2013-12-04 16:49:28

திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்கள் குழு சந்திப்பு


டிச.04,2013. திருப்பீட தலைமையகச் சீர்திருத்தம் குறித்து முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்து கலந்துபேசுவதற்கென எட்டு உறுப்பினர்களைக் கொண்ட கர்தினால்கள் குழுவை இச்செவ்வாயன்று இரண்டாவது முறையாகச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழன்வரை நடைபெறும் இச்சந்திப்பில், உலகின் பல்வேறு பகுதிகளில் ஆயர்களிடமிருந்து சேகரித்த ஆழ்ந்த கருத்துக்களை இக்கர்தினால்கள் குழு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பித்ததாக, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
திருப்பீட தலைமையகத்தின் பல்வேறு துறைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்து பேசப்படுவதாகவும், திருப்பீட இறைவழிபாடு மற்றும் திருவருள்சாதனப் பேராயம் குறித்து இச்செவ்வாய் காலை அமர்வில் பேசப்பட்டதாகவும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.
இப்புதனன்றும் இக்கர்தினால்கள் குழுவைச் சந்தித்துள்ளார் திருத்தந்தை.
இக்கர்தினால்கள் குழுவின் முதல் கூட்டம் கடந்த அக்டோபரில் நடைபெற்றது. வருகிற பிப்ரவரி 22ம் தேதி புதிய கர்தினால்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், இக்குழுவின் மூன்றாவது கூட்டம் பிப்ரவரி 17,18 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.