2013-12-10 14:59:16

இனப்படுகொலையைத் தடுக்கும் உலக ஒப்பந்தத்தின் 65வது ஆண்டு நிறைவு


டிச.10,2013. குழப்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், இனப்படுகொலைகள் இடம்பெறாமல் தடுப்பதற்கும், அதில் ஈடுபடுபவர்க்குத் தண்டனை வழங்குவதற்கும் துணிச்சலுடனும், விழிப்புடனும், விடா உறுதியுடனும் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார் ஐ.நா. உதவிப் பொதுச் செயலர் யான் எலியாசன்.
1948ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி இடம்பெற்ற ஐ.நா. பொது அவையின் முதல் அமர்வில் இந்த உலக ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது யூதர்களுக்கும் மற்றும் பிற சிறுபான்மை குழுக்களுக்கும் எதிராக நாத்சி கொள்கையாளர்கள் மனித சமுதாயத்துக்கு இழைத்த குற்றங்களின் எதிரொலியாக இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதென்று எலியாசன் விளக்கினார்.
இனப்படுகொலை, அனைத்துலகச் சட்டத்தின்கீழ் குற்றம் எனக் கூறும் இந்த உலக ஒப்பந்தத்தை இன்று உலகில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் அமல்படுத்துகின்றன. இனப்படுகொலையைச் செய்வோர், அதற்குத் தூண்டுகோலாய் இருப்போர், அதற்குத் திட்டம் தீட்டுவோர் ஆகிய அனைவரும் இச்சட்டத்தின்கீழ் குற்றவாளிகள் ஆகின்றனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.