2013-12-09 15:21:15

வாரம் ஓர் அலசல் – மண்டேலா, ஒரு சகாப்தம்


டிச.09,2013. அகிம்சைப் புறா, கறுப்புச் சிங்கம், மனித மாண்பைக் காத்த மாவீரன், மனித உரிமைக் காவலன், ஒடுக்கப்பட்டவரின் உரிமைக் குரல், அதிகாரவர்க்கத்தின் சிம்ம சொப்பனம், புதிரான தலைமை, தன்னலமற்ற மனிதர், இருண்ட கண்டத்தில் விரிந்த மலர்... மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு அன்பு நெஞ்சங்களே, நமது அஞ்சலியை செலுத்தி இன்றைய வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியை அவருக்கு அர்ப்பணமாக்குகிறோம்
டிசம்பர் 5, 2013 கடந்த வியாழன் இரவு தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் ஜாக்கப் ஜூமா தனது நாட்டினரிடம், நெல்சன் மண்டேலா அமைதியாக மரணமடைந்தார், நமது நாடு மிகப்பெரிய மகனை இழந்துவிட்டது. நாம் தந்தையை இழந்துவிட்டோம் என்ற செய்தியை அறிவித்தார். தென்னாப்பிரிக்காவின் வரலாற்றையும், நாடு எவ்வாறு நிறவெறிக் கோட்பாட்டிலிருந்து மக்களாட்சி நாடாக மாறியது என்பதையும் மக்களுக்கு நினைவுபடுத்தினார். இந்நிலைக்கு மிகவும் காரணமாக இருந்த மனிதரை நாம் இழந்துவிட்டோம். 27 வருட சிறைவாசத்துக்குப் பின்னர், 1990ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதியன்று மண்டேலா விடுதலையான பின்னர் நாட்டின் முதல் கறுப்பின அரசுத்தலைவராக இருந்தார். நாட்டின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கட்டும். தென்னாப்பிரிக்கர்கள் ஒவ்வொருவரும் தங்களது பாணியில் தங்களது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிப்போம் என்று தெரிவித்தார்.
தென்னாப்ரிக்க அரசுத்தலைவரின் இவ்வறிவிப்பு வெளிவந்த உடனேயே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட உலகத் தலைவர்கள் தங்களது அஞ்சலிச் செய்தியை வெளியிட்டனர். அஹிம்சை வழியில் மனித மாண்பும் ஒப்புரவும் ஏற்பட நெல்சன் மண்டேலா உழைத்தவர், புதிய சனநாயகத் தென்னாப்ரிக்காவுக்கு வித்திட்டவர் எனப் பாராட்டித் தந்திச் செய்தி அனுப்பினார் திருத்தந்தை. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஒபாமா, மனிதர்கள் மாற்றங்களைக் கொணர முடியும் என்பதை மண்டேலா வாழ்க்கை காட்டுகிறது எனவும், பெரிய ஒளி மறைந்துவிட்டது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும், மண்டேலா நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் நல்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூனும், இப்படி உலகத் தலைவர்கள் தங்களின் அஞ்சலி செய்தியை வெளியிட்டனர்.
மறைந்த தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை, மறைந்த மண்டேலாவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய உற்ற நண்பராக இருந்தவர் மண்டேலா, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் காரணமாக அவர் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்றார் பிரணாப் முகர்ஜி. உண்மையான காந்தியவாதியாக திகழ்ந்த மண்டேலாவின் வாழ்க்கை அனுபவமும், உழைப்பும் இனி வரும் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமாக அமையும் என பிரதமர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். நெல்சன் மண்டேலா உலக அமைதிக்காக ஆற்றிய சேவைகளைப் பாராட்டி, அவர் சிறையில் இருக்கும்போதே "நேரு சமாதான விருது" வழங்கியது இந்தியா. 1990ம் ஆண்டில் 'பாரத ரத்னா' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான அனைத்துலக மகாத்மா காந்தி விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மண்டேலாவின் பிரிவை முன்னிட்டு இந்திய அரசு 5 நாள் துக்கம் அனுசரிக்கிறது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்றன. மேலும், இலங்கை நாடாளுமன்றத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. டிசம்பர் 15, வருகிற ஞாயிறன்று இடம்பெறும் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசுத் தலைவர், இலங்கை அரசுத்தலைவர் உட்பட ஏறக்குறைய அறுபது தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான சமய உணர்வைக் கொண்டிருக்கும் தென்னாப்ரிக்க மக்கள், கடந்த வெள்ளிக்கிழமை முதல், மண்டேலாவுக்காகத் தினமும் செப வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். வெள்ளையர், கறுப்பர் என்ற நிற பாகுபாடின்றி அனைவரும் தங்களது துக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். இச்செவ்வாயன்று தேசிய அளவில் நினைவு செப வழிபாடு நடைபெறவுள்ளது. வருகிற புதன், வியாழன், வெள்ளி தினங்களில் மண்டேலாவின் உடல் அந்நாட்டின் பிரேட்டோரியாவில் அரசு மரியாதையுடன் வைக்கப்பட்டிருக்கும். இந்நாள்களில் தினமும் காலை 7 மணிக்கு Pretoriaவின் முக்கிய தெருக்கள் வழியாக அவரது உடல் எடுத்துச் செல்லப்படும். அப்போது மக்கள் தெருக்களில் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்துமாறு தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் ஜூமா நாட்டினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். டிசம்பர் 15 வருகிற ஞாயிறன்று மண்டேலாவின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படும். ஜொஹானஸ்பர்கின் Houghton புறநகர்ப் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு முன்பாகவும், Soweto விலுள்ள அவரது பழைய வீட்டுக்கு முன்பாகவும் இந்நாள்களில் பெருமளவாக மக்கள்கூடி மண்டேலாவுக்கு மரியாதை செலுத்துகின்றனர் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இஞ்ஞாயிறன்று தென்னாப்ரிக்காவின் அனைத்து ஆலயங்களிலும் மண்டேலா நினைவு வழிபாடு நிறைவேற்றப்பட்டது. இதில் மண்டேலாவின் வாழ்வு, அவர் விட்டுச்செல்லும் மரபுரிமை போன்றவை பகிரப்பட்டு அவரின் ஆன்மா நிறைசாந்தியடைய மக்கள் செபித்தனர். Sowetoவில் Regina Mundi கத்தோலிக்க ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய அருள்பணி Sebastian Roussouw, தென்னாப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் மண்டேலா "இருளில் ஒளிரும் ஒரு சுடர்" என்று கூறினார். மண்டேலா கைது செய்யப்பட்ட பின்னர், நிறவெறியை எதிர்த்துப் போராடிய ஆர்வலர்கள் இந்த Regina Mundi கத்தோலிக்க ஆலயத்தைத்தான் தங்களது திட்டங்களை உருவாக்குவதற்குப் பாதுகாப்பான இடமாக்க் கரதி செயல்பட்டனர். ஜொஹானஸ்பர்கின் Bryanston Methodist கிறிஸ்தவ சபை ஆலயத்தில் ஞாயிறு வழிபாட்டில் கலந்துகொண்ட அரசுத்தலைவர் ஜாக்கப் ஜூமா, மண்டேலா எந்தக் கொள்கைகளுக்காகத் துணிச்சலுடன் இறுதிவரை செயல்பட்டாரோ அவற்றை நாட்டினர் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். மண்டேலா அமைதி மற்றும் ஒப்புரவுக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தார். சுதந்திரத்துக்காகப் போராடினார். பிறரை ஒடுக்கியவர்களுக்கு எதிராகப் போராடினார். ஒவ்வொருவரும் சுதந்திரமாக வாழவேண்டுமென்று மண்டேலா விரும்பினார் என்றும் அரசுத்தலைவர் ஜூமா, அந்த ஞாயிறு வழிபாட்டில் கூறினார்.
Sowetoவின் Grace Bible ஆலயத்தில் மண்டேலாவின் படத்துடன், அவரது புகழ்பெற்ற "I'm prepared to die" என்ற உரையும் திரையில் ஓடிக்கொண்டிருந்தது. மண்டேலாவின் புகழ்பெற்ற உரைகளில் ஒன்றாகக் கருதப்படும், நான் இறக்கத் தயார் என்ற உரை, Rivonia உரை என்றும் அழைக்கப்படுகிறது. 1964ம் ஆண்டில் Rivoniaவில்இவருக்கு எதிராக நடந்த வழக்கு விசாரணையில் ஆற்றிய 3 மணிநேர உரையாகும் இது. மண்டேலாவோடு சேர்ந்து நிறவெறி பாகுபாட்டை எதிர்த்துப் போராடிய சிலர் கைது செய்யப்பட்ட பின்னர், தேச துரோக சதிவேலையில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் இவர் ஆற்றிய இந்த உரைதான் 1990ம் ஆண்டில் அவர் விடுதலை பெற்று வரும்வரை அவர் பொதுவில் ஆற்றிய கடைசி உரையாகும்.
அனைத்து மக்களும் நல்லிணக்கத்திலும் எல்லா வாய்ப்புக்களுடனும் ஒன்றிணைந்து வாழும் சனநாயக, சுதந்திரமான சமுதாயத்தைப் பெற நான் விரும்புகிறேன். இந்த எனது இலக்கைப் பெறுவதற்கு என் உயிர் தேவை எனில் நான் இறக்கத் தயார். நான் நாசவேலைக்குத் திட்டமிட்டேன் என்பதை நான் மறுக்கவில்லை. இதனால் ஏற்படும் விளைவை எண்ணிப்பார்க்காமல் நான் திட்டமிடவில்லை. வன்முறைமீதும் எனக்கு எவ்வித அன்பும் இல்லை. என் மக்கள் மீதான பல ஆண்டுகால அரசியல் கொடுமைகள், பல ஆண்டுகளாக எனது மக்கள்மீது வெள்ளையர்கள் நடத்திய சுரண்டல் போன்ற அரசியல் சூழலால் எழுந்த திட்டமே இது. வெள்ளையர்களிடம் எனது ஆப்ரிக்க மக்கள் காலம் காலமாக எவ்வளவு துன்புற்றார்கள் என்பதை எனது பெற்றோர், உறவினர், எனது இனத்தவர் மூலம் அறிந்தததே இதற்குக் காரணம் என நீதிமன்றத்தில் தனது நியாயத்தை முன்வைத்தார் மண்டேலா
1918ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி, தென் ஆப்ரிக்காவிலுள்ள முவெசோ என்ற ஊரில் பிறந்த நெல்சன் மண்டேலாவின் முழுப் பெயர் 'நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா(Nelson Rolihlahla Mandela) ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர். மண்டேலா ஆடு மாடு மேய்த்துக்கொண்டே குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். நிறையப் பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார். ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்த மண்டேலா, தன் இனத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்று படிப்பில் திறமைசாலியாகவும் இருந்தார். சட்டம் பயின்ற மண்டேலா, முதலில் அறவழியில் செயல்பட்டு, பிறகு ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தார். அதனால், குற்றம்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் வழக்கு நடைபெற்றது. அப்போது பல மாறுவேடங்களில் சுற்றினார். தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964ம் ஆண்டு ஜுன் 12ம் தேதியன்று இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். இவருக்கு உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இல்லை. இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது, 'மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. இவருக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்று இவரே சொல்லியிருக்கிறார். தென் ஆப்ரிக்காவின் அரசுத்தலைவர் கிளார்க்கின் முயற்சியால் 1990ம் ஆண்டில் விடுதலை ஆனார். மண்டேலா விடுதலையான அந்நாளில் வெள்ளமென திரண்டு மக்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.
நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தன. அந்த வகையில் ஏறக்குறைய 250 க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1993ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்று ஆற்றிய உரையில் ''நான் கறுப்பின மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதேசமயம் வெள்ளையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் வெறுக்கிறேன். நிறங்களைக் கடந்து மனிதர்களாக அன்பு செய்பவர்களாக என் நாட்டு மக்கள் திகழ வேண்டும்'' என்றார் மண்டேலா. இந்த அமைதிப் புறாவுக்கு, நமது புகழஞ்சலியை செலுத்துவோம். இச்செவ்வாயன்று அனைத்து நாட்டு மனித உரிமைகள் தினம் சிறப்பிக்கப்படும் இவ்வேளையில், மண்டேலா விட்டுச்செல்லும், மனித உரிமை, மனித மாண்பு, சுதந்திரம், விடுதலை, மன்னிப்பு, ஒப்புரவு போன்ற இவரின் மரபுரிமைகளை நம் வாழ்வாக்குவோம்.
அசைபோட்டுக்கொண்டிருக்கும் குதிரையைவிட அடிவாங்கும் குதிரைக்குத்தான் வேகம் அதிகம். ஒவ்வோர் அவமானத்தையும் நாம் எப்படிப் பொறுத்துக்கொண்டோம் என்பது முக்கியமல்ல, அதற்குப்பின் எப்படிச் செயல்பட்டோம் என்பதே முக்கியம். இதற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்பவர் நெல்சன் மண்டேலா.







All the contents on this site are copyrighted ©.