2013-12-07 15:23:19

நற்செய்தி அறிவிப்புக்கு இணையதளம் இன்றியமையாதது எனினும், அதுமட்டும் போதாது:திருத்தந்தை பிரான்சிஸ்


டிச.07,2013. நற்செய்தி அறிவிப்புக்குத் தொழில்நுட்பத் திறமைகள் முக்கியமானவையாக இருந்தபோதிலும், உண்மையான மனித உறவுகளும், நம் ஆண்டவரோடு கொள்ளும் ஆள்-ஆள் உறவும் இன்றியமையாதவை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட பொதுநிலையினர் அவை நடத்திய 26வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட 80 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானின் கொன்சிஸ்ட்ரி அறையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், வாழ்வில் நம்பிக்கையிழந்த, காயப்பட்ட அல்லது காணாமல்போன மனிதரைச் சந்தித்து நற்செய்தி அறிவிப்பதற்குத் தொழில்நுட்பத் திறமைகள் மட்டும் போதாது என்று தெரிவித்தார்.
“டிஜிட்டல் உலகில் கிறிஸ்துவை அறிவித்தல்” என்ற தலைப்பில் மூன்று நாள்கள் கூட்டம் நடத்திய பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, மக்கள் மத்தியில், குறிப்பாக இளையோர் மத்தியில் நற்செய்தியின் பாங்குடன் திருஅவை செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இணையதளத்தை வாழ்வின் இயல்பான அங்கமாக மாற்றியுள்ள இளையோர் மத்தியில் வாழ்வு பற்றி எழும் கட்டுக்கடங்காத கேள்விகளுக்குப் பதில் சொல்வதாயும், இதற்குப் பதில்சொல்லும், மனுஉரு எடுத்த கருணைநிறை ஆண்டவர் இயேசுவிடம் செல்ல வழியைக் காட்டுவதாயும் நற்செய்தி அறிவிப்பு அமையவேண்டுமெனவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இணையதளம் முன்வைக்கும் வாய்ப்புகள் மற்றும் ஆபத்துக்கள் மத்தியில் நாம் அனைத்தையும் பரிசீலனை செய்யவேண்டும், மகிமைநிறை ஆண்டவரைச் சந்திப்பதற்கு மக்களை இட்டுச்செல்லும் நல்ல வாய்ப்புகளையும் தூய ஆவியின் துணையுடன் தேட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.