2013-11-25 15:52:25

வாழ்வின் மிகக் கடினமான சூழல்களிலும் ஆண்டவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.25,2013. வாழ்வின் மிகக் கடினமான சூழல்களிலும் ஆண்டவரிடம் நம்பிக்கை வைப்பதற்கு கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகின்றனர் என இத்திங்கள் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நெபுகத்னேசர் அரசவையில் அடிமைகளாக இருந்த மூன்று இளம் யூதர்கள் பற்றியும், ஆலயத்துக்கு வழிபடச் சென்ற ஏழைக் கைம்பெண் பற்றியும் விவரிக்கும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டுப் பகுதிகளை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, ஆண்டவரில் நம்பிக்கை வைப்பதற்கு இவர்கள் எடுத்துக்காட்டுகளாய் உள்ளனர் என்று கூறினார்.
ஏழைக் கைம்பெண், தன்னிடமிருந்த அனைத்தையும் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் போட்டார், தங்கள் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் மூன்று யூத இளைஞர்கள் ஆண்டவருக்கு விசுவாசமாக இருந்தனர், இவர்களுக்கு ஏதோ ஒன்று ஆபத்தாக இருந்தது, ஆனால் இவர்கள் தங்களின் சுய ஆதாயத்தைப் பார்க்காமல், அதை ஆண்டவருக்குச் சாதகமாகத் தேர்ந்தெடுக்கத் துணிந்தார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆண்டவர் பிரமாணிக்கமுள்ளவர் என்பதை அறிந்திருந்த அவர்கள், ஆண்டவரில் நம்பிக்கை வைத்து இவ்வாறு செய்தனர், திருஅவையிலும், திருஅவை வரலாற்றிலும் இவ்வாறு ஆண்களும் பெண்களும் வாழ்ந்து வருகின்றனர், மறைசாட்சிகள் வாழ்வு பற்றி நாம் கேட்குபோதும், அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள் பற்றி தினத்தாள்களில் இன்றும் வாசிக்கும்போதும், மிக கடினமான சூழல்களிலும் ஆண்டவருக்கு விசுவாசமாக இருந்த நம் சகோதர சகோதரிகள் பற்றி நினைக்கிறோம் எனவும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
வரலாறு முழுவதும், இன்றும் தொடர்ந்து துணிச்சலான தீர்மானம் எடுத்த மற்றும் எடுக்கும் நம் சகோதர சகோதரிகளை நினைத்துப் பார்ப்போம் எனவும் மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், நமது கிறிஸ்தவ வாழ்வை மிக கடினமான சூழல்களிலும் தினமும் வாழ்வதற்கு ஆண்டவரிடம் துணிச்சலைக் கேட்போம் எனக் கேட்டுக்கொண்டார்.
இவர்கள் போன்று, நாம் ஆண்டவருக்கென உறுதியான தீர்மானம் எடுக்கவும், மிக கடினமான சூழல்களிலும் ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்தவர்கள் போன்று நாம் வாழவும் அழைக்கப்படுகிறோம் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.