2013-11-30 16:39:57

திருத்தந்தை பிரான்சிஸ் : அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வு ஆண்டு 2015


நவ.30,2013. 2015ம் ஆண்டு, அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்கென அர்ப்பணிக்கப்படும் என, இவ்வெள்ளிக்கிழமை காலையில் ஆண் துறவு சபைகளின் 120 அதிபர்களை வத்திக்கான் உலக ஆயர்கள் மாமன்ற அரங்கில் சந்தித்தபோது அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த புதன் முதல் இவ்வெள்ளிவரை உரோமையில் 82வது பொதுப் பேரவையை நடத்திய இந்த அதிபர்களுக்கு சிறிய உரையாற்றிய பின்னர், கேள்வி பதில் போன்ற கலந்துரையாடல் நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ், மறைமாவட்ட வாழ்வை துறவற சபைகள் எவ்வாறு வளப்படுத்த முடியும் என்பது பற்றி விளக்கினார்.
மூன்றுமணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் தனது கருத்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களுக்குப் பணி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு தங்களின் துறவு சபைகளின் உறுப்பினர்களை ஊக்கப்படுத்துமாறும் இந்த அதிபர்களைக் கேட்டுக்கொண்டார்.
அந்தந்த இடங்களில் வாழும் மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் திருஅவையின் போதனைகளை நன்கு கடைப்பிடிப்பதற்கு அம்மக்களுடன் உரையாடல் நடத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை, துறவு சபைகளின் உருவாக்குதல் குறித்தும் பேசினார்.
இச்சந்திப்பின் இறுதியில், 2015ம் ஆண்டு, அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்கென அர்ப்பணிக்கப்படும் என அறிவித்ததோடு, துறவு சபைகளின் விசுவாசம் மற்றும் சேவைக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.