2013-11-26 15:45:55

நிகழ்காலத்தில் வாழத் தெரிந்தவரே கிறிஸ்தவர் : திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.26,2013. கிறிஸ்தவர் என்பவர் நிகழ்காலத்தில் வாழத் தெரிந்தவர் மற்றும் தனது காலத்தை எப்படி வாழவேண்டுமென்பதை அறிந்தவர்; நம் கையில் இப்பொழுது இருக்கும் காலம் கடந்துவிடும் என்றும் இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த நேரத்துக்கு முதலாளி என்று நாம் நினைக்கலாம், ஆனால் இவ்வாறு நினைப்பது நம்மை ஏமாற்றிவிடும் என்றும் மறையுரையில் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நமது கையில் உள்ள இந்தக் காலம் நம்முடையது அல்ல, ஆனால் அது இறைவனுடையது என்றும் கூறினார்.
காலம் கடந்துபோகும் என்பதை ஏற்று புரிந்துகொள்ளவும், அதன் முடிவுக்குத் தயாரிக்கவும் செபமும் நம்பிக்கையும் உதவுகின்றன என்றும் கூறிய திருத்தந்தை, தேர்ந்துதெளிதலுடன்கூடிய செபம், நம் வாழ்வின் ஒவ்வொரு நேரத்தையும் கண்டுணர்ந்து இறைவனை நோக்கிச் செல்ல உதவும் என்றும் கூறினார்.
காலத்தின் முதலாளியாக இயேசு கிறிஸ்து மட்டுமே இருக்கிறார், அத்தகைய காலத்தை அவர்மீதான நம்பிக்கையுடன் நோக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
எல்லாக் காலங்களிலும் எப்படிக் காத்திருக்க வேண்டுமென்பது கிறிஸ்தவருக்குத் தெரியும், நாம் மெய்ஞானத்தோடு நடப்பதற்கு ஆண்டவர் நமக்கு அருளை வழங்குகிறார், இந்த மெய்ஞானத்தை செபத்திலும், தேர்ந்து தெளிவதிலும் பெறுவோம் என மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.