2013-12-07 15:36:09

டிசம்பர் 08, திருவருகைக் காலம் 2ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


கிழக்கு, மேற்கு என்று, ஜெர்மனியை இரு நாடுகளாகப் பிரித்து வைத்திருந்த பெர்லின் சுவர், 1989ம் ஆண்டு இடிக்கப்பட்டதால், ஜெர்மனி ஒருநாடாக இணைந்தது. மக்களின் முயற்சியால் ஏற்பட்ட ஒரு பெரும் சமுதாய புரட்சி இது என்று வரலாறு சொன்னது. இடிக்கப்பட்ட அந்தச் சுவர் சிறு சிறு துண்டுகளாக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன. பெர்லின் சுவர் என்று சொல்லி, போலித் துண்டுகளும் விற்கப்பட்டன.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, நியூயார்க்கில் இரு வர்த்தகக் கோபுரங்கள் வன்முறைத் தாக்குதலால் இடிந்து விழுந்தன. அமெரிக்க வரலாற்றைக் காயப்படுத்திய ஒரு நிகழ்வு இது என்று கூறப்பட்டது. இந்தக் கோபுரங்களின் இடிபாடுகளும் விற்பனை செய்யப்பட்டன.
2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் முதல் புனிதராக மேரி மெக்கில்லாப் (St.Mary MacKillop) உயர்த்தப்பட்டார். அப்புனிதரின் உருவத்தை, படங்களாக, அணிகலன்களாக மாற்றி விற்பதில் ஆஸ்திரேலிய அரசுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையே, மோதல்கள் ஏற்பட்டன. வத்திக்கான் இந்தப் பிரச்சனையில் தலையிட்டுத் தீர்க்க வேண்டுமென்று வர்த்தகர்கள் கேட்டுக்கொண்டனர்.
சமுதாயப் புரட்சி, வன்முறைத் தாக்குதல், புனிதராகும் திருச்சடங்கு என்று உலகில் எது நடந்தாலும், அந்நிகழ்வை எவ்வகையில் வியாபாரமாக்கி, இலாபம் திரட்டலாம் என்ற எண்ணம் உலகில் பெருமளவு பரவிவருவது கவலைதரும் ஒரு போக்கு.
நமது சமய விழாக்கள் அனைத்தும் வியாபார மயமாகி வருகின்றன. நமது சமய விழாக்களை எவ்வகையில் கொண்டாட வேண்டும் என்பதை, இந்த வியாபார உலகம் அடிக்கடி, மிக சப்தமாகக் கூறிவருவதால், இவ்வழிகளிலேயே நமது சிந்தனைகள் செல்லும் ஆபத்து கூடிவருகிறது. வியாபார உலகம் சொல்லித்தரும் வழிகள், நம் வாழ்வை இதமாகக் கொண்டு செல்லும் வழிகள். எவ்வித சவாலையும் முன் வைக்காமல், நம்மைக் கனவில் மிதக்க வைக்கும் வழிகள்.
இவ்வழிகளைக் காட்டுவதற்கு பல நாயகர்களை, நம் முன் காட்டுகின்றது இந்த வியாபார உலகம். ஒருசில நாடுகளில், இந்த நாயகர்களில் பலருக்குக் கோவில்கள் கட்டும் அளவிற்கு இவர்கள் மக்கள் மனங்களில் இடம் பிடித்து, அங்கு இருக்க வேண்டிய இறைவனை வெளியேற்றுவது பெரும் வேதனையான போக்கு. இந்த வியாபார உலகின் போதனைகளுக்கு, ஒரு மாற்றாக இன்றைய முதல் வாசகமும் நற்செய்தியும் நமக்குப் பாடங்களைச் சொல்லித் தருகின்றன. வியாபார உலகத்தின் கூச்சல்களை எல்லாம் மீறி இந்த வார்த்தைகள் நம் மனதை சென்றடைய வேண்டும். முயல்வோமா?
"அவசரப்பட்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை ஆரம்பிக்காதீர்கள், தயவு செய்து டிசம்பர் 24 இரவு வரை காத்திருங்கள்" என்று அமெரிக்க ஆயர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் தன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவில் Salt Lake City என்ற மறைமாவட்டத்தின் ஆயர் John C.Wester அனுப்பிய அந்த வேண்டுகோள், வியாபார உலகின் பிடியிலிருந்து கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை விடுதலை செய்யும் ஒரு முயற்சியென்று சொல்லத் தோன்றுகிறது. (Meaning of season lost by rushing Christmas celebration, bishop says - Catholic News Service)
அவர் இப்படிச் சொல்வதற்குக் காரணம் என்ன? அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் இறுதி வியாழனன்று நன்றியறிதல் நாள் கொண்டாடப்படும். இறைவன் அளித்த நல்ல அறுவடைக்கு நன்றி சொல்லும் ஒரு விழாவாக ஆரம்பித்த இந்நாளை, வியாபார உலகம் தனக்கே உரித்தான விடுமுறை கொண்டாட்டமாக மாற்றிவிட்டது. தற்போது இந்த நன்றியறிதல் நாள் எவ்வித சமய உணர்வும் இல்லாமல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா முடிந்த கையோடு, நவம்பர் இறுதியிலிருந்து, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. விளம்பர, வியாபார உலகம் ஆரம்பித்து வைத்துள்ள இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை ஆடம்பரமாக, ஆர்ப்பாட்டமாக ஒரு மாத அளவு கொண்டாடிவிட்டால், டிசம்பர் 24ம் தேதி இரவு, உண்மையான கிறிஸ்மஸ் வரும்போது நாம் அனைவரும் களைத்துப் போய்விடுவோம் என்று ஆயர் Wester எச்சரிக்கை தந்தார். களைத்து மட்டும் போய்விட மாட்டோம் அன்பர்களே, கலைந்தும் போய்விடுவோம். ஒவ்வொரு திருநாளின் உட்பொருளை விட்டுக் கலைந்து, வேறு வழிகளில் நம் மனங்கள் சிந்திக்கின்றன.
கிறிஸ்மஸின் உண்மைப் பொருளை உணர்வதற்கு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு நல்ல காலம், திருவருகைக் காலம். வீட்டு அலங்காரம், புத்தாடைகள், வண்ண விளக்குடன் கூடிய விண்மீன்கள், கிறிஸ்மஸ் மரம், பரிசுகள் என்று வியாபார உலகம் காட்டும் வழியில் இந்த வருகைக் காலத்தை நாம் இந்நேரம் ஆரம்பித்திருந்தால், அவற்றைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, உண்மையான கிறிஸ்மஸின் பொருளை உணர்வதற்கு இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.
இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானை நாம் சந்திக்கிறோம். அவர் இன்றைய நற்செய்தியில் சொல்லியிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை. அப்பட்டமான உண்மை. எந்தவித இனிப்பும் கலக்காத கசப்பான உண்மை. கசப்பான மருந்து. வியாபார உலகம் உருவாக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளில் இந்த வார்த்தைகள் இடம் பெறமுடியுமா என்று சிந்தித்துப் பார்த்தேன். ஊஹூம்... வாய்ப்பே இல்லை. இது போன்ற உண்மைகளை மறைத்து, இந்த உண்மைகளைச் சொல்பவர்களை மறைத்து, மற்ற கனவு நாயகர்களை, அவர்கள் சொல்லும் விளம்பர வரிகளை நம் மனங்களில் பதிய வைப்பதுதானே இந்த உலகின் விருப்பம்.
“கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை இவ்வளவு சீக்கிரம் ஆம்பிக்காதீர்கள்” என்று சொன்ன ஆயர் Westerஐ, வாய்ப்பு கிடைத்தால், வியாபார உலகம் கடத்திக் கொண்டுபோய் கிறிஸ்மஸ் முடியும்வரை கண்காணாத இடத்தில் வைத்துவிடும். அதேபோல் திருமுழுக்கு யோவானை யூத மதத் தலைவர்களும், உரோமைய அரசும் இந்த உலகை விட்டே அனுப்பத் துடித்தார்கள். விரைவில் அனுப்பியும் விட்டார்கள். உண்மையைச் சொல்லும் எந்த இறைவாக்கினருக்கும் ஊரில் நல்ல பெயர் இருந்ததில்லையே!
ஆனால், உண்மையைச் சொல்லி, உலகில் நன்மையை வளர்க்கும் இறைவாக்கினர்கள் நமது உலகிற்கு தேவை. இறைவனின் பக்கம் நம்மை வழி நடத்தும் இறைவாக்கினர்கள், இறை பணியாளர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள் அவர்கள் உலகில் இருந்தால் இவ்வுலகம் எப்படி அழகாக மாறும் என்பவைகளை இறைவாக்கினர் எசாயா ஒரு அழகியக் கனவாகத் தந்திருக்கிறார் இன்றைய முதல் வாசகத்தில். இந்த வரிகளுக்கு விளக்கமே தேவையில்லை. எசாயாவின் இந்தக் கனவு இன்று நாம் வாழும் உலகில் நடைமுறையாக வேண்டும் என்ற ஏக்கத்தோடு இந்த வரிகளைக் கேட்போம்.
இறைவாக்கினர் எசாயா 11: 1-10
ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்: காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்: நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்: நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்: வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்: உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை: உண்மை அவருக்கு இடைக்கச்சை.
இத்தகைய நேரியவர்கள் வாழும் நாட்டில் என்ன நடக்கும் என்பதையும் இந்தக் கனவில் தொடர்ந்து கூறுகிறார் இறைவாக்கினர் எசாயா:
அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்: கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்: பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்: அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்: சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்: பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்: பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை: கேடு விளைப்பார் யாருமில்லை: ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.
அன்புள்ளங்களே, வியாபார உலகம், விளம்பர உலகம் காட்டும் பல கனவுகளை, நமது திரைப்படங்களில் நாயகர்கள் சொல்லும் வசனங்களை, செய்யும் சாகசங்களைக் கண்டு இவை உண்மையாகக் கூடாதா என்று எங்கும் நாம், இறைவாக்கினர் எசாயாவின் கனவையும் ஏன் அப்படி நினைத்து ஏங்கக் கூடாது? ஏங்குவோம். உலகில் நல்லவைகள் அபரிமிதமாக நடக்க வேண்டும் என்று ஏங்குவோம்.
நல்லவை நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் துவங்கியுள்ள திருவருகைக் காலத்தில் நமக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குபவர் அன்னை மரியா. மீட்பரின் வருகையை, பல வழிகளில் எதிர்பார்த்து காத்திருந்த இஸ்ரேல் மக்கள் மத்தியில் வாழ்ந்த அன்னை மரியா, அவர்களைப் போல அர்த்தமற்ற வழிகளில் இறைவனை எதிர்பார்க்காமல், தனக்குள்ளேயே அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அந்த அன்னை, மாசற்ற வகையில் தன் தாயின் கருவில் உருவானதை அமல அன்னை திருநாள் என்று இத்திங்கள் நாம் கொண்டாடுகிறோம். அந்த அன்னையின் பரிந்துரையாலும் வழிநடத்துதலாலும் நாம் திருவருகைக் காலத்தின் முழு பொருளை உணர்ந்துகொள்ளும் வரம் வேண்டுவோம்.
நம்பிக்கை ஆண்டை அண்மையில் நாம் நிறைவு செய்தோம். அந்த நம்பிக்கை ஆண்டில் நமது மனதில் விதைக்கப்பட்ட நம்பிக்கை விதைகள், வேர்விட்டு வளர்ந்து, இவ்வுலகம் நம்பிக்கையால் நிறையவேண்டும் என்று அமல அன்னை வழியாக, இத்திருவருகைக் காலத்தில் சிறப்பாக செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.