2013-12-03 15:11:45

குடியேற்றதாரர்மீது அன்பும் தோழமையும் காட்ட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது, கர்தினால் வேலியோ


டிச.03,2013. குடியேற்றதாரர்மீது அன்பும் தோழமையும் காட்ட வேண்டிய பொறுப்பு உலகினர் அனைவருக்கும், குறிப்பாக நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும், அரசுகளுக்கும் உள்ளது என, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் அவைத் தலைவர் கர்தினால் அந்தோணியோ மரிய வேலியோ இச்செவ்வாயன்று மால்ட்டாவில் கூறினார்.
மால்ட்டாவின் La Vallettaவில் இத்திங்களன்று தொடங்கிய 3 நாள் கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய கர்தினால் வேலியோ, அடைக்கலம் தேடும் குடியேற்றதாரரின் மனித மாண்பு மதிக்கப்படுமாறும் வலியுறுத்தினார்.
ஐரோப்பாவிலே அதிகமாகப் புகலிடம் கேட்கப்படும் நாடு மால்ட்டா என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் வேலியோ, ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளிலிருந்து வரும் குடியேற்றதாரரில் 50 விழுக்காட்டினர் மால்ட்டாவில் கரையிறங்குகின்றனர் எனத் தெரிவித்தார்.
19 ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் குடியேற்றதாரர் பணிக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் பிற வல்லுனர்கள் என ஏறக்குறைய 40 பேர் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.