2013-12-03 15:05:34

திருத்தந்தை பிரான்சிஸ் : மகிழ்ச்சியோடு இல்லாத திருஅவையை கற்பனை செய்து பார்க்க முடியாது


டிச.03,2013. கிறிஸ்துபோன்று திருஅவை எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும், மகிழ்ச்சியோடு காணப்படாத திருஅவை நினைத்துப் பார்க்க முடியாதது என, இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதி, மகிழ்ச்சி ஆகிய இரு தலைப்புக்களை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, உண்மையான அமைதியை வழங்கும் ஆண்டவரின் மகிழ்ச்சியை தம் பிள்ளைகளுக்கு வழங்குமாறு திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இன்றையத் திருப்பலியின் முதல் வாசகத்தில், மெசியா நமக்குக் கொண்டுவரும் அமைதி பற்றி எசாயா இறைவாக்கினர் பேசுகிறார், அதேசமயம், இன்றைய நற்செய்தியில், மகிழ்வான இயேசுவின் இதயத்தைப் பார்க்கிறோம் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போதிக்கும், குணமளிக்கும், பயணம்செய்யும், தெருக்களில் நடக்கும் இயேசுவை நாம் எப்பொழுதும் நினைக்கிறோம், ஆனால், இயேசு புன்முறுவலுடன் காணப்பட்டதை, மகிழ்ச்சியாக இருந்ததை நாம் நினைத்துப் பார்க்கப் பழக்கப்படவில்லை என மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு தூய ஆவியில் தமது தந்தையோடு உள்ளார்ந்த உறவில் இருந்தபோது அவர் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தார், அவர் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தார் எனக் கூறினார்.
இந்தத் தமது உள்ளார்ந்த மகிழ்ச்சியை இயேசு நமக்கு அளிக்கிறார், இந்த மகிழ்ச்சி, ஓர் அமைதியான நிலை அல்ல, ஆனால், இந்தக் கிறிஸ்தவ மகிழ்ச்சி உண்மையான அமைதி, ஏனெனில் நம் ஆண்டவர் மகிழ்ச்சியாக இருந்தார் என விளக்கினார் திருத்தந்தை.
மகிழ்ச்சியாக இல்லாத திருஅவையை கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும், திருஅவையின் மகிழ்ச்சி இயேசுவின் பெயரை அறிவிப்பதில் உள்ளது என்றும், அவர் கடவுள், அவர் ஆண்டவர், அவர் நம்மோடு நடக்கிறார், அவர் நம்மை மீட்கிறார் என்பதை அறிவிப்பது திருஅவையின் மகிழ்ச்சி என்றும், மணமகளாக இருக்கும் இம்மகிழ்ச்சியில் திருஅவை தாயாக மாறுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.