2013-11-27 16:08:51

திருஅவை, 116 நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சேவை செய்து வருகிறது, காரித்தாஸ் தலைவர்


நவ.27,2013. எய்ட்ஸ் நோயாளிகளுக்கானத் திருஅவையின் கனிவும் ஒருமைப்பாடும் நிறைந்த சேவையை, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ஆற்றி வருகின்றது என, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் ஆஸ்கார் ரொட்ரிக்கெஸ் மாராதியாகா கூறினார்.
டிசம்பர் முதல் தேதி கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினத்துக்கென செய்தி வெளியிட்டுள்ள கர்தினால் மாராதியாகா, ஏறக்குறைய 116 நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் திருஅவை தனது அன்பின் பணியை ஆற்றி வருகின்றது எனக் கூறினார்.
HIV நோய்க் கிருமிகளால் யாரும் புதிதாகப் பாதிக்கப்படக் கூடாது, எய்ட்ஸ் நோயாளிகளே இருக்கக் கூடாது, இந்நோயாளிகளுக்கு எதிரானப் பாகுபாடுகளே இருக்கக் கூடாது என்ற விருதுவாக்குடன் இந்த 2013ம் ஆண்டின் அனைத்துலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுவதறுகு ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளதையும் கர்தினாலின் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
திருமணத் தம்பதியர் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாக இருப்பது, தனிப்பட்டவர் தனது பாலியல் நடவடிக்கையில் ஒழுக்கமாக இருப்பது, ஒருவர் ஒருவருடனான உறவுகளில் பொறுப்புடன் நடந்துகொள்வது போன்றவை மூலமாக, HIV நோய்க் கிருமிகள் யாரையும் புதிதாகத் தாக்காமல் இருக்கச் செய்யலாம் எனவும் கூறியுள்ளார் கர்தினால் மாராதியாகா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.