2013-12-10 15:02:01

செவ்வாய்க் கிரகத்தில் வறண்ட ஏரி கண்டுபிடிப்பு


டிச.10,2013. 'மைக்ரோப்'கள் எனப்படும் நுண்ணுயிர்கள் ஒருவேளை செவ்வாய்க் கிரகத்தில் வாழ்ந்திருந்தால், அவைகள் வாழ்வதற்கு வேண்டிய சூழ்நிலையைத் தந்திருக்கக்கூடிய ஒரு வறண்ட ஏரியை, செவ்வாய்க் கிரகத்தில் தற்போது ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் நாசா நிறுவனத்தின் க்யூரியாசிட்டி விண்கலம் அனுப்பிய புகைப்படங்களும், தகவல்களும் காட்டுகின்றன.
'கிமோலித்தோ ஆட்டோட்ரோப்ஸ்' என்ற இந்த நுண்ணுயிர்கள் வாழ வெளிச்சம் தேவைப்பட்டிருக்காது என்று கூறும் அறிவியலாளர்கள், அவை, பாறைகளையும், கனிமங்களையும் உடைத்து, தாம் வாழத் தேவையான சக்தியைப் பெற்றிருக்கும் என்று கூறுகின்றனர்.
இது போன்ற நுண்ணுயிர்கள், பூமிக்கடியிலும், குகைகளிலும், கடல்களின் ஆழ்ப்பரப்பிலும் காணப்படுகின்றன.
கேல் க்ரேட்டர் எனப்படும் இந்தப் பழங்கால ஏரி, பூமியில் இருந்திருக்கக் கூடியதைப் போன்ற ஒரு ஏரிதான் என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்
செவ்வாய்க் கிரகத்தின் பாறைகளைப் பூமிக்குக் கொண்டுவந்து ஆராய்ச்சி செய்யாமலேயே முதன் முறையாக, அங்கு வைத்தே, அவைகளின் வயதையும் அவர்கள் கணித்துள்ளனர்.
இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பாறைகளின் வயது நானூறு கோடி ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் என்றும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.