2013-12-06 16:18:23

திருத்தந்தை பிரான்சிஸ், அனைத்துலக இறையியல் பணிக்குழு சந்திப்பு


டிச.06,2013. இறையியல் போதனைகளும் ஆய்வும் புனித வாழ்வை நோக்கிய உண்மையான பாதையாக இருக்கும்வேளை, அவை இறையியல் வல்லுனர்களை, தற்பெருமைக்கு இட்டுச்செல்லக்கூடிய ஆபத்தை முன்வைக்கக்கூடும் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்துலக இறையியல் பணிக்குழுவின் 32 பேரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கலாச்சாரங்களுடன் திருஅவை நடத்தும் உரையாடல்களின் முன்னோடிகளாக இறையியல் வல்லுனர்கள் இருக்கின்றனர் என்று உரைத்த அதேவேளை, சில சமயங்களில் இறையியல் வல்லுனர்கள் ஆபத்தையும் எதிர்கொள்ளக்கூடும், அவர்களின் இதயம் வெறுமையை எதிர்கொள்ளக்கூடும் என்று கூறினார்.
ஒரே உண்மையான கடவுளில் விசுவாசம் வைப்பதில் வரக்கூடிய பிறழ்வுநிலைகள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு கிறிஸ்துவில் கடவுள் தம்மை முழுமையாக வெளிப்படுத்தியது, கடவுளின் பெயரால் நடத்தப்படும் எல்லா வன்முறைகளையும் தவிர்க்க அழைக்கிறது என்றும் கூறினார்.
இயேசு தம் சிலுவையில் சிந்திய குருதியால் மனிதரைக் கடவுளோடும், ஒருவர் ஒருவரோடும் ஒப்புரவாக்கினார், அவர் தீமையை நன்மையால் வென்றார் என்பதே வன்முறையைப் புறக்கணிப்பதற்குத் தூண்டுகின்றது என்றும் திருத்தந்தை அனைத்துலக இறையியல் பணிக்குழுவினரிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.