2013-11-26 15:54:45

உலகின் வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உலக மாநாடு கத்தோலிக்கப் பிரதிநிதிகளுக்கு அதிருப்தி


நவ.26,2013. உலகின் வெப்பநிலை மாற்றம் குறித்து ஐ.நா. உலக மாநாட்டின் முடிவுகள் அதிருப்தியளித்திருக்கும்வேளை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குத் திருஅவைத் தலைவர்கள் பொது மக்களை மேலும் ஊக்குவிக்குமாறு கத்தோலிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேட்டுள்ளனர்.
போலந்து நாட்டுத் தலைநகர் வார்சாவில் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த உலக மாநாட்டில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் ஐ.நா. உறுப்பு நாடுகள் காட்டிய மந்தநிலையைச் சுட்டிக்காட்டியுள்ளனர் இப்பிரதிநிதிகள்.
தற்போது நிலவும் கடும் சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டவேளை, இந்த உச்சி மாநாடு இந்த எதிர்பார்ப்புக்கு வெகு தூரத்தில் உள்ளது என, CIDSE என்ற Brusselsஐ மையமாகக் கொண்ட 17 கத்தோலிக்க நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறியது.
195 உறுப்பு நாடுகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், ஐ.நா. ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கும், நாடுகளின் தேசியக் கொள்கைகளுக்கும் இடையே தொடர்பில்லாமல் இருந்த்தென இக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறினர்.
2014ம் ஆண்டு டிசம்பரில் பெரு நாட்டு லீமாவில் நடைபெறும் வெப்பநிலை மாற்றம் குறித்த அடுத்த மாநாடு தொடங்கும்வரை ஒவ்வொரு மாதமும் ஒருநாள் உண்ணா நோன்பு இருப்பதற்கு CIDSE கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.