2013-12-10 14:50:33

Isidore Ngei மியான்மார் நாட்டின் முதல் வணக்கத்துக்குரியவர், யாங்கூன் பேராயர் மகிழ்ச்சி


டிச.10,2013. மியான்மார் நாட்டில் 1950ம் ஆண்டில் கிறிஸ்தவ விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்ட மறைசாட்சிகள் அருள்பணி Mario Vergara , பொதுநிலை வேதியர் Isidore Ngei Ko Lat ஆகிய இருவரின் மறைசாட்சியம் ஏற்கப்பட்டு அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என அறிவிக்கப்பட்டிருப்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மார் திருஅவைமீது கொண்டுள்ள அன்பின் அடையாளமாக இருக்கின்றது என்று யாங்கூன் பேராயர் சார்லஸ் போ கூறினார்.
PIME என்ற பாப்பிறை மறைபோதக சபையின் அருள்பணி Mario Vergara, வேதியர் Isidore Ngei இவ்விருவரின் வீரத்துவமான மறைசாட்சியம் ஏற்கப்பட்டு அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என இத்திங்களன்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிகழ்வு, இவ்வாண்டின் மிக முக்கிய நிகழ்வாக அந்நாட்டுக்கு உள்ளது எனவும் தெரிவித்தார் பேராயர் போ.
இவர்கள் இருவரும் மியான்மாரின் முதல் முத்திப்பேறுபெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் எனவும், இவ்விருவரின் முத்திப்பேறுபெற்ற நிகழ்வு அந்நாட்டுத் திருஅவைக்கு ஊக்கமூட்டுவதாய் இருக்குமெனவும் கூறினார் பேராயர் சார்லஸ் போ.
கத்தோலிக்கத் திருஅவை நம்பிக்கை ஆண்டை நிறைவுறச்செய்ததைத் தொடர்ந்து மியான்மாரில் ஜூபிலி ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மாரில் கத்தோலிக்கத் திருஅவை 500 ஆண்டுகளை நிறைவுசெய்திருப்பதையொட்டி இந்த ஜூபிலி ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது என யாங்கூன் பேராயர் கூறினார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.