2013-11-28 15:44:11

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவின் வெற்றி அருகிலுள்ளது என, கிறிஸ்தவர்களின் சித்ரவதை நமக்குச் சொல்கிறது


நவ.28,2013. இறைவனை வழிபடுவதைத் தடைசெய்யும் மற்றும் மதம், ஒருவரின் தனிப்பட்ட விவகாரம் என்று சொல்லும் உலக சக்திகள்மீதும், தீமையின்மீதும் கிறிஸ்து அடைந்த வெற்றி அருகிலுள்ளது என, கிறிஸ்தவர்களின் சித்ரவதை நமக்குச் சொல்கிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருவழிபாட்டு ஆண்டின் நிறைவு வாசகங்கள் இந்நாள்களில் நமக்கு வழங்கும் இறைவனுக்கும் அலகைக்கும் இடையே நடக்கும் இறுதிப் போராட்டம் குறித்து, இவ்வியாழன் காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இறைவனைத் தோற்கடிக்க விரும்புவரின் கவர்ச்சிகளுக்குள் ஈர்க்கப்படும் பெரும் ஆபத்தான சோதனை குறித்துப் பேசிய திருத்தந்தை, இயேசு பாலைவனத்திலும், பொதுவாழ்விலும், சிலுவையிலும் எதிர்கொண்ட பற்பல சோதனைகள், அவமானங்கள், பழிபாவங்கள் என எல்லாவற்றையும் குறிப்பிட்டு, அமைதியின் இளவரசரின் உயிர்ப்பில் உலகின் இளவரசரின் போர் தோல்வி கண்டது எனக் கூறினார்.
உலகின் இறுதிநேரத்தில் அமைதியின் இளவரசர் வந்து உலகின் தலைவராக இருப்பார் என்றும் கூறிய திருத்தந்தை, இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தில் சொல்லப்பட்டுள்ள, இறைவாக்கினர் தானியேல், அரசரை வழிபட மறுத்ததால் சிங்கக் குகையில் போடப்பட்டது பற்றியும் பேசினார்.
இந்த அருவெறுப்பான செயலை, இறைவழிபாட்டுத் தடை எனப் பெயரிடலாம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், சித்ரவதைகளை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்கள் நம் அனைவருக்கும் நிகழவிருப்பதன் முன்னடையாளமாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
நாம் அஞ்சக் கூடாது, இயேசு நம்மிடம் பிரமாணிக்கத்தையும் பொறுமையையும் மட்டுமே கேட்கிறார், இறுதிவரை இறைவனுக்கு பிரமாணிக்கமாக இருந்த தானியேல் போன்று நாம் உறுதியாய் இருக்குமாறு இயேசு கேட்கிறார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.