2013-11-27 15:19:57

அன்னைமரியா திருத்தலங்கள் – கொர்னபூசா அன்னைமரியா திருத்தலம், இத்தாலி


நவ.27,2013. “கொர்னபூசா அன்னைமரியா திருத்தலம் மிக அழகான திருத்தலம். இத்திருத்தலம் மனிதரின் கையால் கட்டப்பட்டது அல்ல, இறைவனே இதனை அமைத்தார்”. இவ்வாறு சொன்னவர் இந்த கொர்னபூசா அன்னைமரியாமீது அளவற்ற பக்தி கொண்டிருந்த முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பர். அத்திருத்தலத்தின் ஒரு பகுதியில் இத்திருத்தந்தை தங்கியிருந்த படுக்கையறை, அவரது கட்டில், ஆடைகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கி.பி.1500ம் ஆண்டில் கட்டப்பட்ட இத்திருத்தலத்தின் வரலாறு அக்காலத்திலிருந்து தொடங்குகிறது. 700 மீட்டர் உயரமுடைய மலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பெர்கமோ மறைமாவட்டத்தைச் சேர்ந்த இந்த Cornabusa திருத்தலத்தின் பெயர் அப்பகுதியில் வழக்கு மொழியாகப் பேசப்படும் பெர்கமாஸ்கோவிலிருந்து வந்துள்ளது. Corna என்றால் பாறை என்றும், busa என்றால் துவாரம் என்றும் அர்த்தம். எனவே Cornabusa என்றால் பாறையில் துவாரம் என்று பொருள். இந்தத் திருத்தலமும் அந்த மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகைதான். ஒரு பெரிய இயற்கையான குகை, உட்புறம் நன்கு செதுக்கப்பட்டு ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த வேலைப்பாடுகளும் இல்லாமல் எளிமையாக, அதேசமயம் அழகாகத் தோற்றமளிக்கும் இந்தக் குகைத் திருத்தலத்தின் நுழைவாயில் ஒரு பெரிய இரும்பக் கம்பித் கதவால் ஆனது. மலையிலிருந்து விழும் நீரூற்றுகளின் தண்ணீர், இங்கு பீடத்துக்கருகில் ஓர் ஓரத்தில் வடிந்து கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. இவ்விடம் சுற்றிலும் உயர்ந்த மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு செல்லும் பாதை மலைப்பாதை என்பதால் குளிர்காலத்தில் பனி பெய்யும்போது மக்கள் செல்வது கடினம். எனவே நவம்பர் முதல் வாரம் முதல் உயிர்ப்பு ஞாயிறுவரை இத்திருத்தலம் திருப்பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளது.
இத்தாலியின் கொர்னபூசா அன்னைமரியா திருத்தல வரலாறுக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது. 1350ம் ஆண்டுக்கும் 1440ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மலைகள் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் Guelfi, Ghibellini ஆகிய இரு இனங்களுக்கிடையே சண்டை நடைபெற்றது. இச்சண்டையின் வன்முறைகள் மற்றும் பிற சேதங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அப்பள்ளத்தாக்கின் Cepino di Sant’Omobono Imagna என்ற குக்கிராம மக்கள் அந்த மலையிலிருந்த பெரிய பாறைக் குகையில் அதாவது கொர்னபூசாவில் அடைக்கலம் தேடினர். அவ்விடம் இருட்டாகவும், ஈரப்பசையாகவும் இருந்தது. மழை பெய்தால் அந்தக் குகையின் உட்புறத்திலும் பாதிப்பு இருக்கும். அதை இன்றும் காண முடிகின்றது. அங்கு அடைக்கலம் தேடிய அக்கிராம மக்கள் தங்களோடு சில அத்தியாவசியப் பொருள்களையும் எடுத்து வந்தனர். ஒரு வயதான மூதாட்டி ஒரு சிறிய மரத்தாலான வியாகுல அன்னைமரியா திருவுருவத்தையும் தன்னோடு எடுத்து வந்தார். அது, அன்னைமரியா இறந்த இயேசுவை தனது மடியில் வைத்திருக்கும் பியத்தா திருவுருவமாகும். கெரில்லாக்களுக்குப் பயந்து Cornabusa பாறைக் குகையில் தங்கியிருந்த அம்மக்கள் அப்பகுதியில் அமைதி திரும்பிய பின்னர் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் தாங்கள் காப்பாற்றப்பட்டதற்கு நன்றியாக அந்த Cornabusaவிலே அந்தச் சிறிய பியத்தா திருவுருவத்தை விட்டுச் சென்றனர்.
பின்னர் பல காலம் கழித்து அக்குகைக்குச் சென்ற ஒரு விவசாய வயதான பெண் துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்த இந்தச் சிறிய அன்னைமரியா திருவுருவத்தைப் பார்த்தார். அங்கேயே அதை விட்டு வைத்தார். அதேசயம் அப்பெண், சில காலத்துக்கு அடிக்கடி தனியாக அங்குச் சென்று செபித்து வந்தார். அத்திருவுருவம் பற்றி யாருக்கும் அவர் சொல்லவில்லை. ஒரு நாள் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத ஓர் இளம் கிராமப் பெண் தனது ஆடுகளை அக்குகைப் பக்கம் மேய்த்துக் கொண்டிருந்தார். விசித்திரமான அந்தக் குகையைப் பார்த்து அதில் என்ன இருக்கின்றது என்று அறியும் ஆவலில் உள்ளே சென்றார். அங்குத் துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்த இந்தச் சிறிய அன்னைமரியா திருவுருவத்தைப் பார்த்தார். அந்த இளம்பெண் பேசும் திறனையும் உடனடியாகப் பெற்றார். காதும் அவருக்குக் கேட்டது. உடனடியாக அந்தப் பெண் கிராமத்துக்குச் சென்று அந்த அன்னைமரியா திருவுருவம் பற்றிச் சொன்னார். பிறவியிலேயே வாய் பேசாத மற்றும் காது கேளாத அந்த இளம்பெண் பேசும் திறனையும் கேட்கும் திறனையும் பெற்றதைப் பார்த்து கிராமத்தினர் அதிசயித்தனர். அனைவரும் அங்குச் சென்று பார்த்தனர். அன்னைமரியாவுக்கென அவ்விடத்தில் ஒரு திருத்தலம் கட்டவும் விரும்பினர். இந்த இளம்பெண் குணமான புதுமைச் செய்தியும், அந்தச் சிறிய திருவுருவம் பற்றிய செய்தியும் அப்பகுதி முழுவதும் பரவியது. குணமான அந்த இளம்பெண்ணின் ஊரான Bedulita ஆலயத்துக்கும், பின்னர் Cepinoவுக்கும் அந்த பியத்தா அன்னைமரியா திருவுருவத்தைக் கொண்டு வருவதற்கு முதலில் எண்ணி அங்கு வைத்தனர்.
ஆனால் அந்த பியத்தா அன்னைமரியா திருவுருவம் அன்றிரவே முன்பு இருந்த கொர்னபூசாவில் இருந்ததை மக்கள் கண்டனர். பின்னர் ஆயர்கள், குருக்கள் தலைமையில் மேளம் கொட்டி ஆரவாரமாக அவ்வூர் ஆலயத்துக்குக் கொண்டுவரத் தொடங்கினர். ஆனால் மலையிலிருந்து இறங்கத் தொடங்கியவுடன் அன்னைமரியா திருவுருவத்தின் தலை திரும்பி இருந்ததை அனைவரும் கண்டனர். எனவே அன்னைமரியா தான் முன்பிருந்த இடத்துக்கே செல்ல விரும்புகிறார் என்று உணர்ந்தனர். 1510ம் ஆண்டு பிப்ரவரி 4ம் நாளன்று அந்தக் குகையில் திருப்பலி நிகழ்த்த பெர்கமோ ஆயர் அனுமதியளித்தார். இவ்வாறு கொர்னபூசா அன்னைமரியா திருத்தலம் வரலாறானது. இத்திருத்தலம், மற்ற திருத்தலங்கள் போன்று மனிதரால் கட்டப்பட்டதல்ல. இது மலையில் இயற்கையாக அமைந்த குகைத் திருத்தலமாகும். கோடை காலத்தில் திரளான மக்கள் அங்குச் செல்கின்றனர். திருவழிபாடுகளில் கலந்து கொண்டு தங்களது விசுவாசத்தை ஆழப்படுத்தி வருகின்றனர். கொர்னபூசா அன்னைமரியா திருத்தலம் பெர்கமோ மறைமாவட்டத்துக்கு முக்கியமான மரியா திருத்தலமாகும். முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பர் பெர்கமோ மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், 2014ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி புனிதராக அறிவிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.