2013-12-09 16:50:44

திருத்தந்தை பிரான்சிஸ் : எகிப்து, புனிதபூமி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி நிலவட்டும்


டிச.09,2013. எகிப்து, புனிதபூமி மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் அமைதியும் சமய விடுதலையும் கிட்டுவதுடன், பகைமையும் பிரிவினைகளும் நிரந்தரமாக முடிவுறுவதாக என, அலெக்சாந்திரியாவின் காப்டிக் கத்தோலிக்க முதுபெரும் தந்தையுடன் இணைந்து, இத்திங்கள் காலை, வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வன்முறை மற்றும் பாதுகாப்பின்மைகளால் துன்புறும் மக்களை, குறிப்பாக, எகிப்து கிறிஸ்தவர்களை இவ்வேளையில் நினைவுகூர்வதாக உரைத்த திருத்தந்தை, அஞ்சாமல் மனஉறுதியுடன் செயல்படுமாறு அழைப்புவிடுத்தார்.
எகிப்திலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் அமைதி ஒப்பந்தங்கள் மீண்டும் உயிர்பெறுவதுடன், சமய விடுதலைக்கான உறுதிப்பாடுகளும் வழங்கப்பட வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்ததுடன், கிறிஸ்தவர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் அமைதியில் வாழ்வதற்கான உரிமையும், பொதுநலனுக்குப் பங்களிப்பதற்கான ஆவலும் மதிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்திருப்பலியில் உரையாற்றிய அலெக்சாந்திரியாவின் காப்டிக் முதுபெரும் தந்தை இப்ராஹிம் ஈசாக் சித்ராக், திருத்தந்தையின் ஆதரவு எகிப்து தலத்திருஅவைக்கு எப்போதும் தேவை எனக் கூறியதுடன், அந்நாட்டுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.