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை இன்றும் நம் மத்தியில் நினைவுறுத்தி வருகிறார்.
அன்னை தெரேசா அவர்களைப் புகழாத நாடு இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை... அவ்வளவு உயர்ந்த இடத்தை பெற்றுள்ள அன்னை தெரேசா அவர்களின் வாழ்க்கை, காணாமல் போவதைத் தொடர்ந்து சிந்திக்க, நமக்கு உதவியாக இருக்கும். இப்படி நான் சொல்வது ஆச்சரியமாக இருக்கலாம். தொடர்ந்து கேளுங்கள்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னால், 2007ம் ஆண்டு, "Mother Teresa - Come Be My Light" என்ற புத்தகம் வெளியானது. அன்னை தெரேசா தனிப்பட்ட வகையில் எழுதி வைத்திருந்த எண்ணங்களைத் தொகுத்து Brian Kolodiejchuk என்பவர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தை நான் இதுவரை வாசிக்கவில்லை. ஆனால், இதை வாசித்தவர்கள் அன்னை தேரேசாவைப் பற்றி அதிர்ச்சி அடைந்ததாக எழுதியுள்ளனர். தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகள் அந்த அன்னையின் மனதில் எழுந்த சந்தேகங்கள், கலக்கங்கள், போராட்டங்கள் ஆகியவை இந்நூலில் தொகுத்து தரப்பட்டுள்ளன.
யாருமே செய்ய விரும்பாத ஒரு பணியை ஆழ்ந்த அன்புடன் நாள் தவறாமல் செய்து வந்த அந்த அன்னைக்கு இப்படி ஒரு நிலையா? அதுவும், அவர் அந்தப் பணிகளைச் செய்து வந்த காலத்தில் இப்படி ஒரு நிலையா? அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் இது போன்ற போராட்டங்களில் கழிந்தனவா? புத்தகத்தை வாசித்த பலருக்கும் எழுந்த கேள்விகள் இவை. இந்தப் புத்தகம் வெளி வந்ததும், ஒரு சிலர் அன்னை தெரேசா வாழ்ந்த வாழ்க்கை, அவரது சேவை அனைத்தின் மீதும் சந்தேகங்களை எழுப்பி, அவரைக் குறித்து தவறான முடிவுகளுக்கும் வந்தனர்.
உயர்ந்த நிலையில் நாம் போற்றி மதிக்கும் மனிதர்கள் எவரும் கேள்விகள், குழப்பங்கள் இவற்றால் அலைகழிக்கப்படுவது கிடையாது என்று நாமே தீர்மானித்துக் கொள்கிறோம். மகாத்மா காந்தி எழுதிய "சத்திய சோதனை" என்ற புத்தகமும் காந்தியைக் குறித்து கேள்விகளை எழுப்பவில்லையா?

ஆனால், நிதானமாய், ஆழமாய்ச் சிந்தித்தால், தங்களைத் தாங்களே தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்த வருடங்களை இத்தகைய உயர்ந்த உள்ளங்களால் மட்டுமே சமாளித்திருக்க முடியும். அன்னை தெரேசா போன்ற அற்புத உள்ளங்களால் மட்டுமே இத்தனை நீண்ட, இவ்வளவு ஆழமான துன்பங்கள், கலக்கங்கள், இருள் நிறை நாட்கள் இவற்றைச் சமாளித்திருக்க முடியும் என்பது விளங்கும்.
அதிலும் சிறப்பாக, அன்னை தெரேசா அவர்கள் செய்து வந்த பணியில் ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தின் மிகவும் மோசமான, இருள் நிறைந்த, நம்பிக்கையைக் குலைக்கும் துன்ப நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் அவர் சந்தித்ததால், அவர் மனதில் இருள், பயம், கேள்விகள், குழப்பங்கள் இவைச் சூழ்ந்தது இயற்கைதானே. அதேபோல், இனவெறி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த தென் ஆப்ரிக்காவில் தன் கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, வன்முறைகளை ஒவ்வொரு நாளும் நேரில் கண்டுவந்த நெல்சன் மண்டேலா அவர்களும், இத்தகைய துயரங்களின் மத்தியில் தன்னைத் தானே தொலைத்துவிட்டதாக உணர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லையே!
இப்படி கேள்விகளும் குழப்பங்களும் இல்லாமல், எவ்வித சலனமுமில்லாமல் அவர்கள் வாழ்க்கை ஓடியிருந்தால், ஒன்று அவர்கள் உணர்வுகள் அற்ற ஓர் இயந்திரமாய் இயங்கி இருக்கவேண்டும் அல்லது மண் மீது நடந்தாலும், வானில் பறக்கும் வானதூதர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் சாதாரண மனிதப் பிறவிகள். ஆனால், அவர்கள் உன்னதமான மனிதப் பிறவிகளாக இருந்ததால், இந்த இருளின் நடுவிலும் அவர்களால் தங்கள் பணிகளைத் தொடர முடிந்தது.
"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று இயேசு கதறியது நினைவிருக்கலாம். இறைவனின் மகனே இப்படியொரு இருளைச் சந்தித்தபோது, தான் அல்லது தன் கடவுள் காணாமல் போய்விட்டதாக உணர்ந்த போது, அன்னை தெரேசா, நெல்சன் மண்டேலாவைப் போன்ற சாதாரண, ஆனால், உன்னத மனிதர்கள் இந்த இருளைச் சந்தித்ததில் ஆச்சரியம், அதிர்ச்சி எதற்கு?
நாம் அனைவருமே வாழ்வின் பல சூழல்களில் நம்மை நாமே தொலைத்தவர்கள்தான். நம்மில் சிலர் இறைவனின் துணையால், அடுத்தவர் வழிகாட்டுதலால் நம்மையே மீண்டும் கண்டுபிடித்தோம். இன்னும் சிலர் தங்களையே மீண்டும் கண்டுபிடிக்க இயலாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். இருள், துயரம், கலக்கம் இவைகளைச் சந்திக்காத மனிதர்களே கிடையாது. ஆனால், அந்த நேரங்களில், அந்த இருளுக்குள் தங்களையேப் புதைத்துக் கொள்வோர் நம்மில் பலர் உண்டு. ஒரு சிலர், தங்கள் உள் உலகம் இருள் சூழ்ந்ததாய் இருந்தாலும், வெளி உலகை ஒளி மயமாக்கினர்... அன்னை தேரேசா, நெல்சன் மண்டேலாவைப் போல்.

நமது உவமையின் நாயகனிடம் திரும்பி வருவோம். பன்றிகள் நடுவே, பசியில் மயங்கிய இளைய மகன் பன்றிகளுடன் தன்னையே புதைத்துக் கொள்ளாமல், அவைகள் தான் இனி தன் வாழ்வென்று விரக்தியடையாமல், "நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்." என்று எழுந்தானே... அதுதான் அழகு.
காணாமல் போவதும் ஒரு வகையில் பார்க்கப் போனால் அழகுதான். அப்படி காணாமல் போகும்போது, அதுவரை வாழ்வில் காணாமல் போயிருந்த பல உண்மைகளையும் விசுவாச உணர்வுகளையும் நம்மால் மீண்டும் கண்டுபிடிக்க முடியும்.

இறைவனை நோக்கி, எழுந்து நடப்போம். மீண்டும் நம்மை நாமே கண்டுபிடிப்போம்.








All the contents on this site are copyrighted ©.