2013-12-04 16:51:37

உலகில் பசியை அகற்றுவதற்குத் திருத்தந்தை செபம்


டிச.04,2013. உலகில் பசியை அகற்றுவதற்கானச் செபத்தையும், அது குறித்த உலகளாவிய நடவடிக்கையையும் இம்மாதம் 10ம் தேதி தொடங்கி வைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“ஒரே மனிதக் குடும்பம், அனைவருக்கும் உணவு” என்ற தலைப்பில் தென் பசிபிக் தீவாகிய சாமோவாவில் இம்மாதம் 10ம் தேதி நண்பகலில் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் தொடங்கும் இந்நடவடிக்கையை ஐந்து நிமிட ஒலி-ஒளிச் செய்தியின் மூலம் தனது ஆசீர்வாதத்தை வழங்கித் தொடங்கி வைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உணவுப்பொருள்கள் வீணாக்கப்படுதலுக்கு எதிராகவும், உலகளவில் அனைவருக்கும் உணவு கிடைப்பதை ஊக்குவிக்கவும், உலகில் பசியையும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையையும் அகற்றுவதற்கும் தல, தேசிய மற்றும் உலகளாவிய அளவில் செயல்படுவதற்கு, தனது 164 உறுப்பு நிறுவனங்களுக்கும், தலத்திருஅவைகளுக்கும் அழைப்புவிடுத்துள்ளது அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம்.
2010ம் ஆண்டுக்கும் 2012ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலகில் ஏறக்குறைய நூறு கோடிப் பேர் அதாவது, ஏறக்குறைய எட்டுப் பேருக்கு ஒருவர் வீதம் கடும் பசியையும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையையும் எதிர்நோக்கினர் எனக் கூறியுள்ளது அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம்.
உணவு கிடைப்பதற்கான உரிமை, அனைத்துலக மனித உரிமைகள் அறிக்கையில் ஒன்றாக உள்ளது எனக் கூறியுள்ள அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் ஆஸ்கார் ரொட்ரிகெஸ் மாராதியாகா, 2025ம் ஆண்டுக்குள் உலகில் பசியைப் போக்கும் ஐ.நா.வின் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுள்ளார்.
டிசம்பர் 10, அனைத்துலக மனித உரிமைகள் தினமாகும்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.