2013-12-06 16:17:59

தனது கருத்துக்கோட்பாடுகளுக்காகப் போராடிய மண்டேலாவுக்கு மரியாதை செலுத்துவோம், தென்னாப்ரிக்க ஆயர்கள்


டிச.06,2013. தென்னாப்ரிக்க முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறப்பையொட்டி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள், தனது கருத்துக்கோட்பாடுகளுக்காகப் போராடிய மண்டேலாவுக்கு மரியாதை செலுத்துவோம் எனக் கூறியுள்ளனர்.
மேன்மை பொருந்திய மனிதரையும், நம் மூதாதையரையும் அவர்களது தலைமுறை வரிசைப்படி புகழ்வோம்.... அவர்கள் தங்களுடைய நாடுகளில் தங்களது அறிவுக்கூர்மையால் அறிவுரை வழங்கினார்கள், நற்பயிற்சியின் சொற்களில் ஞானிகளாய் இருந்தார்கள்(சீராக் 44:1-3) என்ற விவிலிய வார்த்தைகளால் இந்த அறிக்கையைத் தொடங்கியுள்ள ஆயர்கள், தென்னாப்ரிக்க மக்களுக்காக மண்டேலா செய்த அளப்பரிய தியாகங்களையும், அவரின் தலைமைத்துவமும், நல்தூண்டுதல்களும் நாட்டை ஒப்புரவின் பாதையில் கொண்டுசெல்வதற்கு உதவியதையும் நினைத்து நன்றி தெரிவித்துள்ளனர்.
தனது சொந்த விடுதலை வாழ்வை நோக்காமல், அனைவருக்கும் சம வாய்ப்புக்கள் வழங்கப்படும் சனநாயக மற்றும் நீதியான தென்னாப்ரிக்காவை உருவாக்க அவர் தனது கண்ணோட்டத்தையும் கொள்கைகளையும் ஒருபொழுதும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கவில்லை என, தென்னாப்ரிக்க ஆயர் பேரவைத் தலைவர் கேப்டவுன் பேராயர் Stephen Brislin கூறியுள்ளார்.
இன்னும், மண்டேலா உண்மையான காந்தியவாதி என இந்திய அரசுத்தலைவர், பிரதமர், அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கறுப்புக் காந்தி என அழைக்கப்படும் மண்டேலாவின் மறைவையொட்டி இந்தியாவில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகின்றது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.