2013-12-07 15:28:39

நல்ல சமாரியர்களாக அனைவரும் செயல்பட திருத்தந்தை அழைப்பு


டிச.07,2013. கிறிஸ்தவர்கள் தாங்கள் பெற்றுள்ள திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதல் திருவருள்சாதனங்களால் துன்புறும் அனைவருக்கும் நல்ல சமாரியர்களாக வாழுமாறு அழைப்புப் பெற்றுள்ளனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2014ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி சிறப்பிக்கப்படும் 22வது உலக கத்தோலிக்க நோயாளர் தினத்திற்கென இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருஅவை, கிறிஸ்துவின் பிரசன்னத்தை நோயாளிகளில் சிறப்பாகப் பார்க்கின்றது என்றும், நம் ஒவ்வொரு துன்பத்தையும் அவரோடு ஒன்றித்து அவரில் எதிர்கொள்வதற்குத் தேவையான துணிச்சலை கடவுள் தருகிறார் எனவும் இச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்து முக்கிய கருத்துக்களை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், பிறரன்பில் ஈடுபடுவது, குறிப்பாக, துன்புறுவோர், ஓரங்கட்டப்பட்டோர் போன்றோருக்குப் பிறரன்புப் பணிகளைச் செய்வது, கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்துக்கு வைக்கப்படும் உண்மையான பரிசோதனை எனவும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
நமது அக்கறை தேவைப்படும் மக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
"நாமும் நமது சகோதரர்களுக்காக நம் வாழ்வை வழங்க வேண்டும்" என்பது 22வது உலக கத்தோலிக்க நோயாளர் தினத்தின் மையக்கருத்தாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.